அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-14 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 1, 2021

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-14

நீதிபதி மகாராஜன் குழு பரிந்துரைகள்

நேற்றைய தொடர்ச்சி....

(3) நெடுங்காலமாக சிவாச்சாரியரும் பட்டாச்சாரி யரும் செய்து வந்த கோயில் பணிகளை இன்று நாம் நினைவு கூராமல் இருக்க முடியாது. நாட்டில் முகம்மதியர்களால் ஏற்பட்ட கொந்தளிப்புக்காலத்தில், பூசை முறைகள் அழிந்து போகாமல் தொடர்ந்து இருக்குமாறு காப்பாற்றி வந்தது இந்தப் பூசகருடைய அருஞ்சேவை. பிள்ளைலோகாச்சாரியர் என்ற வைணவ ஆச்சாரியர், திருவரங்கத்தில் முகம்மதியர்களால் கலகம் விளைந்த போது உற்சவமூர்த்தியைத் தூக்கிக்கொண்டு ஓடி மூர்த்தியை அணைத்தபடியே உயிர் விட்டார் என்று வரலாறு சொல்கிறது. அதுபோல, நடராசப்பெருமான் கோயிலுக்குள் முகம்மதியர் தங்கித் தங்களைப் பாதுகாப்புச் செய்து கொண்டிருந்த காலத்தில், கோயில் பூசகர் நடராசமூர்த்தியைத் தூக்கிக் கொண்டு ஓடிக் காப்பாற்றி வைத்திருந்து, பிறகு மீண்டும் கொண்டுவந்து பிரதிட்டை செய்தனர் என்றும், அவர்கள் மூர்த்தியை ஒளித்து வைத்த இடம் அம்பலப்புளி என்று வழங்கிற்று என்றும் வரலாறுகள் சொல்கின்றன. இப்படி பல சமயங்களில் பல ஏழைப் பூசகர்கள் மூர்த்திகளைக் காப்பாற்றியதோடு கூட, தங்களுக்கு ஊதியம் கிடைக்காத போதும் எப்படியோ ஒரு விளக்கை ஏற்றி, மலரைத் தூவி, தாங்கள் உண்ணும் அன்னத்தை கொண்டு போய் சுவாமிக்கு நிவேதித்து, பூசை ! மரபைக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். சிவபூசை அல்லது திருமால் பூசை தங்கள் குல தருமம் என்றும், அதை என்ன இடுக்கண் வந்தாலும் கைவிடாது பேணிக்காக்கவேண்டும் என்றும் அவர்கள் உறுதியோடு இருந்து கொண்டிருந்தார்கள். இந்த உறுதியினால் கோயில் வழிபாடும் சமயமும் காக்கப்பெற்றன. ஆதலால் இந்தச் சமய - பண்பாட்டு நிலைகளை அரசு கருத்தில் கொண்டு, பூசகர் சுமாரான வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய வாழ்க்கை வசதியும், தொழிலுக்குத் தொடர்ந்து வேலைவாய்ப்பு உண்டு என்ற உறுதியும், சமூகத்தில் போதிய அந்தஸ்தும், குறைந்த அளவிலேனும் அரசு செய்து தரவேண்டும்

(4) தமிழில் அர்ச்சனை செய்வது ஆகமத்துக்கு உடன்பாடே ஆதலால் தமிழ் அர்ச்சனைப் பயிற் சியைக் கல்லூரிகளில் பாடத்திட்டத்தின் பகுதியாகச் செயல்படுத்துவதோடுகூட., அத்தலைப்பில் சொல்லப் பட்டபடி, அற நிலையத்துறை அஷ்டோத்தரம், சகஸ்ரநாமம் முதலியவற்றைத் தயாரித்து வெளியிட்டு, கோயில்களில் கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும்.

(5) உள்துறை ஊழியர்களைப் பொறுத்தவரையில், முக்கியமாக பாசகர் பரிசாரகர் என்ற நிலையில் பணிபுரிபவர்களை, அவர்களுடைய பண்பாடு பக்தி ஆசாரம் இவற்றை அனுசரித்துத் தேர்ந்தெடுக்கவேண்டும். ஆகமத்தில் சொல்லியபடி இவர் களுக்கும் தீட்சை அளிப்பது அவசியம்.

திரு. எஸ்.மகாராஜன்

திரு. என்.ரெங்கராஜ பட்டர்

திரு. வி.விசுவநாத சிவாச்சாரியர்

திரு. கோ.மு.முத்துசுவாமி பிள்ளை

திரு. டி.எஸ்.சாம்பமூர்த்தி சிவாச்சாரியார்

திரு. .வெ..கிருஷ்ணசாமி ரெட்டியார்

திரு. மு.அருணாசலம்.

திரு. எஸ்.சுந்தரராஜ பட்டாச்சாரியர்

திரு. சி.சுவாமி நாத குருக்கள்

திரு. யு.சுப்ரமணியன்

திரு. இரா.அர்ஜுனன்

அப்பொழுது இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்த திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் ஒரு குறிப்பை வெளியிட்டார். (02.04.1983).

அனைத்து ஜாதியிலிருந்து அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதற்கு ஆகம சபை ஏற்படுத்தவும், அதில் மாணவர் சேர்க்கை விதிகள், அர்ச்சகர் தேர்வு, அர்ச்சகருக்கான பயிற்சி, அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகராகும் வாய்ப்பு - இவை பற்றி குழு உறுப்பினர்களின் ஒப்புதலைப் கேட்டுப் பெறும்படி இந்து அறநிலையத் துறை ஆணையர் பணிக்கப்பட்டுள்ளார் (இந்தியன் எக்ஸ்பிரஸ் - 04.04.1983) மேற்கண்ட குறிப்பை இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டார்.

நீதிபதி எஸ்.மகராசன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது குறித்து விளக்கி, உடனடியாக அதனைச் செயல்படுத்துமாறு வலியுறுத்தும் கடிதம் ஒன்றை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம் நேரிடையாக அளித்தார் (16.05.1983), அந்தக் கடிதத்தோடு சட்ட அறிஞர்களின் கருத்துரை களும் இணைக்கப்பட்டு இருந்தன.

10.04.1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது வைக்கப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் பக்கம் 20இல் பத்தி 24இல்,

ஜாதி பாகுபாடு அற்ற ஆகம பயிற்சி பள்ளி ஆரம்பித்து, திருக்கோயில் அர்ச்சகராகப் பயிற்சி பெற விரும்புகிறவர்கட்கு இந்த ஆண்டில் ஜாதி பாகுபாடு இன்றி பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இது சம்பந்தமாக கல்விப் பயிற்சி, செயல்முறைப் பயிற்சி அளிப்பது, பயிற்சிக்கான சேர்க்கை விதிகள், பயிற்சிப் பாடத் திட்டம், பாடப் புத்தகங்கள் முதலியவற்றை வகுப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆணையருக்கு அறிவுரைகள் அண்மையில் வழங்கப்பட்டுள்ளன.

ஆலயங்களில் ஜாதி, இன உட்பிரிவு வேறுபாடு இன்றி அர்ச்சகர் நியமனம் செய்வதற்குப் பயிற்சி - அரசுக்கு ஆலோசனை வழங்க ஒரு குழு அமைக்கப்பட்டது பற்றி 08.06.1984 அன்று அரசு ஆணை பிறப்பித்தது. அது வருமாறு:

தமிழ்நாடு அரசு

செய்தி, சுற்றுலா மற்றும் (தமிழ்) பண்பாட்டுத்

(செ.வெ.) துறை

செய்தி வெளியீடு எண் 339 நாள் 08.06.1984

ஆலயங்களில் ஜாதி, இன, உட்பிரிவு வேறுபாடின்றி அர்ச்சகர் நியமனம் செய்வதற்கு பயிற்சி - அரசுக்கு ஆலோசனை வழங்க குழு அமைப்பு.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறைக் குட்பட்ட ஆலயங்களில் ஜாதி, இன, உட்பிரிவு வேறுபாடின்றி, அர்ச்சகர்களை நியமனம் செய் வதற்கு முன்னேற்பாடாக அர்ச்சகராக பயிற்சி பெற விரும்புகிறவர்களுக்கு ஆகம பயிற்சி ஆரம்பிக்கவும், அப்பயிற்சியை ஆரம்பிக்கத் தேவையான கல்விப் பயிற்சி, செயல்முறைப் பயிற்சி அளிப்பது, பயிற்சிக்கான சேர்க்கை விதிகள், பயிற்சிக்கான பாடத்திட்டம், தேர்வுத் திட்டம், பாடப் புத்தகங்கள், பயிற்சி கால ஊதியம், பயிற்சி நடத்த வசதியாகவுள்ள இடம் மற்றும் பயிற்சி பெற விரும்பும் மாணவருக்கு வயது வரம்புகள் - இது குறித்து நீதிபதி திரு எஸ்.மகராசன் தலைமையில் அமைத்த வல்லுநர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த உரிய வழிமுறைகள் வகுத்து, அரசுக்கு ஆலோசனைகள் வழங்க கீழ்க்கண்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அரசு நியமித்துள்ளது.

1. இதன் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு. என்.கிருஷ்ணசாமி ரெட்டியார் பணிபுரிவார். 2. திரு. கு.ஆளுடையா பிள்ளை, ஆணையர், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, 3. திரு.பேராசிரியர் ..ஞானசம்பந்தம், 4. திரு.மு.அருணாசலம், இலக்கிய வரலாற்றுப் பேராசிரியர், சென்னை, 5. திரு..வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார், தலைவர், இந்து ஆலய பாதுகாப்புக்குழு, திருச்சிராப்பள்ளி, 6. டாக்டர் சொ.சிங்காரவேலன், .வி.சி.கல்லூரி, மயிலாடுதுறை, 7. திரு பெ. திருஞானசம்பந்தம், இயக்குநர், Traditional Institute of Arts and Culture. 8. சென்னை திரு .விஸ்வநாத சிவாச்சாரியார், முதல்வர், வேத பாடசாலை, அல்லூர், 9. திருச்சி திரு. என்.ரெங்கராச பட்டர், திருவரங்கம், 10. திருச்சி மாவட்டம் திரு. டி.என்.சாம்பமூர்த்தி சிவாச்சாரியார், தென்னிந்திய அர்ச்சகர் சங்க செயலாளர், 11. சென்னை திரு..சுந்தரராசபட்டர், சிறீநிவாசப் பெருமாள் திருக்கோயில், நாச்சியார் கோயில், 12. தஞ்சை மாவட்டம் திரு. நா.முருகவேள், ஆசிரியர், திருக்கோயில், இந்து சமய அறநிலைய ஆணையர் அலுவலகம், சென்னை-34, 13. ஆணை யரின் இணை நேர்முக உதவியாளர், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை, சென்னை-34 ஆகியோர் இக்குழுவின் உறுப்பினராவார்கள்.

இந்தக் குழு அர்ச்சகர்களுக்கு ஆகமப் பயிற்சி அளிப்பதற்கான செயல்திட்டங்களை வகுத்து அரசுக்கு 02.06.1984ஆம் நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

(வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை.)

இக்குழு பல பரிந்துரைகளை வழங்கியது. தமிழ்நாட்டில் அய்ந்து இடங்களில் அர்ச்சகர் பயிற்சிக் கூடங்களை நிறுவிட வேண்டும் என்றும், அர்ச்சகர்களுக்குக் குறைந்த பட்சம் ஊதியம் மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உள்ளிட்ட பல பரிந்துரைகளை இக்குழு அரசுக்கு அளித்தது. அர்ச்சகர் பயிற்சிக்கான பாடத்திட்டங்களையும் அக்குழு வகுத்துக் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து பழனி கோயிலில் ஆகமக் கல்லூரி அமைக்கப்பட்டு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் 1984இல் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அறிவிப்புகள் பல கட்டங்களில் இருந்தாலும், நடைமுறைக்கு வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

No comments:

Post a Comment