கவிஞர் கலி. பூங்குன்றன்
திராவிடர், திராவிடம் என்பது ஆரி யத்தின் அடி வயிற்றைக் கலக்கிக் கொண்டுள்ளது. இதன் தன்மையைப் பார்ப்பனர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால்தான் அந்தச் சொல்லின் வீரியத்தில் வீற்றிருக்கும் "அணுகுண்டின்" ஆபத்தைப் புரிந்து கொண்டு அலறுகிறார்கள்.
"ஆரியமா? திராவிடமா?" என்று கேட்டால் நாங்கள் ஆரியத்தின் பக்கமே என்று கூறும் எட்டப்பர்களும் வழக்கம்போல் நம் இனத்தில் தலை எடுத்துள்ளார்கள். அதை இடறித் தள்ளுவோம்!
'தினமணி' என்னும் ஏட்டில் (24.9.2021) "திராவிடம் என்பதோர் வெற்றுச் சொல்!" எனும் தலைப்பில் நடுப்பக்கக் கட்டுரை ஒன்றை திரு. ஜெயபாஸ்கரன் என்பவர் எழுதி இருக்கிறார்.
பாறாங்கல்லை விழுங்கியவன் பஞ்சு மிட்டாய் சாப்பிட்டதாகக் கூறுவதைப்போல - அண்டப் புளுகின் அப்பனாகவும் ஆகாயப் புளுகின் பாட்டனாகவும் ஒரு தகவல் இதோ:
"தமிழ்நாட்டில் 1920களில் 'தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்!' என்ற பெயரில் தீவிரம் பெற்றிருந்தது. அரசியல் இயக்கம் ஒன்று 1944ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், சேலம் மாநகரில் நடத்தப்பட்ட அவ்வியக்கத்தின் மாநாட்டுத் தீர்மானத்தில் அது 'திராவிடர் கழகம்' என்று பெயர் மாற்றம் பெற்றது.
அப்படியொரு தீர்மானம் மாநாட்டின் உணவு இடைவேளையின்போது, ஒரு சிலரால் திட்டமிடப்பட்டு, அவசர அவசரமாக முடிவு செய்யப்பட்டதென்றும், அந்தத் தீர்மானத்தை மேடையில் நின்று படித்தவருக்கே அப்போது தான் அச்செய்தி தெரியும் என்கிற அளவுக்கு, அது தந்திரமானதாக இருந்தது என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள். அரசி யல் ஆய்வாளர்கள்" இதுதான் திராவிடம் என்பதோர் வெற்றுச் சொல்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய 'வெத்து வேட்டு' குறிப்பிட்டுள்ளது.
அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்களாம். யார் அந்த அரசியல் ஆய்வாளர்கள்? குறிப்பிட ஏன் தயக்கம்? இப்படி ஆதாரமின்றி 'அத்திரிபாட்சா கொழுக்கட்டை' என்ற ரீதியில் அவாள் எழுதுவது வழமைதான்.
புகழ் பெற்ற "அண்ணா துரை தீர்மானம்" என்பது அவர்களுக்கு அவ்வளவு அலட்சியமாகப் போய் விட் டது. அந்தத் தீர்மானம் தந்தை பெரியாரிடம் அண்ணா அவர்கள் மாநாட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே தங்கி தந்தை பெரியாராலும் தீட்டப்பட்ட ஒன்று.
இரு நாள் நடைபெற்ற சேலம் மாநாட்டில் தீர்மானங்கள் விஷயாலோசனைக் கூட்டத்தி லும் விவாதிக்கப்பட்டன என்ற வரலாறு எல்லாம் தெரியாமல், இடைவேளை நேரத்தில் அவசரகதியில் நிறை வேற்றப்பட்டதாக எழுதுவது எல்லாம் அசல் போக்கிரித்தனம் அல்லவா?
அக்கிரகாரப் பேர்வழி களின் எடை மேடையின் கண்ணோட் டத்தில் அண்ணா அவர்கள்கூட சாதாரணமானவர்தானோ? பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட ஒரு மாநாட்டில் அவசர அவசரமாக உணவு இடைவேளையின் போது நிறை வேற்றப்பட்டது என்றும், தீர்மானத்தைப் படித்தவருக்கே அப்போதுதான் அந்த செய்தி தெரியும் என்றும் எழுதுகிற அளவுக்குச் செல்லுகிறார்கள் என்றால், இவர்கள் வேறு எதைத்தான் திரித்து எழுதத் தயங்குவார்கள்?
அண்ணா என்றாலே 'தினமணி' வட்டாரத்துக்கு ஒவ்வாமை எப்போதுமே உண்டு.
"முடிவை மாற்றுங்கள்" என்பது தினமணியின் தலையங்கம் (6.5.2020) அதில் ஆச்சாரியர் பெயர் வரும் போதெல்லாம் ராஜாஜி ராஜாஜி ராஜாஜி என்று மூன்று முறை குறிப்பிட்டு ஆராதனை! ஆனால் அதே தலையங்கத்தில் அண்ணா என்று எழுதிட மனம் வரவில்லை; அண்ணாதுரை - எம்.ஜி.ஆரைக் குறிப்பிடும் இடங்களிலோ எம்.ஜி.இராமச்சந்திரன்.
இதற்குப் பெயர்தான் ஆரியம் - திராவிடம் வேறுபாடு என்பது.
"எது எப்படி இருப்பினும் 'திராவிடம்', 'திராவிடர்', 'திராவிட நாடு' ஆகியவை எல்லாம் குழப்பத்திலும் சிக்கலிலும், பாதுகாப்பு உணர்விலும் தமிழுக்கும், தமிழர் களுக்கும் எதிரான ஏதோவோர் உள்ளுணர்விலும் கண்டறி யப்பட்ட வெற்று வாளாகவும் போலிக் கேடயமாகவும் வடிவமைக்கப்பட்டு, தமிழ் நாட்டில் அரசியலில் இன்றளவும் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு இருப்பதை எவராலும் மறுக்க முடியாது"
இப்படியாக தன் முதுகைத்தானே தட்டிக் கொள்வதுடன் அவரே நான்கு வரிகளை கிறுக்கி விட்டு, எவராலும் மறுக்க முடியாது என்று கித்தாப்பு வேறு!
'தினமணி'யின் இந்தக் கூற்றுக்குத் 'தினமணியைக் கொண்டே சூடு கொடுத்து விடலாம். இதோ 'தினமணி':
"தமிழ் உள்ளிட்ட 82 மொழிகளை உள்ளடங்கிய திராவிட மொழிக் குடும்பம் 4500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தமிழ்தான் மிகப் பழைமையான மொழி என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் போல சிதைந்து அழியாமல், தமிழ்மொழி தொடர்ந்து செழுமையோடு பயன்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது." ('தினமணி' 22.3.2018).
'தினமணியே' தினமணியே! திரா விடம் என்பது வெற்றுச் சொல் என்று இப்பொழுது எழுதியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டாம் - கருத்தை மாற்றிக் கொள்கிறோம் என்று கண்ணியத்தை எதிர்பார்க்கலாமா?
திராவிடம், திராவிடர் என்பதெல்லாம் தந்தை பெரியாரால் புதிதாகக் கற்பிக் கப்பட்டதில்லை. அதற்கென்று வர லாற்று ஆவணங்கள் வலிமையாக வளமையாகவே உண்டு.
மறுபடியும் 'தினமணிக்கே' வரு வோம். 'தினமணி'யின் ஆசிரியர் திரு. அய்ராவதம் மகாதேவன் "சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம்!" என்று அறுதியிட்டுச் சொன்னது வெற்றுச் சொல்தானா!
மேனாள் 'தினமணி' ஆசிரியர் அய்ராவதம் மகாதேவன்மீது இன்றைய 'தினமணி' ஆசிரியர் திருவாளர் வைத் தியநாதய்யருக்கு என்ன வஞ்சினமோ யாம் அறியோம்.
வரலாற்று ஆசிரியர்கள் என்ன சொல்லுகிறார்கள்?
“திராவிடர்களை ஆரியர்கள் வென்று விட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதிவைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரீ கங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்”.
இது ஷோஷி சந்தர்டட் எழுதிய “இந்தியா அன்றும் இன்றும்” என்னும் புத்தகத்தின் 15-ஆவது பக்கத்தில் இருக் கிறது.
"ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப் பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவி டர்கள் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட் டிருக்கிறார்கள்”.
“ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்".
(இது சி.எஸ், சீனிவாச்சாரி எம்.ஏ., & எம்.எஸ். ராமசாமி அய்யங்கார் எம்.ஏ., ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய “இந்திய சரித்திரம் முதல் பாகம்” என்னும் புத்தகத்தில் “இந்து இந்தியா” என்னும் தலைப்பில் 16, 17-ஆவது பக்கங்கள்)
"ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக்கண்டு அவர்களிடமி ருந்து பல நாகரீகங்களைக் கற்றுக் கொண் டார்கள்”.
இது எச்.ஜி. வெல்ஸ் எழுதிய “உலகத் தின் சிறு சரித்திரம்” என்னும் புத்தகத்தின் 105-ஆவது பக்கம்.
"தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசும் பாஷை”.
(சர்-ஜேம்ஸ்மர்ரே எழுதிய அகராதி யின் பக்கம் 67)
“தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லா தார்களையே - குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி ". வைக்கப்பட்டிருக்கிறது”.
- இது ரோமேஷ் சந்திரடட் C.I.E.I.C.S எழுதிய “புராதன இந்தியா” என்னும் புத்த கத்தில் 52-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
“திராவிடர்கள் தங்கள்மீது படையெ டுத்து வந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்தது, இந்த விஷயம் ரிக் வேதத்திலிருந்து அநேக சுலோகங்களாக இருக்கின்றன."
இது டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் எம். ஏ., யின் “பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரீகமும்” என்னும் புத்த கத்தின் 22-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
“ராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திரா விடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்திரித்துக் காட்டுவதாகும்”.
(பி. சிதம்பரம்பிள்ளையின் 'திராவி டரும் - ஆரியரும்' பக்கம் 24)
ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபோது பல புதிய பிரச்சினைகள் கிளம்பின. இனத்தாலும், அரசியலாலும் மாறுபட்ட திராவிடர்கள் ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்டனர். திராவிடர்கள் நீண்டகால நாகரிகத்துடன் வாழ்ந்து வந்த படியால், இவர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் இடையே விரிந்த பெரிய பிளவு ஏற்படட்து.
(ஜவகர்லால் நேருவின் Discovery of India பக்கம் 82)
இவர்கள் எல்லாம் வரலாற்று ஆசிரி யர்களே இல்லை என்று விதண்டாவாதம் பேசப் போகிறார்களா?
(காலப் பிழையோடு, இவர்களும் ஈ.வெ.ரா. பேச்சைக் கேட்டுக் குட்டிச்சுவர் ஆனவர்கள் என்கிற அளவுக்குப் போனா லும் போவார்கள் - புகைக்க புகைக்கப் புனை சுருட்டு ஊதுவதில் இந்த உஞ்சி விருத்திகளுக்கு இணை வேறு எவர்?)
இப்பொழுது 'தினமணி'கள் அடுத்த கட்டத்துக்கு வந்தாக வேண்டும்.
மனு தர்மத்தை திராவிடர் கழகம் கொளுத்தியதுண்டு - இப்பொழுது அதே வேலையை சிண்டைத் தட்டிக் கொண்டு செய்தாலும் செய்வார்கள்.
இதோ மனுதர்மம் பேசுகிறது:
மனுதர்மம் 10ஆவது அத்தியாயம் 22 மற்றம் 44 ஆவது சுலோகங்களில் திராவிடம் என்ற சொல் உள்ளது.
விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரிய ஸ்த்ரீயினடத்தில் சல்லன் பிறக்கிறான். அவனுக்கு மல்லன், நிச்சு விநடன், கரணன், கஸன், திராவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெய ருண்டு. (அத்தியாயம் 10; ஸ்லோகம் 22)
பௌண்டரம், ஔண்டரம், திரா விடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், சீகம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களையாண்டவர்களைவரும் மேற் சொன்னபடி சூத்திரர்களாய் விட்டார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 44).
சிறீமத் பாகவதம் வேதவியாசம் எழுதி, வேணுகோபாலாச்சாரி தமிழில் மொழிபெயர்த்து, பாகவதம் பக்கம் 404இல் திராவிடம் குறிப்பிடப்பட்டுள்ளது.
'தினமணி' திருவாளர்கள் மனுதர்மத் தையும் சிறீமத் பாகவத்தையும் என்ன செய்யப் போவதாக உத்தேசம்?
தனக்குத்தானே கோலடிப்பது (Self Side Goal) என்பார்கள். அதனையும் திருவாளர் ஜெயபாஸ்கர் சாங்கோ பாங்கமாக செய்து முடித்து விட்டார். உண்மையைச் சொன்னால் அதில் முரண்பாடு கதவு திறக்க வாய்ப்பு இல்லை; பொய்யென்று தெரிந்திருந்தும் ஓரிடத்தில் சொன்னால் கடைசி வரை அதைக் காப்பாற்றுவது முயற்கொம்பே!
ராபர்ட் கால்டுவெல்லில் ஆரம்பித்து மனோன்மணியம் சுந்தரனாரை உள்ளுக் குள்அழைத்து தேசிய கீதம் பாடல் எழுதிய நோபால் கவிஞர் இரவீந்திரநாத்தையும் துணைக்கழைத்து, "திராவிடம்" எனும் நியாயத்துக்கு உண்மை வரலாற்றுக்கு முடிசூட்டு விழாவினையும் நடத்தி தனது திராவிடத்துக்கு எதிரான கருத்துக்கு முடிவுரை எழுதித் தீர்த்து விட்டாரே! நமது ஆழ்ந்த இரங்கல்!
திராவிடத்தின் உண்மையை உறுதி செய்து கொள்ள வாக்கெடுப்பு நடத்தலாம் என்று இலவசமாக ஆலோசனை கூறுகிறது 'தினமணி!'. தினமணியேகூட நடத்தலாமே! அப்படியே ராமன் கோயில் கட்டுவது, இந்து ராஜ்ஜியம், பூணூல் அணிவது, சங்கராச்சாரியார் கூறும் தீண்டாமை க்ஷேமகரமானது, உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு (EWS) இவற்றுக்கெல்லாம்கூட வாக்கெடுப்பு நடத்துங்கள் வரவேற்கிறோம்.
திராவிடர் இயக்கம் தோற்றுவிக்கப் படுவதற்கு முன்பே "ஆதி திராவிட ஜனசபை"யை (1892) அயோத்திதாசர் தோற்றுவிக்கவில்லையா? இரட்டைமலை சீனிவாசன் "திராவிட மகாஜன சபையை" உண்டாக்கவில்லையா? (1894).
அதே இரட்டைமலை சீனிவாசன் 1906இல் தம்மால் தொடங்கப்பட்ட இதழுக்கு "ஒரு பைசா தமிழன்" என்று பெயர் சூட்டினார். இது முரண்பாடல்ல - இரண்டும் ஒரு பொருளைக் குறிக்கின்றன என்பதுதானே இதன் பொருள்.
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற பார்ப்பனர் அல்லாதார் இயக்கம்தான் திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றது.
1910 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பற்றி அயோத்திதாசர் வெளியிட்ட அறிக்கை என்ன கூறுகிறது?
"இத்தேச பூர்வ சரித்திரங்கள் ஆதாரங்களை சொல்லும் இத்தேசப் பூர்வ சரித்திரங்களைக் கொண்டும் பூர்வக் குடிகளை ஜாதி பேதமுள்ள இந்துக்களினின்று பிரித்து, ஜாதி பேதமற்ற திராவிடர்கள் என்றே எழுதும்படியான உத்தரவளிக்க வேண்டுகிறோம்" என்று கூறிடவில்லையா? ("அயோத்தியதாசர் சிந்தனைகள்" - தொகுதி 1 பக்கம் 367-368)
திராவிட நாகரிகம் குறித்து மறை மலை அடிகளார் சென்னையில் சொற் பொழிவாற்றவில்லையா? (1913)
டாக்டர் நடேசனார் திராவிட சங்க விடுதியை தோற்றுவித்ததும் (1913) திரா விடர் இல்லம் என்ற விடுதியையும் தோற்றுவித்தது எதற்காக? (1916)
கல்லூரிகளில் படிக்க வேண்டும் என் றால் சென்னைக்கு வர வேண்டும்; வசதி வாய்ப்புள்ள பார்ப்பனர் அல் லாத மாணவர்கள்கூடத் தங்கிப் படிக்க வசதியில்லை. பெரும்பாலும் பார்ப்பனர் களால் நடத்தப்படும் உணவு விடுதிகளில் 'சூத்திரர்கள்' 'பஞ்சமர்கள்' என்று கருதப் பட்டவர்கள் எடுப்பு சாப்பாடு முறையில் உணவருந்த முடியுமே தவிர, உள்ளே அமர்ந்து சாப்பிட முடியாது; இந்த நிலையில் டாக்டர் நடேசனாரின் திராவிட விடுதி இல்லம் (சென்னை திருவல்லிக்கேணி) எத்தகைய தாக்கத்தை உண்டாக்கியது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா?)
சென்னை நகர ஓட்டல்களில் பஞ்சமர்களும், நாய்களும், பெரு நோய்க் காரர்களும் நுழையக் கூடாது!" (குடிஅரசு 3.5.1936) என்ற அறிவிப்புப் பலகைகள் இருந்தன என்பது எதைக் காட்டுகிறது?
டாக்டர் நடேசனாரின் 'திராவிட விடுதி இல்லம்' என்ற விடுதியில் தங்கிப் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் யார் யார் தெரியுமா?
இரயில்வே நிலையங்களில் பிராம ணர்கள், இதராள் சாப்பிடும் இடம் இருந் ததும், அது தந்தை பெரியாரின் எதிர்ப்புக் குரலால் டாக்டர் ஏ. இராமசாமி முதலியார் இரயில்வே போர்டு உறுப்பினராக இருந்த போது ஒழிக்கப்பட்டதெல்லாம் தெரியுமா?
ஆர்.கே. சண்முகம் (பிற்காலத்தில் ஒன்றிய நிதி அமைச்சர், பாரிஸ்டர் ரெங்கராமானுஜநாயுடு, டி.எம். நாரா யணசாமி, எஸ்.ஜி. மணவாளராமா னுக்கு (பிற்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள்) சுப்பிரமணிய நாடார் (பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி) சடகோப முதலியார் (பிற்காலத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்). இவர்களுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்தது திராவிடர் இல்லம்.
திராவிடன் என்பது ஒரு கோட் பாட்டுத் தத்துவம் என்பது இன்னும் புரியவில்லையா? இல்லை புரியாதது போல வேடம் கட்டிஆட்டமா?
அறிஞர் அண்ணா அவர்கள் மாநிலங் களவை உறுப்பினராக சென்றபோது தனது கன்னிப் பேச்சில் "I belong to Dravidian Stock" என்று சொன்னதும், அதையே சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்து வேல் கருணாநிதி அவர்களும் தற்போது முழங்கியதும் கூடவா தெரியாது.
நாடாளுமன்றத்தில் பதவிப் பிர மாணம் எடுத்த தமிழ்நாடு உறுப்பினர்கள் "பெரியார் வாழ்க!" "திராவிடம் வெல்க!" என்று முழக்கமிடவில்லையா?
இந்த உணர்வுகளின் அதிர்வு அலைகளால் தாக்கப்பட்ட பார்ப்பனர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர். அதன் ஆத்திர ஓசைதான், ஆற்றாமையின் கூக்குரல் தான் தந்தை பெரியார் பற்றியும், திராவிடம் பற்றியும், தினமணி வகையறாக்களின் வெளிப்பாடு!
திராவிடம் வெல்லும் - நாளை வரலாறு அதனைச் சொல்லும்!
வாழ்க பெரியார்!
வெல்க திராவிடம்!
No comments:
Post a Comment