வேதாகமக் கல்லூரியில் இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு
நேற்றைய தொடர்ச்சி...
பகுத்தறிவாளர் கழகத் தீர்மானம்
14.12.1991 அன்று காரைக்குடியில் நடைபெற்ற மாநில பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
தமிழ்நாடு அரசு ஏற்படுத்த இருக்கும் வேதாகமக் கல்லூரியில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக வாய்ப்பு அளிக்கும் வகையில் இடஒதுக்கீட்டுப்படி சேர்க்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவித்துள்ளபடி, அந்த நோக்கம் நிறைவேற்றப்பட மட்டுமே அக்கல்லூரி பயன்படுத்தப்பட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
வேதாகமக் கல்லூரியில் இடஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு
தமிழ்நாடு அரசு சார்பில் துவக்கப்பட இருக்கும் வேதாகமக் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களும் சேர்க்கப்பட்டு, அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு கோயில்களில் அவர்கள் அர்ச்சகர்களாக ஆக்கிட வழிவகுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்டார்.
அ.இ.அ.தி.மு.க.-வின் 20ஆவது ஆண்டு துவக்க விழா சென்னை ஹேமமாலினி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:
தமிழ்நாடு அரசு சார்பில் வேதாகமக் கல்லூரி திறக்கப்பட இருக்கிறது. இதைப்பற்றிய பல பிரச்சினைகளும் எழுப்பப்பட்டுள்ளன. அதைப்பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன். அரசால் திறக்கப்பட இருக்கும் வேதாகமக் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களும், இடஒதுக்கீடு கொள்கைப்படி 18 சதவீதம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு கோயில்களில் அர்ச்சகராக ஆக்கப்படுவார்கள். இதன்மூலம் பெரியார், அண்ணாவின் கனவுகள் நனவாக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
(விடுதலை - 17.10.1991)
முதலமைச்சரின் முடிவுக்குப்
பொதுச் செயலாளர் பாராட்டு!
தமிழ்நாடு அரசின் சார்பாக புதிதாகத் துவக்க இருக்கும் வேத ஆகமக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டு அடிப்படையில் 18 சதவிகிதம் ஆதி திராவிடர்களையும் சேர்த்து அவர்கள் அர்ச்சகர்களாக, தக்க பயிற்சி அளிக்கப்படும். இது தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியவர்களது விருப்பங்களைப் பூர்த்தி செய்வதாக அமையும் என்றும், அவ்வாறு துவக்கப்படப் போகும் கல்லூரிக்கு ஆகும் ஒரு கோடி ரூபாய் செலவு, அரசு நிதியிலிருந்து செலவழிக்கப்படாமல், ஆலயங்களின் உபரி (வருவாய்) நிதியிலிருந்து எடுத்துச் செய்யப்படும் செலவாக இருக்கும் என்றும், 17.10.1991, 18.10.1991 ஆகிய நாட்களில் - சென்னை, நாகை ஆகிய ஊர்களில் இரண்டு நிகழ்ச்சிகளில் உரையாற்றுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்!
ஜாதி ஒழிப்பிற்காகவும், சமூக நீதிக்காகவும் தம் வாழ்வினையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள லட்சோப லட்ச பெரியார் தொண்டர்கள் சார்பாக, முதலமைச்சரின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனத்தினை நாம் மனப்பூர்வமாக வரவேற்கிறோம்; உளப்பூர்வமாகப் பாராட்டுகிறோம்.
17.09.1991 அன்று சென்னையில் அரசு சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் நாம் எடுத்து வைத்த மூன்று கோரிக்கைகளில் ஜாதி ஒழிப்புக் கண்ணோட்டத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வாய்ப்பளிக்கும் இந்த அறிவிப்பும், ஏற்பாடும் முக்கிய கோரிக்கையாகும்.
அத்துடன் சென்னை விடுதலை 30.09.1991, 01.10.1991 ஆகிய தேதிகளில் நாம் வேத ஆகமக் கல்லூரி பற்றி எழுதிய அறிக்கையிலும், 14.10.1991 அன்று நெய்வேலியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டிக் கூட்டத்திலும் இதனை வற்புறுத்தித் தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தந்தை பெரியார் அன்றே வலியுறுத்தினார்
நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, கோயில் கருவறைக்குள் (கர்ப்பக்கிரகம்) நுழைய ஜாதி பாகுபாடின்றி, அனைவருக்கும் உரிமை என்பது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வாய்ப்பு அளிப்பதன் மூலமே ஏற்பட முடியும் என்று கூறித்தான், அன்று ஆட்சியிலிருந்த - மதிப்பிற்குரிய கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.க. அரசினை வற்புறுத்தினார்கள்.
அதன் தொடர்ச்சியாக 1970ஆம் ஆண்டு இத்திருத்தம் சட்டமாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க. ஆட்சியில் நிறைவேறியது. இதனை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றனர்.
ஆபரேஷன் வெற்றி; ஆனால் நோயாளி செத்தார் என்பது போல அரசியல் சட்டத்தின் 25, 26ஆவது விதிகளுக்கு முரண் அல்ல, சட்டம் செல்லும் என்று கூறி, நடைமுறைப்படுத்துவதற்கு குறுக்குச் சால் ஓட்டினார்கள். அய்யா மறைவுக்குப்பின் அன்னை மணியம்மையார் தலைமையில் கழகம் தொடர்ந்து போராடி வந்தது. தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவினை மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர் தலைமையில் நடந்த அ.இ.அ.தி.மு.க. அரசு அமைத்த குழுவின் தீர்மானத்திற்கும், நமது வற்புறுத்தலுக்கும் ஏற்ப, ஜஸ்டிஸ் திரு.மகராஜன் அவர்கள் தலைமையில், திருமுருக கிருபானந்த வாரியார், பல குருக்கள், இந்து மத அபிமானிகள், ஆஸ்திக சிரோன்மணிகள் ஆகிய 12 பேர்களையும், இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை ஆணையரையும் உள்ளடக்கி ஒரு வல்லுநர் குழு போடப்பட்டு, அது அதன் அறிக்கையை 1982ஆம் ஆண்டு தந்தது. அதன்படி அர்ச்சகர்களை ஜாதி வேறுபாடின்றி தேர்ந்து எடுத்து பயிற்சி அளிக்க ஆகமக் கல்லூரி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.
அரசு விழாவில் நமது கோரிக்கையும் - முதலமைச்சரின் பதிலும்
இதனை நாம் முதலமைச்சர் நடத்திய அரசு விழாவில் சுட்டிக்காட்டியதோடு, தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாளின் இறுதியில் 95ஆம் வயதில்கூட - இதற்காகத்தான் மிகப் பெரிய அளவில் போராடுவதற்கும் தயாரானார் என்று குறிப்பிட்டோம்.
முதலமைச்சர் அவரது சிறப்புரையில் இதற்கு பதிலளித்து, மண்டல் கமிஷன் 50 சதவிகித சட்டமன்றத் தீர்மானம் உடன் கொண்டுவரப்படும் என்று கூறிவிட்டு, நாம் வைத்த மற்ற இரண்டு கோரிக்கைகளைப் பற்றியும், குறிப்பிடும்பொழுது-
பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகள், சிந்தனைகள், பாடநூல்களில் இடம் பெறுவது பற்றியும், சகோதரர் வீரமணி விடுத்த மற்ற கோரிக்கைகள் பற்றியும் அரசு பரிசீலித்து விரைவில் நல்ல முடிவுகள் அறிவிக்கப்படும். அதிகாரபூர்வ ஏடான தமிழரசு - (மலர்-22-இதழ்-7) இதழ் 01.10.1991 - பக்கம் - 12)
இதற்குமுன் அ.இ.அ.தி.மு.க. அரசின் இதற்கான முயற்சிகள் அறிவிக்கப்பட்டன; ஆனால், செயல்படுத்துவதற்குள் அரசியல் சூழ்நிலைகள் மாறின; அரசுகளும் மாறின.
அதற்குப் பிறகு இப்போது இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதனை அறிவித்திருப்பதன் மூலம், அய்யாவின் இறுதி நாள் விருப்பத்தினை செயலாக்க முன் வந்துள்ளார்.அதற்காக நாம் நமது ஆழ்ந்த நன்றியை முதலமைச்சருக்கும், அவரது அரசுக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆதங்கம்
அய்யா அவர்கள் மறைந்தவுடன் அவர்களுக்கு அரசு மரியாதை அளித்து அவர்களது உடலை அடக்கம் செய்தபோது, கலைஞர் அவர்கள், அய்யா அவர்களை அரசு மரியாதையோடு புதைக்கிறோம் என்றாலும்கூட அவர் நெஞ்சில் இருக்கும் முள்ளை எடுத்துப் புதைக்க இயலவில்லையே என்று ஆதங்கப்பட்டார்!
இன்று முதலமைச்சர் அவர்கள், அதைச் செம் மையாகச் செய்து நிறைவேற்றுவதன்மூலம், அய்யாவின் உடலில் நெஞ்சில் ஒரு முள்ளாக இருப்பதை அகற்றினார் என்ற நிரந்தர வரலாற்று வரிகளில் இடம் பெற்றவராகிவிடுவார் - இது வரலாற்றுச் சாதனை என்பது உறுதி! அதனை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பெரியாரைத் துணைக் கோடல் என்பது ஆட்சிக்கு எப்போதும் நல்ல இலக்கணம் ஆகும்!
(விடுதலை - 19.10.1991)
No comments:
Post a Comment