அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான அன்புச் சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அவர்களது துணைவியார் திருமதி விஜயலட்சுமி அவர்கள் (வயது 63) இன்று (1.9.2021) காலை சென்னை பெருங்குடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் உரிய ஓர் எதிர்பாராத செய்தியாகும்.
பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு அவர்களது குடும்பத்தினைப் பேணிக் காக்கும் கடமையை அவரவர்கள் துணைவியரே சுமையாக சுமக்கின்றனர்.
அத்தகைய ஒருவரின் திடீர் மறைவு மிகுந்த வேதனை தருவதோடு, எளிதில் ஏற்க முடியாத ஒன்றுமாகும்!
கடந்த சில நாள்கள் சிகிச்சை பெற்று வந்த அவரை, "நான் இன்று காலை வந்து டிஸ்சார்ஜ் செய்து அழைத்துப்போகவே வந்தேன்" என்று சகோதரர் ஓ.பி.எஸ். அவர்கள் நம்மிடம் கண்ணீர் மல்க கூறியபோது, எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்தேன்.
தந்தை பெரியார் இதை ‘இயற்கையின் கோணல் புத்தி' என்றே கூறுவார்கள்.
அவரது மறைவால் மிகப்பெரிய சோகத்திற்கும், துன்பத்திற்கும் ஆளாகியுள்ள திரு.ஓ.பி.எஸ். மற்றும் குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தீவிரமான இயக்கப் பணிகளில் ஈடுபட்டு மெல்ல மெல்ல அத்துயரத்திலிருந்து மீளுவாராக!
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
01.09.2021
சென்னை
குறிப்பு: இன்று காலை 11 மணி அளவில் பெருங்குடி ஜெம் மருத்துவமனை சென்று ஓ.பி.எஸ். அவர்களுக்கு ஆறுதல் கூறித் திரும்பினோம்.
No comments:
Post a Comment