லக்னோ, செப். 8- வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி 27ஆம் தேதி நாடுதழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று லட்சக்கணக்கானோர் பங்கேற்ற விவசாயிகள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, விவ சாயிகள் டில்லி எல்லை பகுதிகளில் முகாமிட்டு கடந்த 9 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர் களுடன் ஒன்றிய அரசு நடத்திய 10 சுற்று பேச்சுவார்த் தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதற்கிடையே, 40 விவசாய சங்கங்கள் இணைந்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற அமைப்பின் சார்பில் ‘கிசான் மகா பஞ்சாயத்து’ என்ற பெயரில் விவசாயிகள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள அரசு கல்லூரி மைதானத் தில் இம்மாநாடு 5.9.2021 அன்று நடைபெற்றது. உத்தரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப், கருநாடகா உள்பட 15 மாநிலங்களில் இருந்து 300 விவசாய அமைப்புகளை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.
மாநாட்டில் சமூக ஆர்வலர் மேதா பட்கர், விவசாய தலைவர் யோகேந்திர யாதவ் உள்ளிட்ட பிரபலங்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். மாநாட்டில், கருநாட காவை சேர்ந்த ஒரு பெண் விவசாய சங்க தலைவர் கன்னடத்திலேயே பேசினார்.
பாரதீய கிசான் சங்க செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத், மாநாட்டில் பேசியதாவது:-
நாடு விற்பனை செய்யப்படுவதை நாம் தடுக்க வேண்டும். விவசாயிகள் காக்கப்பட வேண்டும், நாடு காக்கப்பட வேண்டும், வர்த்தகம், தொழிலாளர்கள், இளைஞர்கள் காக்கப்பட வேண்டும். அதுதான் இந்த மாநாட்டின் நோக்கம்.
இதுபோன்ற மாநாடுகள் நாடு முழுவதும் நடத்தப்படும் என்று அவர் பேசினார். மாநாட்டில் பேசியவர்கள், மோடி அரசையும், சாமியார் ஆதித்யநாத் அரசையும் கடுமையாக விமர்சித்து பேசினர். முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வருகிற 27ஆம் தேதி நாடுதழுவிய முழு அடைப்புப் போராட்டம் (பாரத் பந்த்) நடத்தப்படும் என்று விவசாய சங்க தலைவர்கள் அறிவித்தனர். முதலில், 25ஆம் தேதிக்கு திட்டமிடப் பட்டது. பின்னர், 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. மாநாட்டையொட்டி, 2 லட்சம் சதுர அடியில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. மாநாட்டுக்கு வந்தவர்களுக் காக 500 உணவு கடைகளும், நடமாடும் கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. ஆயிரம் மருத்துவ குழுக் களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மாநாட்டுக்காக, பலத்த காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. அத்துடன், பாதுகாப்புக்காக 5 ஆயிரம் தன்னார்வத் தொண்டர்களை விவசாய சங்கங்கள் நியமித்து இருந்தன.
No comments:
Post a Comment