மகளிர் ஆணையம் ஆய்வில் தகவல்
புதுடில்லி செப்.8 பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த புகார்களின் எண்ணிக்கை இந்த வருடம் 46 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நாடெங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த புகார்களின் எண்ணிக்கை குறித்த ஆய்வு ஒன்றைத் தேசிய மகளிர் ஆணையம் நடத்தி உள்ளது. இந்த ஆணையம் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வை உருவாக்கி வருகிறது. இதனால் பொதுமக்களில் பலர் பெண்களுக்கு எதிராக வன்முறை நிகழும் போது அது குறித்து புகார் அளிக்க முன் வந்துள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடம் இதுவரையிலான எட்டு மாதங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த புகார்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 46 விழுக்காடு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதில் பாதிக்கும் மேலான புகார்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து பெறப்பட்டுள்ளன.
இந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து 19,953 புகார்கள் பெறப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 13,618 புகார்கள் பதிவாகி இருந்தன. இதில் ஜூலை மாதத்தில் மட்டும் 3,248 புகார்கள் வந்துள்ளன. இந்த 19,953 புகார்களில் 7,076 புகார்கள் பாலியல் வன்கொடுமைப் புகார்கள் ஆகும். மேலும் குடும்ப வன்முறை குறித்து 4,289 புகார்களும் 2,923 புகார்கள் வரதட்சணை கொடுமை உள்ளிட்டவை ஆகும். இந்த புகார்களில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 10,084 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அடுத்ததாக டில்லியில் 2,147, அரியானாவில் 995 மற்றும் மகாராஷ்டிராவில் 974 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு புகார்கள் எண்ணிக்கை அதிகரித்ததற்குத் தேசிய மகளிர் ஆணையம் கொண்டு வந்துள்ள விழிப்புணர்வே காரணம் என ஆணையத் தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment