அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-15 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 2, 2021

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-15

.தி.மு.. அரசிடம் கழகம் வைத்தக் கோரிக்கை

1991 தேர்தலுக்குப்பின் செல்வி ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி அமைந்தது. பின் 17.9.1991 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அரசு அழைப்பின் பேரி  கழக பொதுச்செயலாளர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்றார்.

அப்பொழுது திராவிட கழகத்தின் சார்பாக மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்.

1. மண்டல் குழு பரிந்துரைப்படி 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

2. தந்தை பெரியார் கருத்துகள் தமிழ்நாடு அரசு பாடநூல்களில் இடம் பெறவேண்டும்

3. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டம் இயற்ற வேண்டும்.

30.09.1991 அன்று மண்டல் குழு பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அதோடு மண்டல் குழு பரிந்துரையில்  பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதை 50 விழுக்காடு என்று உயர்த்த வேண்டும் என்றும், ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மற்றொரு கோரிக்கை வலியுறுத்தப்பட்ட நிலையில் அர்ச்சகர் ஆகமப் பயிற்சிக் கல்லூரியில் இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு அறிவித்தது.

முதலில் வேத ஆகமப் பயிற்சிக் கல்லூரியை ஒரு கோடி ரூபாய் செலவில் அரசு துவங்கப் போவதாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்ததற்கு கழகச் சார்பில் பொதுச் செயலாளர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலாக அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் ஆகமப் பயிற்சி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி, அதில் அனைத்து ஜாதியினர்க்கும் பயிற்சி தரவேண்டும் என கழகப் பொதுச் செயலாளர் வற்புறுத்தினார்.

திராவிடர் கழகத் தீர்மானம்

14.10.1991 அன்று நெய்வேலியில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுவின் தீர்மானம் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு ரூ.1 கோடி செலவில் வேதா கமக் கல்லூரி நிறுவுவதாக அறிவித்துள்ள திட்டம், பார்ப்பன ஆதிக்கத்தினை மேலும் கொழுக்க வைக்கும் என்பதால் - இக்கமிட்டி தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அத்திட்டத்தை அரசு கைவிட்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை கிடைக்கும் வகையில், ஏற்கெனவே .தி.மு.. அரசால் தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி போடப்பட்ட ஜஸ்டிஸ் மகராஜன் குழுவின் பரிந்துரையை செயலாக்கிடும் வண்ணம் ஆகமக் கல்லூரிகளை ஏற்படுத்தி ஆதிதிராவிடர் உட்பட அக்கல்லூரிகளில் பயிற்சி அளித்து, தந்தை பெரியார் விரும்பியபடி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமைக்கு வழி வகுக்க வேண்டுமாய் தமிழ்நாடு அரசை இச்செயற்குழு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.

பார்ப்பன வேதங்களை பரப்புவதுதான் அதன் நோக்கமென்றால், அதனை எதிர்த்துக் கழகம் கிளர்ச்சியில் ஈடுபடத் தயங்காது என்பதையும் இக்கமிட்டி தெரிவித்துக்கொள்கிறது.

(தொடரும்)

No comments:

Post a Comment