10.03.1935 -குடிஅரசிலிருந்து..
சென்ற வாரத் தொடர்ச்சி
20. பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்குத் துன்பம் செய்தால் அவனைச் சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும். - அ.9 சு.320.
21. சூத்திரனுக்கு பிராமணப்பணி விடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாத விடத்தில் சத்திரியனுக்கும், சத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டு கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு. - அ.11. சு.12.
22. சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும், யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம். - அ.11. சு.13.
23. யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைத் தண்டிக்கக் கூடாது. - அ.11 சு.20.
24. பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும். - அ.11 சு.66.
25. ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்.
- அ.11. சு.131.
25 (அ) அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது - அ.11. சு.132.
26. சத்திரியன் இந்நூலில் (மனுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப் பட்டபடி
ராஜ்யபாரம் பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமண பணிவிடை செய்வதே தவமாகும். - அ.11 சு.285.
27. சூத்திரன் பிராமணனுடைய தொழிலை செய்தாலும் சூத்திரனேயாவான். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனேயாவான். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார். - அ.10. சு.75.
28. பிராமணரல்லாதவன் உயர்குலத் தோருடைய தொழிலைச் செய்தால் அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும். - அ.10 சு.96
29. சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ வேண்டும். - அ.10. சு.96.
30. பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப்போன தானியமும் சூத்திரனுடைய ஜீவனத்துக்கு கொடுக்கப்படும். - அ.10. சு.125
31. சூத்திரன் எவ்வளவு திறமை யுடையவனாகயிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராம ணனுக்கு துன்பமாய் முடியும். - அ.10. சு.129.
32. மனுவால் எந்த வருணத்தாருக்கு இந்த மனுதர்ம சாஸ்திரத்தால் என்ன தர்மம் விதிக்கப் பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும். ஏனென்றால், அவர் வேதங் களை நன்றாய் உணர்ந்தவர். - அ.2. சு.7.
இன்னும் இதைப் போன்று ஆயிரக்கணக்கான அநீதியானதும், ஒரு சாராருக்கு நன்மையும், மறுசாராருக்குக் கொடுமையும் செய்வதுமான விதிகள் மனுதர்மத்தில் நிறைந்திருக்கின்றன. சுருங்கச் சொல்லுங்கால் பிராமணன் என்ற வகுப்பாரைத் தவிர, வேறு எந்த வகுப்பாருக்கும் அதில் யாதொரு நன்மையும் இல்லை என்றே கூறலாம். ஆகையால் தோழர்களே! இந்நூலை மனுதர்மம் என்று கூறுவதா? அல்லது மனுஅதர்மம் என்று கூறுவதா? சற்று யோசித்து முடிவு செய்யுங்கள்.
No comments:
Post a Comment