லண்டன், ஆக. 10- சீனாவின் உகானில் முதன்முதலில் தோன்றிய கரோனா வைரஸ் பின்னர் படிப்படியாக மாறுபாடு அடைந்து தற்போது பல்வேறு வடிவங்களில் மக்களை தாக்கி வருகிறது.
இந்த மாறுபாடுகளுக்கு கிரேக்க எழுத்துக்களை கொண்டு பெயர் சூட்டப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஈட்டா, லோட்டா என பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன. கிரேக்க எழுத்து வரிசையில் 24 எழுத்துக்கள் உள்ளன. ஆனால் கரோனா தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருவதால், இந்த எழுத் துக்களுக்குப்பிறகும் பெயர்கள் தேவைப்படும் என தெரிகிறது. அவ்வாறு தேவைப்பட்டால் நட்சத்திர கூட்டங்களின் பெயர் சூட்டுவதற்கு பரிசீலிப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் டெல்டா
கரோனா வைரசின் தாக்கம் தீவிரம்
சிட்னி, ஆக. 10- ஆஸ்திரேலியாவில் கடந்த சில வாரங் களாக கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்டா வகை கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது. இந்நிலையில், மக்கள் தொகை அதிகமுள்ள நியூசவுத்வேல்ஸ், விக்டோ ரியா, குயின்ஸ்லாந்து ஆகிய மாகாணங்களில் டெல்டா வகை கரோனா வைரசின் தாக்கம் தீவிரமாகியுள்ளது.
குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மட்டும் 8.8.2021 அன்று ஒரே நாளில் 262 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் கடந்த 6 வார காலமாக ஊரடங்கு அமலில் இருந்த போதிலும், வைரஸ் பரவல் குறைந்த பாடில்லை.
இதுகுறித்து நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தின் முதல் அமைச்சர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், ‘‘சுகாதார விதிகளை பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அவசிய காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள்’’ என்றார். இதனிடையே குயின்ஸ்லாந்து மாகாணத்தின் கெய்ரன்ஸ் நகரில் ஒருவருக்கு இதுவரை கண்டிராத புதிய வகை கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த நகரில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment