ஊழல்களை யார் செய்தாலும் தண்டனையோடு சொத்துகள் பறிமுதல் செய்யப்படவேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 11, 2021

ஊழல்களை யார் செய்தாலும் தண்டனையோடு சொத்துகள் பறிமுதல் செய்யப்படவேண்டும்!

வெள்ளை அறிக்கை - வேளாண் தனி  பட்ஜெட் தி.மு.. ஆட்சியின் சிறப்புக்கு எடுத்துக்காட்டுகளே!

தஞ்சையில்  திராவிடர் கழகத் தலைவர் பேட்டி!

தஞ்சை, ஆக.11 -ஊழல்களை செய்தவர்கள் யாராக இருந் தாலும், வெறும் தண்டனையோடு முடிந்துவிடாமல், அவர்களுடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (10.8.2021) தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறியதாவது:

அனைவருக்கும் வணக்கம்.

இந்த கரோனா காலகட்டத்தில் ஒரு நீண்ட இடை வெளிக்குப் பின்னால், தஞ்சை செய்தித் தோழர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஏனென்றால், எத்தனையோ சிக்கல்கள் இருக்கின்ற நேரத்திலே கூட நம்முடைய செய்தியாளர்களான தோழர் கள் உயிரையும், தங்கள் உடல்நலத்தையும் பொருட் படுத்தாமல், எல்லா இடங்களிலும் அவ்வப்பொழுது திரட்டு கின்ற செய்திகள்தான் மிகப்பெரிய அளவிற்கு இன்றைக்கு ஒரு நல்ல நிலையை உருவாக்கியிருக்கின்றது. தமிழ்நாட் டில், இன்றைக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இருக்கின்றன; கரோனா நோயாளிகளின் எண் ணிக்கை குறைந்திருக்கிறது.

எல்லோரும் முகக்கவசம் அணிவது மிகவும் முக்கியம்!

ஆனால், தஞ்சை போன்ற சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகமாக இருப்பது வருந்தத்தக்கது. கூடுமானவரையில், எல்லோரும் முகக்கவசம் அணிவது மிகவும் முக்கியமாகும்.

கிராமப் பகுதிகளில் பல இடங்களை நான் பார்க்கும் பொழுது, முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருக்கிறார்கள். ஆகவே, அதனை கட்சி வேறுபாடில்லாமல், ஒரு மக்கள் இயக்கமாக, இந்த இயக்கத்தை நடத்தவேண்டும். அதுதான், மூன்றாவது அலை வருவதைத் தடுக்க முடியும்.

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான், கரோனாவினுடைய மூன்றாவது அலையை தடுக்க முடியும்

நம்முடைய முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் சொன்னதைப்போல, என்னதான் அரசாங்கம் கட்டுப் பாடுகளை உருவாக்கினாலும்கூட, மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான், கரோனாவினுடைய மூன்றாவது அலையை நாம் தடுக்க முடியும்.

ஆகவேதான், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள் வதில், தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. அதுபோன்று ஒவ்வொரு துறையிலும் அதிகாரிகள் பணி செய்து கொண்டிருக்கிறார்கள். ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.

எனவே, செய்தியாளர்களான உங்கள்மூலம் விடுக் கின்ற வேண்டுகோள், கிராமப் பகுதிகளில் விழிப்புணர்வு வரவேண்டும். முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருக்கிறார்கள்; அப்படியே ஒரு சிலர்  முகக்கவசம் அணிந் தாலும், அதனை சரியாக அணியாமல் இருக்கிறார்கள்.

அடுத்தபடியாக, மிக முக்கியமாக சொல்லவேண்டியது என்னவென்றால், நம்முடைய நாட்டில், நேற்று (9.8.2021) மிக முக்கியமான சம்பவம் நடந்திருக்கிறது.

எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டக் கூடிய அளவிலே, நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய அறிவுறுத்தலின் பேரில், நிதியமைச்சராக இருக்கக்கூடிய டாக்டர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், சிறப்பான வகையில் ஒரு நிதிநிலை வெள்ளை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

வரவு - செலவு திட்டத்திற்கு

இது முன்னோடி -வெள்ளை அறிக்கை!

அந்த அறிக்கை எல்லா ஏடுகளிலும் இன்று வெளிவந்திருக்கிறது என்று சொன்னாலும், இது அடுத்த படியாக வரக்கூடிய பட்ஜெட் என்ற வரவு - செலவு திட்டத்திற்கு இது முன்னோடியாகும்.

இதில் இரண்டு செய்திகள் வரவேற்கக்கூடியது - பாராட்டத்தகுந்தவை.

அது என்னவென்று சொன்னால்,

முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களுடைய தலை மையில் அமைந்திருக்கக் கூடிய இந்த அரசு, ஒரு வெளிப்படையான, வெளிப்படைத் தன்மையாக - எதையும் உள்ளார்ந்த வகையில் செய்வது - வெளியில் ஒன்று சொல்வது என்று இல்லாமல், வெளிப்படையாக மக்கள் மத்தியில் கொண்டு வந்து வைக்கிறோம் என்பதற்கு அடையாளமாகடிரான்ஸ்பரன்சி' என்று சொல்லக்கூடிய நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் என்று, வெளிப்படையாகச் சொல்லியிருப்பது ஒன்று.

இரண்டாவது, ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டுமானால், பிரச்சினை இருக்கிறது என்று ஒப்புக் கொள்ளவேண்டும். 120 பக்கங்கள் கொண்ட இந்த வெள்ளை அறிக்கையில், சொல்லியிருக்கிறார்கள்.

ரூ.5,70,189 கோடி என்று சொன்னால், எத்தனை பூஜ்ஜியம் என்று போட முடியாத அளவிற்கு இருக்கிறது.

இதற்கு என்ன காரணம்?

பொதுக்கடன் நிலைமை அதிகமாக இருப்பது என்பதுதான்.

அதுமட்டுமல்ல, இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் நண்பர்களே, குறிப்பாக சொல்லவேண் டுமானால்,

எல்லோரும் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். செய்தித் தாள்களிலும் அதுபற்றி வெளி வந்திருக்கிறது. இந்த அறிக்கையை நான் படித்தபொழுது, மிக முக்கியமான பகுதியாக இருப்பது,

வெள்ளை அறிக்கையின் முடிவுரையில்...

இதனுடைய முடிவுரை என்ற ஒன்றில், தெளிவாக ஒன்றைச் சொல்கிறார் நிதியமைச்சர்.

அந்த வெள்ளை அறிக்கையில், கையெழுத்து போட்டு வெளியிட்டு இருக்கிறார் நிதியமைச்சர்.

அதற்கான விளக்கத்தையும் அதில் சொல்லியிருக் கிறார். எதற்காகக் கையெழுத்துப் போட்டிருக்கிறார் என்றால், இந்தத் தகவல்களுக்கு நான் முழுப் பொறுப் பேற்கிறேன் என்கிற அளவில்!

இது இந்தியாவிலேயே வேறு எங்கும் நடைபெறாத அமைதி புரட்சியாகும்.

அதுமட்டுமல்ல, இப்பொழுது இருக்கின்ற நிலவரங்கள் எப்படி இருக்கின்றன என்பதை எடுத்துச் சொல்லிவிட்டு, அடுத்து முடிவுரையில் என்ன சொல்லுகிறார் என்றால்,

இவ்வளவு மோசமாக இருந்தாலும், இது அச்சுறுத்து வதற்காக அல்ல. உண்மை நிலையை நாம் எதிர்கொள் கிறோம் என்று காட்டுவதற்கு என்று தெளிவுடன் சொல்லிவிட்டு,

இதன்மூலம், நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறு தியிலிருந்து பின்வாங்குவதற்கோ அல்லது செய்யாமல் இருப்பதற்கோ வியாக்கியானம் அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

ஏழாண்டு கால அநீதிகளை சரிப்படுத்துவோம். அந்தத் துணிச்சல் எங்களுக்கு இருக்கிறது

கடந்த ஏழு ஆண்டுகளில் நடந்த தவறுகள்; போதாமைகள் - ஊதாரித்தனம் - பொருளாதார அடிப்படை இல்லாது நடந்துகொண்ட முறை - சட்டமன்றத்தினுடைய ஒப்புதலோ மற்றவையோ இல்லாமல் செய்யப்பட்ட செலவுத் தொகைகள் - இவை போன்று மறுபடியும் திரும்ப வரக்கூடாது என்பதற்கு, இந்த ஆட்சிக்கு மட்டுமல்ல, எல்லா ஆட்சிகளுக்கும் வழிகாட்டக் கூடிய வகையிலே, சிறப்பாக இந்த ஆட்சி, முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், சிறப்பாக நடத்துவோம். வருகின்ற அய்ந்தாண்டு காலத்தில், நாங்கள் இதனை ஒழுங்குபடுத்துவோம். ஏழாண்டு கால அநீதிகளை சரிப்படுத்துவோம். அந்தத் துணிச்சல் எங்களுக்கு இருக்கிறது - அதற்கான திட்டம் இருக்கிறது - காரணம், நல்ல அறிஞர்கள் கொண்ட ஒரு அறிவுரைக் குழு, உலக அறிஞர்களைக் கொண்ட, நிதி அறிஞர்களைக் கொண்ட அறிவுரைக் குழு இருக்கிறது என்றெல்லாம் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

ஆகவே, அருமையான ஒரு சிறப்பான ஒரு சூழ் நிலையில் இருக்கக்கூடிய இந்த முயற்சி வரவேற்கத்தகுந்தது.

நோய்நாடி, நோய் முதல் நாடுதல் என்பது மிக முக்கியம்.

அதுபோல, முதலில் என்ன பிரச்சினை என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டி. அதற்குப் பிறகு 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கலாக இருக்கிறது.

வரியின்மூலமாக மக்களுக்கு

நன்மையைச் செய்யவேண்டும்

வரி விதிப்பு என்பது ஒரு அரசாங்கத்திற்கு இயல்பானது. ஆனால், அது எப்படி இருக்கவேண்டும் என்று சொன்னால், தாங்கக் கூடியவர்களும், தாளக் கூடியவர்களும், கொடுக்கக் கூடிய தகுதி உள்ளவர் களிடமிருந்து வரியை அதிகப்படுத்தி, வாய்ப்பில்லாத மக்களுக்கு அந்த வரியின்மூலமாக நன்மையைச் செய்யவேண்டும் என்பதுதான் ஒரு நல்லாட்சியி னுடைய அடையாளம் - மக்களாட்சியினுடைய சிறப்பு.

எனவே, அதற்குரிய வாய்ப்புகளை அந்த முடிவுரையில் தெளிவாகவே சுட்டிக்காட்டியிருக்கிறார்.

எனவேதான், இதை சரிப்படுத்துவோம் என்று சொல்லியிருக்கிறாரே தவிர - தீர்வு காண முடியாத அளவிற்கு இருக்கிறோம்  என்று அவர் சொல்லிவிட்டுப் போகவில்லை.

வருகின்ற அய்ந்தாண்டு காலங்களில் நிச்சயமாக இதை சரிப்படுத்துவோம் என்று சொல்லக்கூடிய அந்தத் தன்னம் பிக்கை, தெளிவு, துணிவு, அதற்குரிய ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் இருப்பது பாராட்டத்தகுந்தது.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்து, நூறு நாள்கள்கூட ஆகவில்லை. அதற்குள் இந்தப் பிரச்சினை.

அதேபோன்று, இது டெல்டா மாவட்டமாகும். விவசாயி களுடைய பிரச்சினைகள் தீராது இருக்கின்ற ஒரு சூழலில்,

இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு சிறப்பான மற்றொரு திட்டம் என்னவென்றால், வேளாண்மைக்கென்று தனி பட்ஜெட் போடுகிறார்கள்.

வேளாண்மைக்குத் தனி பட்ஜெட்

ஏற்கெனவே ஒன்றிய அரசில், இரயில்வே பட்ஜெட் தனியாக இருந்தது - பொது பட்ஜெட் தனியாக இருந்தது.  ஆனால், இரண்டையும் சேர்த்துவிட்டார்கள்.

ஆனால், இங்கே வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் என்று வரவு - செலவு திட்டத்தைப் போடுகிறார்கள்.

இது விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அளவிற்கு வரவேற்பைப் பெறுவது மட்டுமல்ல - எப்பொழுது எதைச் செய்வது என்பதற்கு - விவசாயிகளை பெருமளவில் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

இந்தியத் தலைநகரில் போராடும் விவசாயிகளை ஒருமுறை கூட சந்திப்பதற்குத் தயாராக இல்லை பிரதமர். விவசாயிகளும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பிரச்சினைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன 15 நாள்களில் சில மசோதாக்களை வேக வேகமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். கூச்சல் குழப்பத்தில் அது என்ன மசோதா என்று யாருக்குமே தெரியாது. இப்படிப்பட்ட  ஒரு ஜனநாயகம் நடைபெறும் நாட்டில், முறையாக எல்லாவற்றையும் மக்களுக்கு அறிவித்து, அந்த மக்கள் மத்தியில் ஒரு புதுமையைப் புகுத்தி, இது மக்களுடைய அரசு என்று மக்கள்  எந்தெந்த நம்பிக்கை வைத்து வாக்களித்தார்களோ, அவை அத்தனையும் செய்யக்கூடிய அளவிற்கு தி.மு.. அரசு இருப்பது பாராட்டத் தகுந்தது.

அந்த வகையிலே நிச்சயமாக இந்த வாய்ப்புகள் வரவேற்கத்தகுந்த ஒரு வாய்ப்பு.

வரவிற்கு ஏற்ப செலவுசெலவிற்கு ஏற்ப வரவு!

நிதிநிலை அறிக்கை சிறப்பாக இருக்கும். அதுமட்டு மல்ல, நான் பொருளாதார மாணவன். அந்த வகையிலே உங்களுக்கு நான் சொல்லுகிறேன், தனியாருடைய வரவு - செலவுத் திட்டத்திற்கும், அரசாங்கத்தினுடைய வரவு - செலவுத் திட்டத்திற்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு.

முதலில், வரவிற்கு ஏற்ப செலவு தனியாருடைய பட்ஜெட்.

செலவிற்கு ஏற்ப வரவு - அதுதான் அரசாங்கத்தினுடைய பட்ஜெட்.

எனவே, செலவு கூடுதலாக இருப்பது என்பதைப் பார்த்து யாரும் பயப்படவேண்டிய அவசியமில்லை. ஆனால், அந்த செலவு எதற்காக என்பது மிக முக்கியம்.

நேற்று (9.8.2021) வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில், புதிய கடனை மேலும் அதிகமாக வாங்கி, அந்தக் கடனை எதற்காகப் பயன்படுத்தினார்கள்? ஆக்கப் பூர்வமான கட்டுமான வளர்ச்சிக்கோ, முதலீடு போன்ற, கல்வி போன்ற, மருத்துவம் போன்ற முதலீடுகளுக்காக அல்ல - மாறாக, ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டியைக் கொடுப்பதற்காக.

நாள் ஒன்றுக்கு நாம் எவ்வளவு வட்டிக் கொடுத்திருக் கிறோம் என்று சொல்லும்பொழுது, ஒவ்வொருவருடைய தலையிலும், 2  லட்சம் கோடி ரூபாய் அமைந்திருக்கின்றது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வரும்பொழுது, இது பெரிய அபாய உணர்வையும், ஆபத்தும் இருக்கிறது என்று சுட்டிக்காட்டி,

அதேநேரத்தில், எங்களால் இதற்குத் தீர்வு கண்டு, விடை காண  முடியும். ஆனால், கால அவகாசம் அதற்கு வேண்டும் -அதை செய்வோம் என்ற அளவிற்கு வந்திருப்பது சிறப்பானது.

அந்த வகையிலே, நல்ல தொடக்கத்தோடு இருக்கின்ற ஆட்சிக்கு வாழ்த்துகளைச் சொல்லி,

மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று மிரட்டுகிறார்கள்!

டெல்டா மாவட்டத்தில், மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று சொல்லி மிரட்டிக்கொண்டு, இன்னமும் நம்முடைய உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகப் போராட்டங்களை நடத்த வேண்டிய அளவிற்கு இருக்கிறது.

பாம்புக்குத் தலை, மீனுக்கு வால் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஒன்றிய அரசினுடைய நீர் வளத்துறை மற்றவைகள் இருக்கின்றன.

குறுகிய காலத்தில், சிறப்பான முதலமைச்சர் என்று பெயர் பெற்றிருப்பது பெருமைக்குரியது

எனவேதான், இந்த சூழ்நிலையில், ஒரு அற்புதமான நல்லாட்சி அமைந்திருப்பதை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த ஆட்சிக்கு எல்லாத் தரப்பு மக்கள் மத்தியிலும் ஆதரவு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான், முதலமைச்சர் அவர்கள் அல்லும் பகலும் ஓய்வெடுக்காமல் மிகப் பெரிய அளவிற்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு குறுகிய காலத்தில், சிறப்பான முதலமைச் சர் என்று பெயர் பெற்றிருப்பது பெருமைக்குரியது.

எனவேதான், இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி யிருக்கின்ற நாம், நன்றாக இந்த ஆட்சியைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மக்கள் ஒத்துழைப்புக் கொடுக்கவேண் டும் என்பதை உங்கள் மூலமாக வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

பாரத மாதாவுக்கு நினைவாலயமா?

செய்தியாளர்: பாரத மாதாவுக்கு நினைவாலயம் கட்டுகிறோம் என்கிறார்களே?

தமிழர் தலைவர்: நினைவாலயத்தைவிட, மிக முக்கிய மானது, அடிப்படையானது என்னவென்றால், தமிழ்நாட் டைப் பொறுத்தவரையில், தமிழ்மொழி செம்மொழி.

முத்தமிழ் கலைஞர் அவர்கள் அரும்பாடுபட்டு, தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி பெற்றார். அதன்மூலம்தான், சமஸ்கிருதம்தான் செம்மொழி என்று அறிவிக்கப்படக் கூடிய சூழல் ஏற்பட்டது.

ஆனால், அந்தத் தமிழ் மொழியான செம்மொழிக்கு, ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது.

யாரும் பேசாத மொழியான சமஸ்கிருதத்திற்கு 643 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது.

அதேநேரத்தில், தமிழ்மொழியான செம்மொழிக்கு 22 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. அதுவும் போராடிய பிறகு. இப்படித்தான் பாரத  மாதாவின் கதி இருக்கிறது.

எனவேதான், இது எதற்குப் பயன்படும்? மண்ணின் ஒருமைப்பாட்டைவிட, மக்களின் ஒருமைப்பாடு என்பது மிகவும் முக்கியம்.

இன்னமும்கூட, நம்முடைய நாட்டிலிருந்து சென்று, ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் என்ன ஜாதி என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். மகளிர் ஹாக்கிப் போட்டியில் பங்கேற்ற வந்தனா கட்டாரியா போன்றவர்களுக்கு ஏற்பட்ட ஜாதிக் கொடுமைகளை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

ஆகவேதான், பாரத மாதாவிற்கு கோவில் எழுப்பு வதைவிட, பாரத மாதாவின் புதல்வர்கள், பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்  என்பதைப்பற்றிய சிந்தனை - நல்ல அரசுகளுக்கு வேண்டும்.

நிதியமைச்சரின் வெள்ளை அறிக்கையில் மேனாள் அமைச்சரின் வேலுமணியின் ஊழல் சேர்க்கப்படவில்லையே!

செய்தியாளர்: .தி.மு.. முன்னாள் அமைச்சர் வேலுமணி  10 ஆயிரம் கோடி ஊழல் செய்திருக்கிறார் என்று தி.மு.. குற்றம்சாட்டியிருந்தது. அதை நேற்று (9.8.2021) வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் வெளியிடவில்லை என்று நிறைய பேர் அதிருப்தியில் இருக்கிறார்களே அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: அதுகுறித்து தகவல் இல்லை. மிகத் தெளிவான ஒரு செய்தி என்னவென்றால், எப்படியெல்லாம் பணம் செலவழிக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லும்பொழுது, நான் தொடக்கத்தில் சொன்னபொழுது, கூடுதலாக செலவு ஆவதைப்பற்றி கவலையில்லை. ஒரு அரசாங்கம் பற்றாக்குறை பட்ஜெட்டைப்பற்றி கவலைப்படவேண்டியதில்லை. ஆனால், பற்றாக்குறை பட்ஜெட்டாக இருந்தாலும், அது ஆக்கப்பூர்வமான செலவினங்களாகவே, கல்வியை முதலீடு என்று சொல்கிறோம் - அதுபோன்று முதலீடு செய்யக்கூடிய செலவீனம் இல்லாமல், அவர்கள் செய்ததெல்லாம் எப்படி என்றால், ஓட்டைகள் போயிருப்பது போன்று,

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை (குறள் 478)

ஓட்டையில் நிறைய போகின்ற அளவிற்கு வந்து, ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்கிறேன்.

மின்சாரத் துறையை எடுத்துக்கொள்வோம்,

இரண்டு ரூபாய் சொச்சம் இருக்கும் ஒரு யூனிட் மின்சாரத்தை., 12 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். அதுமட்டுமல்ல, மின் மிகை மாநிலம் என்று சொல்லிவிட்டு, அவர்களுடைய ஆட்சியில், ஒரு புதிய மின் தொழிற்சாலை, புனல், அனல், ஹைட்ரோ, தெர்மல், ஆட்டோமிக், காற்றாலை இப்படி பல வகையில் மின்சாரத்தைத் தயாரிக்கலாம். இதில் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்து, அதிலிருந்து ஒரு புதிய திட்டத்தை உருவாக்கினோம் - அதற்காக செலவு செய்திருக்கிறோம் என்று சொன்னால், சரி

முகக்கவசம் வாங்கியதில்கூட பணத்தை அடித்திருக்கிறார்கள்...

அதுபோன்று எதுவுமே கிடையாது. முகக்கவசம் வாங்கியதில்கூட பணத்தை அடித்திருக்கிறார்கள். உயர்நீதிமன்றமே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இதுபோன்று நிறைய எடுத்துச் சொல்லலாம்.

இதில் பாராட்டவேண்டிய விஷயம் என்னவென்றால், இதை ஒரு அரசியல் அறிக்கையாக ஆக்கவில்லை. ஒரு நல்ல அரசாங்கம் நடத்தும்பொழுது, அதை எப்படி நடத்தவேண்டும் - எப்படி செயல்படவேண்டும் என்று கொள்கையளவில் கொண்டு போகிறார்களே தவிர,

பொலிட்டிக்கல் மோட்டிவேட்டட்' என்று சொல்கிற அளவிற்கு அரசாங்கத்தில் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. முந்தைய அரசாங்கத்தில் இப்படி இருந்தது என்று தெளிவாக சொல்லியிருக்கிறார் நிதியமைச்சர்.

இது ஒரு அரசியல் ஆவணமாக ஆக்காமல், இதை ஒரு பொருளாதார நிபுணர்களுடைய சிறப்பான அறிக்கையாக ஆக்கி, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான அளவிற்கு செய்திருக்கிறார்கள். ஆகவேதான், இதுபோன்ற செய்திகள் இனிமேல் நிறைய வரும். தோண்டத் தோண்ட வரும். கீழடி ஆய்வுகளைவிட நிறைய வரும்.

ஊழல் செய்து சம்பாதித்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட வேண்டும்!

செய்தியாளர்: .தி.மு.. மேனாள் அமைச்சர்கள் வீட்டில் நடைபெறும் வருமான வரி சோதனை என்பது பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்கி றார்களே?

தமிழர் தலைவர்: யாரைப் பழிவாங்குவதற்கு? ஏனென்றால், ஆதாரத்தோடு மாட்டியிருக்கிறார்கள். பிறகு என்ன பழிவாங்குவது! உயர்நீதிமன்றம் முகாந்திரம் இருக்கிறது, வழக்கு போடலாம் என்று சொன்ன பிறகுதானே வழக்குப் போட்டிருக்கிறார்கள். சோதனை செய்து வருமான வரித் துறையினர் பணம் எடுக்காமல் வந்திருக்கிறார்களா? பணம் எடுத்திருக் கிறார்கள். யார், யார் பினாமி என்ற தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

சாதாரண ஒரு அமைச்சருடைய மகன், ஹெலி காப்டர் வைத்திருக்கிறார் என்கிற தகவல்கள் வெளிவருகின்றன.

இதற்கு முன்பு அதுபோன்ற நிலை உண்டா?  இன் னுங்கேட்டால், ஜெயலலிதா அவர்கள் இருந்திருந் தால், ஹெலிகாப்டரில் இவர்கள் பறப்பார்களா? பறக்கின்ற ஹெலிகாப்டருக்குக் கீழே குனிந்திருந்த வர்கள் இவர்கள்.

ஆகவே, இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். மக்கள் பணத்தைத் திரும்ப வாங்குவதுதானே தவிர வேறொன்றும் இல்லை.

ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும், ஒரே ஒரு வேண்டுகோள் என்னவென்றால், நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது -  இதற்கென தனி நீதி மன்றம் வைத்து, சீக்கிரமாக விசாரணை செய்து, ஊழல் செய்து சம்பாதிக்கப்பட்ட சொத்துகள், உள் நாட்டில் இருந்தாலும், வெளிநாட்டில் இருந்தாலும் அந்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசாங்க உடைமைகளாக வேண்டும்.

நல்ல அளவிற்கு ஒருவர் கொள்ளையடித்துவிட்டு, கடைசியில் ஆறு மாதம் சிறைத் தண்டனை என்றால், பணத்தைப் பறிமுதல் செய்யவில்லை என்றால், யார் வேண்டுமானாலும் ஆறு மாதம் அல்ல ஆறு ஆண்டுகள்கூட சிறைக்குச் செல்வார்கள். அது முக்கியமல்ல.

ஆகவேதான், ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தீர்ப் பில் வழிகாட்டியிருக்கிறது. அதனைத் தெளிவாகச் செய்யவேண்டும் என்று உங்கள்மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

பொறுப்பான தலைவராக அண்ணாமலை தன்னை மாற்றிக் கொள்ளவில்லை!

செய்தியாளர்: தி.மு..வை சேர்ந்தவர்கள், பா...வை விமர்சனம் செய்தால், அடிமட்டம் வரையில் அவர் களுடைய தொழிலில் கை வைத்து நடவடிக்கை எடுக்கப் படும் என்று தஞ்சாவூரில் தமிழ்நாடு பா... தலைவர் அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: அவர்களுடைய ஜனநாய உணர்வு களுக்கு, அவர்கள் எந்த அளவிற்கு மக்களாட்சியைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்; எந்த அளவிற்கு அவர்கள் ஜனநாயகவாதிகள் என்று தங்களை நாடு முழுக்க அறிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பளித்ததற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறோம்.

மக்கள் அவரைத் தெளிவாகத் தெரிந்துகொள்வதற்கு நல்ல வாய்ப்பு. ஏனென்றால், அவர் இன்னமும் தன்னை ஒரு காவல்துறை அதிகாரியாக நினைத்துக் கொண்டி ருக்கிறாரே தவிர, ஒரு பொறுப்பான கட்சியின் தலைவராக அவர் தன்னை இன்னமும் மாற்றிக் கொள்ளவில்லை என்பதுதான் இதன்மூலமாகத் தெரிகிறது.

ஆனால், மறைக்காமல், நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று காட்டியிருக்கிறார் அல்லவா, அதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறோம்.

ஒரே ஒரு நீதிபதி முன் பொதுநல வழக்கு வந்தது என்பது கேள்விக்குறி!

செய்தியாளர்: சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு களை சரியாகப் பதிவு செய்யவில்லை என்று தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்களே?

தமிழர் தலைவர்: இதற்காக தலைமை நீதிபதியைப் பாராட்டவேண்டும். ஏனென்றால், இதுபோன்ற விஷயத்தில் மற்றவர்கள் என்ன செய்வார்கள், வெளியே தெரிந்தால், தங்கள் நிறுவனத்திற்கு இழுக்கு என்று மறைக்கப் பார்ப்பார்கள். இவர் மறைக்கவில்லை.

நல்ல கேள்வியை கேட்டிருக்கிறீர்கள், மிகவும் மகிழ்ச்சி.

நேற்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சம்பந்தமாக ஒரு வழக்கு வந்தது உயர்நீதிமன்றத்தில்.

உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பின்படி, நியமனம் நடந்த பிறகு, அதில் ஏதாவது கோளாறு இருந்தால்தான் வழக்குப் போட முடியும். ஆனால், அதற்கு முன்பே, விளம் பரத்தைப் பார்த்தவுடன் ஒரு வழக்கை தொடுக்கிறோம் என்று சொல்லி - இதற்கு முன் யார் வழக்குப் போட் டார்களோ, அவர்கள் மதுரையிலிருந்து போட்டிருக் கிறார்கள்.

அந்த வழக்கு பொதுநல வழக்கு. பொதுவாக பொதுநல வழக்கு - இரண்டு நீதிபதிகள் முன்புதான் விசாரணைக்கு வரவேண்டும். எப்படி ஒரே ஒரு நீதிபதி முன் அந்த வழக்கு வந்தது என்பது கேள்விக்குறி. விவரங்கள் தெரிந்த மத்தியில் இந்தக் கேள்விக்குறி மிக முக்கியமாக இருக்கிறது. அதனைக் கண்டுபிடிக்கவேண்டும்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு அதுதான் பதில்.

அதே வழக்கில், ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கக் கூடாது; அவர் நாத்திகர் - இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்று சொன்னவுடன், தலைமை நீதிபதியின் முதல் அமர்வு, இதுபோன்ற அக்கபோர் வழக்குகள் போடக்கூடாது - பொதுநல வழக்கு என்ற பெயரில், அதற்குப் பதிலாக, அவர் இனிமேல் அய்ந்து ஆண்டுகளுக்கு நீதிபதியின் முன் அனுமதியின்றிவழக்கு போடக்கூடாது என்று நீதிபதிகள் நிபந்தனை விதித்தார்கள்.

அது ஒரு பக்கத்தில் இருக்கிறது.

அதேபோன்று, இன்னொரு செய்தி - ஒரு தனி நீதிபதிமுன் அந்தப் பொதுநல வழக்கு விசாரிக்கப்பட்டது சரியா?

இதுவரை தனி நீதிபதிமுன் பொதுநல வழக்கு விசாரணை நடைபெற்றது கிடையாது.

அந்த வழக்குப் பொதுநல வழக்காகத்தான் கருதப் படவேண்டும்.

ஆகவே, இவர் கேட்ட கேள்விக்கு, ஒரு ஆதாரம் மட்டுமல்ல, கைபுண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை - இன்னொரு ஆதாரத்தையும் சேர்த்து பதிலாக வைக்கிறோம்.

ஆத்திகம் - நாத்திகம் - கடவுள் பிரச்சினையல்ல; மொழிப் பிரச்சினை!

செய்தியாளர்: கோவில்களில் தமிழில் அர்ச்சனைபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: அது வரவேற்கவேண்டிய விஷயம் தான். ஆனால், வரவேற்கிறோம் என்று சொல்வதிலும் கொஞ்சம் தயக்கம் இருக்கிறது.

ஏனென்றால், சுமித்குமார் சட்டர்ஜி என்று சொல்லக் கூடிய வங்காளத்தில் இருந்த மொழி உணர்வாளர் பெரிய நிபுணர். அவர் எழுதியிருக்கின்ற ஒரு புத்தகத்தில், பூஜை என்று சொல்கிறோமே, அது பூஜை அல்ல; பூசை தான் என்று.

அடிகளார்கூட அடிக்கடி சொல்வார், பூவும், நீரும் போட்டு வணங்குவது.

திருநாவுக்கரசர், அப்பர் அடிகள் அதுபோன்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில், தமிழில் அர்ச்சனை நடப்பதே ஒரு பெரிய விழாவாக இருக்கிறது.

தமிழிசையை வென்றோம் என்று சொன்னவுடன், ஆர்.கே.சண்முகம் அவர்கள் ஜெர்மனியில் இருந்தார். அவர் மகிழ்ச்சியாக இருந்தாராம். என்ன செய்தி என்று ஜெர்மன்காரர் கேட்டராம்.

தமிழிசை வென்றோம் என்று சொன்னாராம் ஆர்.கே. சண்முகம் அவர்கள்.

நீங்கள் தமிழ்நாடுதானே - தமிழிசையை வென்று விட்டோம் என்று சொல்கிறீர்களே எனக்குப் புரிய வில்லையே என்று அந்த ஜெர்மன்காரர் கேட்டாராம்.

காரணம், தமிழ்நாட்டில் தமிழ்தானே இருக்கவேண்டும்.

உடனே என்னைப் பார்த்து கேட்பார்கள், வீரமணிக்கு என்ன, அவர் நாத்திகர், அவருக்கென்ன இதுபற்றிய கவலை என்று.

இது ஆத்திகம் - நாத்திகப் பிரச்சினை அல்ல. இது மனித உரிமைப் பிரச்சினை.

சமஸ்கிருதம் தேவ பாஷையாம் - தமிழ் நீஷ பாஷையாம்.

தேவர்கள் - நீஷர்கள் என்று பேதத்தை உருவாக்கி, புரியாத மொழியில் அர்ச்சனை செய்ததோடு மட்டுமல் லாமல், தமிழில் இருந்த பூசையை - பூஜையாக்கி - இவ்வளவையும் செய்திருக்கின்ற நேரத்தில்,

இன்றைக்கு முதல் கட்டமாக, 47 கோவில்களில் தமிழில் அர்ச்சனை என்று வந்திருக்கிறது என்றால், போற்றி! போற்றி!! என்று சொன்னால், எல்லோருக்கும் புரிகிறது.

கோவிலுக்குப் போனவருக்கும் போற்றி என்றால், என்னவென்று தெரிகிறது. கோவிலுக்குப் போகாமல், உங்களைப் போன்ற செய்தியாளர்கள் தொலைக்காட்சியில் காட்டுவதைப் பார்க்கும் எங்களைப் போன்றவர்களுக்கும் போற்றி என்றால், என்னவென்று புரிகிறது.

ஆனால், கோவிலுக்குப் போனவர்களுக்குக்கூட சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்தால், புரிவதில்லை, மற்றவர்களுக்கும் புரிவதில்லை.

பெரியார் தான் கேட்டார், ‘‘கடவுளுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டுமல்லவா - தமிழ் மொழி தெரியாத கடவுளுக்கு இங்கென்ன வேலை'' என்று கேட்டார்கள்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் கோவில்களில் தமிழில் அர்ச்சனை என்பது நல்ல தொடக்கம்.

இது ஆத்திகம் - நாத்திகம் - கடவுள் பிரச்சினையல்ல. மொழிப் பிரச்சினை. தமிழ் மொழி செம்மொழி என்று சொல்லிவிட்டு, நடைமுறையில் உலகளாவிய நிலையில், 80 நாடுகளில் தமிழ் மொழி புழக்கத்தில் உள்ளது. உலகத்தில் அதிகமான நாடுகளில் தமிழ்மொழி புழக்கத்தில், செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற மொழியாகும்.

இன்னும்கேட்டால், தமிழில்தான் என்று சொல்ல வேண்டிய கட்டம் வரவேண்டும். ஏனென்றால், தமிழ்நாட் டில், தமிழ் மொழியில்தானே இருக்கவேண்டும். இதிலென்ன அதிசயம்.

கல்வி நிறுவனங்களின் நில ஆக்கிரமிப்புப்பற்றி..

செய்தியாளர்: நில ஆக்கிரமிப்பை கல்வி நிறுவனங்கள் செய்து கொண்டிருக்கின்றனவே, அதுபற்றி?

தமிழர் தலைவர்: இந்தக் கேள்விக்கு அரசாங்கம்தான் பதில் சொல்லவேண்டும். ஏனென்றால், நாங்களும் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறோம்.

சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவேண்டியது அரசாங்கத் தினுடைய கடமை. சட்டம் தன் கடமையை செய்யும்பொழுது, இன்னார், இனியர் என்று பார்க்கவேண்டிய அவசியமில்லை.

எங்கள்மீதும் எத்தனையோ வழக்கைப் போட்டார்கள்; அந்த வழக்கை சந்தித்து, அதில் வெற்றி பெற்றோம்.

நாங்கள் நடத்துகின்ற பாலிடெக்னிக் இருக்கும் இடத் திற்காக அரசாங்கம் வழக்குப் போட்டு, தலைமை நீதிபதியாக இருந்த சுபாஷன் ரெட்டி உத்தரவு போட்டு, வழக்கு நடை பெற்றது. பெண் கல்விக்காக அவர்கள் கல்வி நிறுவனம் நடத்துகிறார்கள் - ஆகவே, அந்த இடத்தை அவர்களுக்கே விலைக்குக் கொடுங்கள் என்று சொன்னார்கள். உடனடியாக அது செயல்படுத்தப்பட்டது.

ஆகவேதான், உடனடியாக செயல்படுத்தப்பட்டது - எல்லா உத்தரவையும் பார்க்கவேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டு அரசிற்கு உண்டு.

பட்டுக்கோட்டை அழகிரி

செய்தியாளர்: பட்டுக்கோட்டை அழகிரி மணிமண்டபம் மிகவும் சீர்கேடு அடைந்துள்ளதே?

தமிழர் தலைவர்: இதுகுறித்து நாங்களே எழுதியிருக் கிறோம். பட்டுக்கோட்டை அழகிரிதான், கலைஞருக்கே வழிகாட்டி.

நல்ல கேள்வி கேட்டீர்கள்.

அரசாங்கம் உடனடியாக அறிவித்து, அதனை சீர மைத்து, விரிவாக்கவேண்டும். வெறும் மணிமண்டபம் என்பதினால், பல பேர் அங்கே செல்வது கிடையாது. அது பயன்படக் கூடிய அளவிற்கு அரசாங்கம் அதனை செய்யவேண்டும்.

செய்தியாளர்: பட்டுக்கோட்டை அழகிரி உடல் புதைக்கப்பட்ட இடத்தை சொல்கிறேன்?

தமிழர் தலைவர்: , அவர் உடல் புதைக்கப்பட்ட இடமா? அந்த இடத்தை நாங்கள்தான் சென்ற முறை ஒழுங்குபடுத்தினோம். அனுமதி வாங்கி, சீரமைத்து கல்வெட்டுகளைப் பதிக்கின்ற பணிகளை அரசு அனுமதி யோடு திராவிடர் கழகம் செய்யும்.

மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுப்போம் - மாநக ராட்சி அதனை செய்யத் தவறினால், திராவிடர் கழகம் செய்யும்.

பெரியார் அய்யா அவர்களே அந்த இடத்தில் நின்று கொண்டு சொன்னதுதான்.

அன்றைய மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வடுக நாதன் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றபொழுது, முடிவு செய்து, அந்த இடத்தைச் சீரமைத்தோம்.

உங்கள் யோசனைக்கு நன்றி!

-இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

No comments:

Post a Comment