பெண்களுக்கு சொத்துரிமை சட்டத்தைக் கொண்டுவர அண்ணல் அம்பேத்கர் முயற்சி செய்தார் - அவரை பதவி விலகும்படி செய்தது ஆரியம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 2, 2021

பெண்களுக்கு சொத்துரிமை சட்டத்தைக் கொண்டுவர அண்ணல் அம்பேத்கர் முயற்சி செய்தார் - அவரை பதவி விலகும்படி செய்தது ஆரியம்!

தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத்தை கொண்டு வந்தார் கலைஞர் ‘‘மகளிர் உரிமை காத்த ஆட்சி மாண்பாளர்'' என்று பட்டம் வழங்கி பாராட்டியது தாய்க்கழகம்!

அமெரிக்க தி.மு.. சார்பில் நடைபெற்ற  மெய்யிணைக் கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை,செப்.2   சட்ட  அமைச்சராக இருந்த பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் பெண்களுக்கு சொத்துரிமை சட்டத்திற்கு முயற்சி செய்தார்; அவரை பதவி விலகும்படி நெருக்கடி கொடுத்துவிட்டார்கள். திராவிடத்தினுடைய அடித்தளம் எப்படிப்பட்டது என்பதற்கு அடையாளமாக தமிழ்நாட்டில் முத்தமி ழறிஞர் கலைஞர் தனியே சட்டமியற்றினார் - பெண் களுக்குச் சொத்துரிமை உண்டு என்று! தாய்க்கழகமான திராவிடர் கழகம் அவரைப் பாராட்டியது - ‘‘மகளிர் உரிமை காத்த ஆட்சி மாண்பாளர்'' என்று - என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘கலைஞரின் சாதனைகளும்நமது கடமைகளும்!''

கடந்த 8.8.2021 அன்று மாலை அமெரிக்க தி.மு..வின் மெய்யிணைக் கலந்துரையாடல் காணொலி கூட்டத்தில், ‘‘கலைஞரின் சாதனைகளும், நமது கடமைகளும்'' என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

உள்ளத்தில் இன்பம் துள்ளும் நாள்!

இப்படி வரிசையாக சொல்லக்கூடிய நிலையில்,

கலைஞர் எழுதுகிறார்,

‘‘சமுதாயத்தின் அடித்தளத்தில் கிடக்கின்ற மக்களுக்கு மனங்குளிரத்தக்க வண்ணம் ஒவ்வொரு நாளும், அரசின் சார்பில் ஏதாவது செய்துகொண்டே இருக்கவேண்டும். அப்படி செயல்படுகிற நாளெல்லாம் உள்ளத்தில் இன்பம் துள்ளும் நாளாகவே இருந் திருக்கிறது.

ஒரு ஆட்சியில் இருக்கக்கூடியவர்களுக்கு எது பணியாக இருக்கவேண்டும் என்பதற்கு ஓர் இலக்கணம். கலைஞர் வகுத்த ஆளுமை இலக்கணம் இது.

ஒவ்வொரு நாளும் ஆட்சி யாருக்கு செய்ய வேண்டும்? கார்ப்பரேட்டுகளுக்கா? அம்பானிகளுக்கா? அதானிகளுக்கா? மேல்தட்டு வர்க்கத்தில் இருக்கக் கூடியவர்களுக்கா? உப்பரிகையிலே உலவக்கூடியவர் களுக்கா?

சமுதாயத்தின் அடித்தளத்தில் கிடக்கின்ற மக்களுக்கு மனங்குளிரத்தக்க வண்ணம் ஒவ்வொரு நாளும், அர சின் சார்பில் ஏதாவது செய்துகொண்டே இருக்கவேண் டும். அப்படி செயல்படுகிற நாளெல்லாம் உள்ளத்தில் இன்பம் துள்ளும் நாளாகவே இருந்திருக்கிறது.''

மேலும் தொடர்கிறார் கலைஞர்,

‘‘நீண்ட நேரம் நான் யோசித்தேன். வெளிநாடுகளைப் போல, அற்புத விஞ்ஞான முன்னேற்றங்கள் தமிழ்நாட் டிற்கு வரவேண்டும்  என்ற ஆசை இருந்தாலும், அதற்கு நீண்ட காலம் பிடிப்பதைப்பற்றிக் கூட எனக்குக் கவலையில்லை.

எங்கள் நோக்கமெல்லாம் இங்குள்ள சாதாரண மக்களை, மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் வாழச் செய்யவேண்டும் என்பதுதான் என்று குறிப்பிட்டேன்.''

ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையாளர் கேட்ட, உங்கள் ஆட்சிக்கு என்ன குறிக்கோள் என்ற கேள்விக்கு கலைஞர் இவ்வாறு பதில் சொல்கிறார்.

பத்திரிகையாளர்களின் மத்தியில்,

அண்ணாவிடம் கலைஞர் கற்றுக்கொண்ட பயிற்சிக் களம்!

பெரிய பட்டதாரியல்ல  - பெரிய அரசியல் வியூகங் கள் அல்ல - பெரிய பெரிய அரசியல் பட்டங்களை வாங்கவில்லை. ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி, ஈரோட்டு குருகுல வாசம் - அவற்றையெல்லாம் தாண்டி, அண்ணாவிடம் அவர்கள் கற்றுக்கொண்ட பயிற்சிக் களம். இவை கலைஞரை மேலும் எப்படி பக்குவப் படுத்தியிருக்கிறது. இவற்றையெல்லாம் வரித்துக் கொண்ட காரணத்தினால்தான், இன்றைக்கு எதிரிகள் எவ்வளவுதான் முட்டினாலும் இந்தக் கற்கோட்டையை அசைக்க முடியாது; வெற்றி மேல் வெற்றிதான் கிடைக்கும்.

கலைஞர் அவர்கள் மறைந்தபொழுது, இங்கே இருக்கின்ற சில உளறுவாயர்கள் என்ன சொன்னார்கள்?

வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்று.

சிலருக்கு நப்பாசை - குதிரைப் பந்தயத்தில் சில பொய்க்கால் குதிரைகளை வைத்து ஒடலாம் என்று நினைத்தார்கள்; சிலர் ஜட்கா குதிரைகள்மீதுகூட பந்தயம் கட்டி மகிழலாம் என்று நினைத்தார்கள்.

ஆனால், இந்த ரேஸ் குதிரைமீது அவர்கள் கட்டி வெற்றி பெற முடியுமா? முடியாது என்பதை உணர்ந்து பாதியிலேயே ஒதுங்கிக் கொண்டவர்களும் இருக்கி றார்கள்; ஒதுக்கப்படக் கூடிய நிலைக்கு வருவதற்கு முன்னரே, தாங்களே ஒதுங்கிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

திராவிடம் வெல்லும்நாளைய வரலாறு இதை சொல்லும்!

அன்றைக்கே நாம் சொன்னோம்,

திராவிடம் வெல்லும் - நாளைய வரலாறு இதை சொல்லும் என்பதை எடுத்துக்காட்டக் கூடிய அளவிற்கு.

கலைஞர் அவர்கள் செய்தியாளர்களுக்கு சொல் கின்ற பதில்களை வைத்தே ஒரு நாள் முழுவதும் பேசிக் கொண்டிருக்கலாம்.

இங்கே நண்பர்கள் சொன்னதைப்போல, எவ்வ ளவோ செய்திகள் உண்டு. அவருடைய 80 ஆண்டுகால பொதுவாழ்க்கையில், 70 ஆண்டுகால நட்பு எங்களைப் போன்றவர்களுக்கு.

அவரை முதலமைச்சராக மட்டுமே சிலர் பார்த் திருப்பார்கள் -

அவரை திரைப்பட வசனகர்த்தாவாக மட்டுமே சிலர் வரித்துக் கொண்டிருப்பார்கள்.

சுமையாக இருந்ததில்லை -சுவையாகசுகமாகவே இருந்திருக்கின்றன

ஈரோட்டு குருகுல மாணவப் பருவத்திலிருந்து நாங்கள் ஒன்றாக, கட்டை வண்டியில் பயணம்; ஈரோட்டில் சைக்கிளில் அவர் மிதிக்க,  நான் அமர்ந்து செல்லக்கூடிய பயணம். இப்படியெல்லாம் எங்களுடைய பயணங்கள் கடுமையான பயணங்களாக இருந்தாலும், அந்தப் பயணங்கள் ஒருபோதும் வாழ்வில் சுமையாக இருந்ததில்லை. சுவையாகவே இருந்திருக்கின்றன. சுகமாகவே இருந்திருக்கின்றன.

ஏனென்றால், இந்த லட்சியத்தில் அடைகின்ற வெற்றி இருக்கின்றதே, அது எதைப் போன்றது என்றால், ஒரு போர்வீரன் அடைகின்ற வெற்றியால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவானோ அதுபோன்றதுதான். அவனுக்கு விழுப்புண்ணைப்பற்றி கவலையில்லை; அடக்கு முறைகளைப்பற்றி கவலையில்லை.

எத்தனைச் சிறைச்சாலைகள்?

எத்தனை தோல்விகள்?

எத்தனை அவமானங்கள்?

எவ்வளவு எதிர்நீச்சல்கள்?

ஒருமுறை கலைஞர் அவர்களுடைய கடித வெளி யீட்டு விழா நிகழ்ச்சியில் நான் உரையாற்றும்பொழுது சொன்னேன்; அப்பொழுது அவர் முதலமைச்சராக இருந்தார்.

எதிர்ப்பிலேதான் முழுக் கலைஞரை நீங்கள் பார்க்க முடியும்

நான் சொன்னேன், ‘‘முதலமைச்சர் கலைஞரில், நீங்கள் முழு கலைஞரை பார்க்க முடியாது. முழுக் கலை ஞரை நீங்கள் பார்க்கவேண்டுமானால், எதிர்க்கட்சியில் இருக்கும்பொழுது, எதிர்ப்பிலேதான் முழுக் கலைஞரை நீங்கள் பார்க்க முடியும்'' என்றேன்.

அவருடைய எதிர்ப்புத்தன்மை என்பது சாதாரண மானதல்ல. அதற்கு வியூகங்கள் - நகைச்சுவை உணர் வோடு அதை எடுத்துச் சொல்லும்பொழுது மிக ஆழமாக இருக்கும். காரணம், பட்டுக்கோட்டை அழகிரி என்ற அஞ்சாநெஞ்சன் அவர்களுடைய உரை கேட்டு பக்குவமானவர்.

அண்ணன் அழகிரி என்று அவர்கள் அழகாக எடுத்துச் சொல்வார்.

‘‘ஈட்டி எட்டியவரை பாயும்; பணம் பாதாளம் வரையில் பாயும். பெரியார் கொள்கை இருக்கிறதே, அது அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையும் பாய்ந்து, அதற்கப்பாலும் பாயும்'' என்று மேடையில் அழகிரி முழங்கியதைக் கேட்டு, இளைஞனாக இருந்து  ஈர்த்துக் கொண்டு வரப்பட்டவர் கலைஞர் அவர்கள்.

அந்த வகையிலேதான், ஒவ்வொரு முயற்சியை எடுத்தாலும், அந்த முயற்சியை -

செய்வதைத் திருந்தச் செய்!

கடுமையாக உழை!

எதிர்த்துப் போராடு!

தைரியமாக இரு!

கடைசிவரையில் நில்!

என்ற அந்த உணர்ச்சி, எதிர்நீச்சல் அடித்துக் கொண் டிருக்கின்ற வாய்ப்புகள் அத்தனையும் இருக்கவேண்டும்.

திராவிட மாடலுடைய வளர்ச்சி

குலதர்மக் கல்வியை கல்வி வள்ளல் காமராஜர் ஒழித்ததினுடைய விளைவுதானே, கல்வி வளர்ச்சி. திராவிட மாடலுடைய வளர்ச்சி அதுதானே!

எல்லாவற்றிற்கும் ஓர் அஸ்திவாரம் உண்டு.

சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவக் கல்லூரிக்கு மனு போடலாம் என்பதை பனகல் அரசர், நீதிக்கட்சி ஆட்சியில் அகற்றியதினுடைய விளைவுதானே இன்றைக்கு ஏற்பட்டுள்ள விளைச்சல்கள்.

அன்றைக்கு இரண்டு, மூன்று மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. ஆனால், இன்றைக்குத் தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி என்று வந்து, அந்த அடிக்கட்டுமானம் வளருவதற்கு திராவிட மாடல் எடுத்துக்காட்டாக இருக்கிறது என்று ஆய்வாளர்கள் பாராட்டி, நூல்களை எழுதுகிறார்களே!

நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென் போன்றவர்கள், ஜீன் ட்ரெஸ் போன்ற ஆய்வாளர்கள், இன்னும் மற்ற ஆய்வறிஞர்கள் சொல்கிறார்களே!

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பவர்களின் அற்பத்தனம்!

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்கின்றவர் களின் அற்பத்தனம் எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்ளவேண்டாமா?

எனவேதான், மிக ஆழமாக கலைஞர் அவர்கள் ஒவ்வொரு முறையும் நகைச்சுவையோடு பல கருத்து களைச் சொல்வார்கள். சாதனைகளை செய்கின்ற நேரத்தில், வருகின்ற எதிர்ப்பையும் சமாளிப்பாளர்.

எனக்குக் களைப்பு ஏற்படுகின்ற அளவிற்கு நிறைய பணிகள் - அதிலிருந்து நான் இளைப்பாறுவது என்பதற்காகத்தான் எழுத்துகள் என்று சொன்னார். எழுத்துகள் எனக்குக் கைகொடுக்கின்றன!

‘‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே'' என்று அவர் எழுதுகின்ற நேரத்தில், அதைப் படித்துவிட்டு, அவருடைய எழுத்தைப் பார்க்கின்ற தோழர்களுக்கு ஓர் பூரிப்பு!

ஓய்வுபற்றி தந்தை பெரியாரின் விளக்கம்!

பெரியார் சொன்னார், ஓய்வு என்பது என்னைப் பொறுத்தவரையில் தனியாக உட்கார்ந்து கொண் டிருப்பது அல்ல; ஒரு பணியிலேயிருந்து இன்னொரு பணியை வேகமாகச் செய்தாலே, அதுவே ஓய்வு தான் என்று தெளிவாக எடுத்துச் சொன்னார்.

ஆட்சியை அடையத்தான் அரசியல்வாதிகள் விரும் புவார்கள்; அவர்கள் சாதாரண அரசியல்வாதிகள். ஆனால், அண்ணாவும், கலைஞரும் அப்படிப்பட்ட வர்கள் அல்ல; திராவிட இயக்கத்தில் வந்தவர்கள்.

அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைப்பற்றித்தான் கவலைப்படுவார்கள்; ஆனால், ராஜதந்திரியாக, மக்கள் நலம் பார்க்கக்கூடியவர்கள், மதியூகம் உள்ளவர்கள், சாதுரியம் உள்ளவர்கள் அடுத்த தலைமுறையைப்பற்றிப் பார்க்கிறார்கள்.

தலைமுறையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் தந்தை பெரியார்.

தலைமுறையை மாற்றவேண்டும் என்பதற்காகத்தான் திராவிட இயக்கம்.

சுரண்டுகிறவர்களும் இருக்கக்கூடாது; சுரண்டப்படுகிறவர்களும் இருக்கக்கூடாது

தலைமுறையை மாற்றி வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். அது ஒருபோதும் பஞ்சமத் தலைமுறையாக இருக்கக்கூடாது; சூத்திரத் தலைமுறையாக இருக்கக் கூடாது; உழைத்தும், சுரண்டப்படுகின்ற அந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்களாக இருக்கக் கூடாது.

சுரண்டுகிறவர்களும் இருக்கக்கூடாது; சுரண்டப்படு கிறவர்களும் இருக்கக்கூடாது; அடிமையும் இருக்கக் கூடாது; ஆதிக்கவாதியும் இருக்கக்கூடாது; மேல் ஜாதிக்காரனும் இருக்கக்கூடாது; கீழ்ஜாதிக்காரனும் இருக்கக்கூடாது என்பதற்கான  அந்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளக்கூடிய அளவிற்கு வந்திருக் கிறார்கள் என்று சொன்னால், இந்த இயக்கத்தைத் தவிர வேறு எந்த இயக்கத்தை வரலாற்றில் நீங்கள் காட்ட முடியும்?

அதைச் செய்வதற்கு தளகர்த்தர்கள்; படை பலம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? என்று சொல் லக் கூடிய அளவிற்கு, கட்டுப்பாடோடு இருக்கக்கூடிய ஒரு தலைமை.

ஒரு தத்துவம், அதன் லட்சியம்; லட்சியத்தில் கொள் கைத் தெளிவு. அதைச் செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்த பயிற்சி. பயிற்சிக் களத்தில் நிற்கக்கூடிய தெம்பும், வீரமும். இவை அத்தனையும் அமைந்து அதன் மொத்த உருவமாக அடுத்தடுத்து உருவாக்கப் படுகிறார்கள்.

வெற்றிடம் அல்ல - கற்றிடம்!

வெற்றிடம் என்று சொன்னார்களே - வெற்றிடமா? இல்லை, இன்றைக்குத் தமிழ்நாட்டைப் பார்த்து மற்றவர்கள் கற்றிடம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, கற்றுக்கொண்டு போகவேண்டியதுதான் திராவிட மாடல். கற்றுக்கொண்டு போகவேண்டியதுதான் மாநில சுயாட்சி. கற்றுக்கொண்டு போகவேண்டியதுதான் சமூகநீதி.

பெரியாருடைய உழைப்பில் முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் இந்தியாவிற்கே!

அதேபோன்று, 69 சதவிகித இட ஒதுக்கீடு - தமிழ் நாட்டிற்கு அதனுடைய பலன் இட ஒதுக்கீடு.

நாம் வழக்கு மன்றத்தில் வாதாடி, சமுதாய மன்றத் திலே வாதாடி பெற்ற வெற்றி அது.

130 கோடி மக்களில், 80 கோடி மக்கள் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள். அதில் சரிபகுதி பெண்கள். மீதியுள்ள மக்கள் பழங்குடியின மக்கள், தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள்.

செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டுத் தீர்மானம்!

செங்கல்பட்டில் 1929 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாடு. அப்பொழுது கலைஞர் அவர்கள் 5 வயது குழந்தை.

1929 இல் தீர்மானம்; கலைஞர் அவர்கள் 1969 இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார். அப்படி பொறுப்பிற்கு வந்த நேரத்தில், 1929 இல் போடப்பட்ட தீர்மானமாகிய ஆண்களைப் போலவே பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்கவேண்டும் என்ற தீர்மானம்.

ஆஸ்திக்கு ஆணாம்ஆசைக்குப் பெண்ணாம்!

நம் நாட்டில் உள்ள கொடுமை என்னவென்றால், ஆசைக்கு ஒரு பெண்; ஆஸ்திக்கு ஒரு ஆண். எவ்வளவு தவறான கருத்து.

ஆசைக்கு மட்டும் இவனுக்குப் பெண் வேண்டுமாம்; சொத்துக்கு ஆணா?

எவ்வளவு பெரிய சமூக அநீதி இது.

சுயமரியாதைத் தத்துவத்தில் ஆணுக்கும், பெண் ணுக்கும் சமத்துவம் இருக்கவேண்டும்; சொத்துரிமை யிலும் அப்படித்தான். கல்வியிலும் அப்படித்தான்.

கலைஞர் அவர்கள் 5 வயது இளைஞராக இருந்து, 15 வயதில் இயக்கத்தில் சேர்ந்து, 40 ஆண்டுகள் கழித்து முதலமைச்சராகப் பொறுப்பேற்கின்ற நேரத்தில், பெண் களுக்குச் சொத்துரிமை சட்டத்தை நிறைவேற்றுகிறார்.

சட்ட  அமைச்சராக இருந்த அம்பேத்கர் முயற்சி செய்தார்; அவரை பதவி விலகும்படி நெருக்கடி கொடுத்துவிட்டார்கள்.

தாய்க்கழகமான திராவிடர் கழகம் பாராட்டியது!

ஆனால், இங்கே திராவிடத்தினுடைய அடித்தளம் எப்படிப்பட்டது என்பதற்கு அடையாளமாக தனியே சட்டமியற்றினார் - பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்று.

தாய்க்கழகமான திராவிடர் கழகம் அவரைப் பாராட் டியது- ‘‘மகளிர் உரிமை காத்த ஆட்சி மாண்பாளர்'' என்று.

ஆகவே, அந்தக் கருத்து நீரோட்டம் எப்படி வருகிறது என்பதை எண்ணிப்பாருங்கள்.

இந்தியாவிலேயே ஒரு மாநில முதலமைச்சர் முதல் முறையாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கென்று அமைச்சரவையில் ஒரு தனித் துறையை உருவாக்கியது கலைஞர் அவர்கள்தான். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியதும் கலைஞர் அவர்கள்தான்.

30-அய் 15 ஆகக் குறைத்தார்!

இப்படி சமூகநீதியானாலும், மகளிருக்கான உரிமை யானாலும், நிலப் பிரபுக்களின் ஆதிக்கத்தைக் குறைப் பதற்காக 30 ஸ்டேண்டர்ட் ஏக்கர் காமராஜர் காலத்தில் வந்தது என்றால், அந்த நில உச்சவரம்பு சட்டத்தை 15 ஸ்டேண்டர்ட் ஏக்கர் என்று கொண்டு வந்தார்.

அடுத்தபடியாக, பெரிய பஸ் முதலாளிகள்; டி.வி.எஸ். பெரிய ஏகாதிபத்தியம். பொள்ளாச்சி மகாலிங்கம் ஏபிடி - அதேபோல மற்ற மற்றவர்கள். தமிழ்நாட்டு போக் குவரத்துத் துறையே ஒரு மூன்று, நான்கு பேரிடம் இருந் தது. எளிய மக்களுக்காக வந்த ஆட்சியில், அவற்றை யெல்லாம் ஒரே நாளில் நாட்டுடைமை ஆக்கினார்.

அடித்தளத்து மக்களுக்காகத்தான் திராவிட இயக்கம்

அவற்றிற்குப் பெயர் கொடுத்தார், சேரன், சோழன், பாண்டியன் என்று. பிறகு அது பெரிதாயிற்று. பிறகு புதிய புதிய தலைவர்களை எல்லாம் சேர்த்து, ஜாதித் தலைவர்களின் பெயர்களை வைத்தார்கள். உடனே நாங்கள் சொன்னோம், பெயரைக் கூட எடுத்துவிடுங்கள். பெரியார், அண்ணா பெயரில் இருக்கின்ற போக்கு வரத்துத் துறை மட்டும் நிலைக்கட்டும் என்றோம், அதை கலைஞர் செய்தார்.

ஆகவேதான், சமதர்மமா? கல்வியா? பெண் கல்வியா? பெண்ணுரிமையா? எளிய மக்களா? கை ரிக்ஷா ஒழிப்பா? பிச்சைக்காரர்களின் மறுவாழ்வா?

இப்படி எதை எடுத்தாலும், அத்தனையிலும் அவருடைய சிந்தனை. ஏனென்றால், அடித்தளத்து மக்களுக்காகத்தான் திராவிட இயக்கம்.

(தொடரும்)

No comments:

Post a Comment