கேரளாவில் அக் -4 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 9, 2021

கேரளாவில் அக் -4 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு

திருவனந்தபுரம், செப்.9 கேரள மாநிலத்தில் கரோனா மற்றும் நிபா வைரஸ் தொற்று அச்சத்திற்கு மத்தியில் வரும் அக்டோபர் -4 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத் தப்பட்டது.  இந்தநிலையில் தற்போது படிப்படியாக கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக முதல் அமைச்சர் பினராயி விஜயன் கூறினார்.  மேலும் வரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர் களுக்கு கல்லூரி திறக்கப்படும் என்றும், கூடிய விரைவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில உயர்கல்வித் துறை மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஆர். பிந்து, “வருகிற அக்டோபர் -4 ஆம் தேதியில் கல்லூரிகளைத் திறக்க முடிவெடுத் துள்ளோம். சுழற்சி முறையில் வகுப்புகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். இருப்பினும் வருகிற செப்-10 ஆம் தேதி கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை யில் ஈடுபட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்எனத் தெரிவித்தார். பள்ளிகள் கல்லூரிகள் திறப்பதற்கு முன்பாக ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

 

உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்களை பள்ளியில் அனுமதிக்கக் கூடாது 

பள்ளிக்கல்வி ஆணையர்

சென்னை, செப்.9 உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்களை பள்ளியில் அனுமதிக்கக் கூடாது என பள்ளிக்கல்வி ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 1ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் மாணவ-மாணவிகள் வரவழைக்கப்பட்டு வகுப்புகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வரு கின்றன. இருந்தாலும், சில மாவட்டங்களில் ஆசிரி யர்கள், மாணவர்கள் சிலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அனைத்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பள்ளிகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்களை பள்ளியில் அனுமதிக்க கூடாது என பள்ளிகல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கு சம் பந்தமில்லாத நபர்களை பள்ளிக்கு அனுமதிக்ககூடாது எனவும் பள்ளிக்கல்வி ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment