சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை,செப்.1- சட்டமன்றத்தில் இன்று (1.9.2021) மறைந்த திமுக தலைவர் முத்தமிழறிஞர் கலைஞருக்கு சென்னை அண்ணா சாலையில் சிலை நிச்சயம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (1.9.2021) வீட்டுவசதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் (தஞ்சாவூர் தொகுதி) நீலமேகம் பங்கேற்று பேசியபோது, 1971ஆம் ஆண்டு மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டுமென தந்தை பெரியார் முடிவு செய்தார் . அதன் பின்னர் 1975ஆம் ஆண்டு அப்போதைய திராவிடர் கழகத் தலைவர் மணியம்மையார் அவர்கள் சென்னை அண்ணா சாலையில் கலைஞருக்கு சிலையை நிறுவி குன்றக்குடி அடிகளாரால் அந்த சிலை திறந்து வைக்கப் பட்டது. அதன்பின்னர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் சில விஷமிகள் கலைஞர் அவர்களின் சிலையை சேதப்படுத்தினர். பின்னர் அந்த இடத்தில் மீண்டும் சிலை வைக்க வேண்டா மென கலைஞர் அவர்கள் கூறிவிட்டார். எனவே, தந்தை பெரியார் நினைத்ததை அன்னை மணியம்மையார் செய்து காட்டி யதன் அடிப்படையில் மீண்டும் அண்ணா சாலையில் கலைஞரின் சிலையை நிறுவ வேண்டுமென குறிப்பிட்டார்.
முதலமைச்சர் அறிவிப்பு
முதலமைச்சர் மு.கஸ்டாலின் அதற்கு பதிலளித்து பேசிய போது குறிப்பிட்டதாவது:
இங்கே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் அவர்கள், தன்னுடைய உரையை முடிப்பதற்கு முன்பு ஒரு கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார். தந்தை பெரியார் அவர்கள் எண்ணிய எண்ணத்தை நிறைவேற் றும் வகையில், திராவிடர் கழகத்தின் சார்பிலே சென்னை, அண்ணா சாலையிலே, தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச் சிலையை அமைக்க வேண்டுமென்று, அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதற்காக முறையாக அனுமதியும் பெற்று, அந்தச் சிலை வைக்கப்பட்டது. ஆனால், அந்தச் சிலை ஏன் அங்கிருந்து அகற்றப்பட்டது என்பது உங் களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். நான் அந்த விஷயத்திற்குள்ளே சென்று, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நேரில் கோரிக்கை வைத்தார்
இரண்டு, மூன்று நாள்களுக்கு முன்புகூட, திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அய்யா கி. வீரமணி அவர்கள் என்னைச் சந்தித்து, அவரும் இந்தக் கோரிக்கையை என்னிடம் எடுத்து வைத்திருக்கிறார். இது பெரியார் நினைத்தது; பெரியார் எங்களுக்குக் கட்டளையிட்டு, நாங்கள் அதை வைத்தது. எனவே, மீண்டும் அந்த இடத்திலே அதை வைக்க வேண்டுமென்று அவரும் என்னிடத் திலே வற்புறுத்தியிருக்கிறார். நான் அப்போது சொன்னேன்; பொதுவான இடங்களிலே, போக்குவரத்திற்கு இடையூறாக இதுபோன்று சிலைகள் வைக்கப்படக்கூடாது என்று நீதி மன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, அவரிடம் அந்தச் சட்டச் சிக்கல்களை யெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். ‘நாங்கள் ஏற்கெனவே அனுமதி வாங்கியதுதான்; எனவே, புதிதாக அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை’ என்று அவர் சொன்னார். எனவே, அதை வைக்க வேண்டுமென்று ஆசிரியர் அவர்கள் வற்புறுத்தியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல; அண்ணா சாலையிலே தந்தை பெரியார் சிலை இருக்கிறது; அதேபோல, பேரறிஞர் அண்ணா சிலை இருக்கிறது; மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களுடைய சிலை இருக்கிறது. ஏற்கெனவே, கலைஞர் அவர்க ளுடைய சிலையும் இருந்தது. எனவே, அந்த இடத்திலே நீங்கள் அதை வைக்க வேண்டு மென்று வற்புறுத்தியிருக்கிறார். அண்ணா சாலையில் அதை வைப்பது குறித்து நான் சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை செய்வது உகந்ததாக இருக்கும். நீதிமன்றம் பிறப்பித்தி ருக்கிற உத்தரவிற்கும் நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். நிச்சய மாக கலைஞர் அவர்களுடைய சிலை அண்ணா சாலையிலே வைக்கப்படும் என் பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முதலமைச்சர்.
No comments:
Post a Comment