தந்தை பெரியார் பிறந்த நாளை தமிழ்நாடு சட்டப் பேரவையில் சமூகநீதி நாள் என்று அறிவித்ததுடன், தந்தை பெரியார் பிறந்த நாளன்று அரசு அலுவலகம், கல்விக் கூடங்களில் தந்தை பெரியார் குறித்த கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்ற ‘சமூக நீதி சரித்திர நாயகர்' முதலமைச்சர் தளபதியின் அறிவிப்பு தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றென்றும் உற்சாகமாகப் பேசப்படும் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை - இல்லவே இல்லை.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும்-
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்
எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!
சுயமரியாதை ஆளுமைத் திறனும்-பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!
மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!
சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!”
இந்த உறுதி மொழியில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லும் பொறுக்கி எடுக்கப்பட்ட உன்னதமான உயர் எண்ணங்கள் மலரும் அறிவுச் சோலையின் மணத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.
தந்தை பெரியாரின் முக்கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட பொதுத் தொண்டில், அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் மின்னும், ஒலிக்கும் பண்பு நலன்கள் இவை.
‘பேதமற்ற இடம் தான் மேலான திருப்தியான இடம்' என்பார் தந்தை பெரியார். அந்தப் பேதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதன் மூலத்தை நோக்கிப் போர் தொடுக்கக்கூடிய போராளி அவர்.
அரசியல் திசை அதற்குப் பயன்படாது என்று திட்டவட்டமாக அவர் அறுதியிட்டு உணர்ந்த காரணத்தால்தான், தன் வீட்டுக் கதவைத் தட்டி இரு முறை வந்து காத்திருந்த முதல் அமைச்சர் பதவிகளைத் ‘தீண்டேன்' என்று தீர்க்கமாக முடிவெடுத்த தலைவருக்குப் பெயர்தான் தந்தை பெரியார்.
அதிகார நாற்காலியில் அமர்ந்து செய்வதைவிட ஆட்சியைத் தம் சமூகநீதி கொள்கை மூலம் நடத்தும் சுக்கானாக இருப்பதே மேல் என்ற முடிவின் அடிப்படையில்தான் அவரின் பயணமும், பிரச்சாரமும் களங்களும், பணிகளும் வீதியிலே - மக்கள் மன்றத்திலே மகத்தான முறையிலே வீறு நடை போட்டன.
சட்டம் முக்கியமானது என்றாலும் திரும்பத் திரும்ப மேற்கொள்ளப்படும் அறிவார்ந்த பிரச்சாரத்தின் மூலமாகத் தான், எழுச்சியின் வழியாகத்தான் ஆண்டாண்டுகாலமாக அறியாமைக் கும், மூடநம்பிக்கைக்கும் பலியாகிக் கிடந்த மக்களின் சிந்தனைப் புரத்தைத் தட்டி எழுப்ப முடியும் என்ற உறுதியான முடிவில் - கல்லடி, சாணியடி, மலம் வீச்சு, செருப்பு வீச்சுகளுக்கு மத்தியில் தனது பகுத்தறிவுப் பிரச்சார மழையால் மக்களை மடை மாற்றம் செய்து - அவர்களின் சிந்தனையிலே இரசாயன மாற்றம் செய்வித்தவர்.
‘மாற்றம் என்பதுதான் மாறாதது' என்ற இயற்கைத் தத்துவத்தை நிறுவிக் காட்டினார்.
இந்தியாவிலேயே "திராவிட மாடல்" தமிழ்நாடு என்று பேசப்படும் அளவுக்குப் புகழப்படும் அளவுக்குப் புத்துணர்ச்சி யூட்டிய 20ஆம் நூற்றாண்டு புத்தராக ஒளி வீசுபவர் பகுத்தறிவுப் பகலவன் பெரியார்.
சமூகநீதி என்று சொல்லும்பொழுது - சமூக அநீதி எங்கெங் கெல்லாம் இறுமாப்போடு காலூன்றி அவதானித்து நிற்கிறதோ, அங்கெங்கெல்லாம் தோன்றி தனது நேரிய கொள்கையில் நிமிர்ந்து நின்று எதிர்த்து வீழ்த்தியவரின் பிறந்த நாள் என்பது "சமூக நீதி நாள்" என்பது என்னே பொருத்தம்! என்னே பொருத்தம்!!
அந்த சமூக நீதியிலே பாலியல் நீதி உண்டு, பிறப்பில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற நிலையைத் தரைமட்டமக்கும் தர்க்கம் உண்டு, முதலாளி - தொழிலாளி என்ற பேதத்தைப் பிடரியில் அடித்து வீழ்த்தும் பொதுவுடைமை உண்டு. அந்தப் பொதுவுடைமைக்கு முதல்படியான பொதுவுரிமையும் நிச்சயம் உண்டு.
‘மானமும் - அறிவும் மனிதர்க்கழகு' என்று - குறளை விட குறுகிய சொற்களால் மனிதத்துக்கு இலக்கியம் வகுத்த வளமையான சிந்தனைக்கும், தொலைநோக்குக்கும் உரித்தானவர் அல்லவா அவர்!
அதனால் தான் அந்த உறுதிமொழி வாசகத்தில் சுயமரியாதை என்ற சொல் சுயம்பிரகாசமாக ஒளிர் விடுகிறது!
தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சொல்லுவது போல மருத்துவருக்காக மருந்து சாப்பிடுவதில்லை - பெரியாருக்காக அவர்தம் கொள்கைகளை ஏற்பதாகப் பொருள் அல்ல - மானுடத்தின் அறியாமை நோயிலிருந்தும், அறியாமைப் புத்தி என்னும் ஆபாச - அழுக்கு நோயிலிருந்தும் விடுதலை பெறுவதற்கே பெரியார் தத்துவம் தேவைப்படுகிறது.
அந்த நிலையை மேலும் செழிக்க வைக்க உந்து சக்தியைக் கொடுக்கவே ‘சமூகநீதி' நாளும், உறுதி மொழியும் மிகவும் பயன்படும் என்பதில் அய்யமில்லை.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே இதுபோன்ற சிந்தனைச் செழுமைகள் தமிழ் மண்ணில் மட்டும் பூத்துக் குலுங்குகிறது என்றால் அதற்குக் காரணம் திராவிட இயக்கமே - அதன் தலைவர் பெரியாரே!
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து அதிகாரத்தை இவ்வாறு அர்த்தம் உள்ள வகையில் கொண்டு சென்ற "சமூக நீதி சரித்திர நாயகர்" மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்க்கூரும் உலகம் நன்றி மலர்களைச் சூட்டுகிறது! சூட்டுகிறது!!
வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு!
No comments:
Post a Comment