வாசிங்டன், செப்.3 கடந்த 50 ஆண்டுகளில் இயற்கை பேரிடர்களால் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகி இருப்பதாக அய்க்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அய்க்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், உலக வானிலை அமைப்பு, இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட இறப்பு மற்றும் பொருளாதார இழப்புகள் பற்றிய மிக விரிவான ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வு 1979 -2019 ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட 11,000 இயற்கை பேரிடர்களை ஆய்வு செய்தது. இதில் எத்தியோப்பியாவில் 1983ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியும் அடங்கும். இதில் 3 லட்சம் பேர்வரை பலியாகினர். மேலும் 2005ஆம் ஆண்டு கத்ரீனா சூறாவளியால் 163.61 டாலர் மில்லியன் சேதம் ஏற்பட்டது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் போன்ற பேரழிவுகளின் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரித்துள்ளது. 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். 3.64 டிரில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, பூமியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸைக் கடக்கும் சூழல் ஏற்பட்டால் மனித இனம் வாழ்வதற்கான சூழல் இல்லாமலாகிவிடும் என்று அய்பிபிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஏற்கெனவே மேற்கு அய்ரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment