புதுடில்லி, ஆக.11 பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவைக்கு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர்.
புதிய வேளாண் சட்டங்கள், பெகாசஸ் விவகாரம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளால் நாடாளுமன்றம் தினந்தோறும் முடங்கி வருகிறது. 9.8.2021 அன்று வழக்கம்போல அமளி நடைபெற்று நாடாளுமன்றம் முடங்கியது.
இதற்கிடையே மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் சண்முகம் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் (9.8.2021) கருப்பு சட்டை அணிந்து அவைக்கு சென்றனர்.
இதுகுறித்து திருச்சி சிவா கூறுகையில், மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்ற அலுவல்கள் நடைபெறாமல் உள்ளன.
பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வலியுறுத்தி வருகிறோம். காப்பீட்டுத்துறையின் லட்சக்கணக்கான தொழிலாளர்களை பாதிக்கும் காப்பீட்டு மசோதாவையும் எதிர்க்கிறோம். இதனால் கருப்பு சட்டை அணிந்து எங்களது எதிர்ப்பை பதிவு செய்தோம் என்றார்.
கோவா தேர்தல் பார்வையாளராக
ப.சிதம்பரம் நியமனம்
பனாஜி, ஆக.11 கோவா மாநிலத்தின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பார்வையாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும், மேனாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், கோவா மாநில தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கான உத்தரவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளரான கே.சி.வேணுகோபால் 8.8.2021 அன்று பிறப்பித்தார்.
பா.சிதம்பரம், கோவாவில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு பணிகள் மற்றும் தேர்தல் யுக்திகளை மேற்பார்வையிடுவார் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment