ஜெனீவா, செப்.10 உலக சுகாதார மய்யத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம் ஜெனீவாவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
சில நாட்களுக்கு முன்னர் மருந்து நிறுவனங்கள் தடுப்பூசிகள் இருப்பு பூஸ்டர் டோஸை எதிர்கொள்ளவே போதுமானதாக இருக்கிறது என்று கூறின. அந்த மருந்து நிறுவனங்களின் அலட்சியம் என்னை கோபப்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏழை நாடுகள் வளர்ந்த நாடுகளிடம் அபிரிமிதமாக இருக்கும் மிச்சங்களைக் கொண்டு தங்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையில் சில வளர்ந்த நாடுகளும் மருந்து நிறுவனங்களும் செயல்படுகின்றன. இது ஏற்புடையது அல்ல. அப்படிப்பட்டவர்கள் நடத்தையைப் பொறுத்துக் கொண்டு அமைதி காக்க மாட்டேன்.
ஏழை, வளரும் நாடுகளின் சுகாதாரப் பணியாளர்களும், மூத்த குடிமக்களும் மற்ற நாட்டவரைப் போலவே தடுப்பூசியை சமவாய்ப்புடன் பெறத் தகுதியானவர்களே. ஏற்கெனவே நான் கடந்த மாதம் வளர்ந்த நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதை சற்றே நிறுத்தி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். தற்போது மீண்டும் அதையே வலியுறுத்துகிறேன்.
இந்த ஆண்டு இறுதி வரையிலாவது வளர்ந்த நாடுகள் மூன்றாம் டோஸ் தடுப்பூசியை நிறுத்திவைக்கலாம். இதன்மூலம், உலகளவில் அனைத்து நாடுகளுமே குறைந்தபட்சம் தங்கள் மக்களில் 40 விழுக்காடு பேருக்காவது தடுப்பூசி செலுத்த முடியும். இதுவரை உலகளவில் 5.5 பில்லியன் கரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 80 விழுக்காடு தடுப்பூசிகள் வளர்ந்த நாடுகளால் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment