ஏழ்மை நிலையில் உள்ளவர்களிடம் கடன் வசூல் செய்வதைக் காட்டிலும் பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கிய கடனை வசூலிப்பதில் தீவிரம் காட்டலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 2, 2021

ஏழ்மை நிலையில் உள்ளவர்களிடம் கடன் வசூல் செய்வதைக் காட்டிலும் பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கிய கடனை வசூலிப்பதில் தீவிரம் காட்டலாம்

பொதுத்துறை வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

புதுடில்லி,செப்.2- ஏழ்மை நிலையில் உள்ளவர் களிடம் கடன் வசூல் செய்வதைக் காட்டிலும், பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கிய கடனை வசூலிப்பதில் தீவிரம் காட்டலாம் என்று பொதுத் துறை வங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

பொதுத்துறை வங்கியான கனரா வங்கி திருச்சியில் உள்ள சமூக சேவை சங்கத்துக்கு ரூ.48.80 லட்சம் கடன் தொகையை 1994-95 ஆம் ஆண்டு வழங்கியுள்ளது. இந்தத்தொகை சங் கத்தில் உள்ள 1,540 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. சங்கத்தின் நிரந்தர சேமிப்புத் தொகை வங்கி வசம் இருக்கும்போது கடனை வசூலிக்க தீவிரம் காட்டி உறுப்பினர்களை துன்புறுத்த வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கனரா வங்கி மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று (1.9.2021) தீர்ப்பு வழங்கியது.

வங்கிகள் அளித்த கடன் தொகை 90 நாள்களில் திரும்பாவிடில் அதாவது அதற்கான வட்டி வசூலாகாத சூழலில் அது வாராக் கட னாகக் கருதப்படும். அத்தகைய கடன் கணக் குகள் வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்படும் என்பது தெரிந்ததே. சமூகத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களை மேம்படுத்துவதற்காக வழங்கப்படுவதுதான் டிஅய்ஆர் கடன். இத்த கைய கடன் பெற்றவர்கள் கால்நடை வளர்ப்பு, விவசாயம், பால் விற்பனை, கைவினைப் பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுபவர்களாவர். இந்தப் பணியில் உள்ளவர் கள் 10 ரூபாய் கொடுத்து ஒளிப்படம் எடுத்துக் கொடுக்கும் நிலையில் இல் லாத ஏழைகள். இத்தகையோருக்கு உதவுவதற்காக இந்த சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கடன் பெற்று வழங்கியுள்ளது. அத்தகைய சங்கத் துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து என்ன பலனை எட் டப் போகிறீர்கள் என வங்கி சார்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் நீதிபதிகள் கேள்வியெழுப் பினர். சமூகத்தை மேம்படுத்த வேண்டும், அதில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பதற்காகத்தான் வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இது ஒருபொருளாதாரம் சார்ந்த நடவடிக்கை, இதில் வங்கிகள் தங் களுக்குள்ள தார்மீக பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

வங்கிகள் ஏற்கெனவே கடுமையான வாராக் கடன் சுமையில் அவதிப்படுவதாகவும், இது போன்ற கடன் வசூல் நடவடிக்கை மூலம்தான் அதை சரிக்கட்ட முடியும் என்று வழக்குரைஞர் பதிலளித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களிடம் கடன் வசூல் செய்வதைக் காட்டிலும், பெரிய நிறுவ னங்கள், பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கிய கடனை வசூலிப் பதில் தீவிரம் காட்டலாம் என்று குறிப்பிட்டனர். இந்த சங்கத்துக்கு எதிராக இதுபோன்ற மேல் முறையீட்டை இனிமேலும் கனரா வங்கி தொடரக்கூடாது என்றும் நீதிபதி கள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர்.

வங்கி விதி 136-இன் கீழ் சிறப்புவிடுப்பு மனுவாக தாக்கல் செய்ததாக வழக்குரைஞர் குறிப்பிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், விதி 136 என்றபிரம்மாஸ்திரத்தை' இதுபோன்ற வழக்குகளுக் குப் பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டு கனரா வங்கியின் மனுவை நிராகரித்தனர்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்ததீர்ப்பில், இதுபோன்ற சங்கத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து தங்களது நேரத்தை யும் காலத்தையும் விரயம் செய்ய வேண்டாம் என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.


No comments:

Post a Comment