'துக்ளக்' வார இதழில் ஒரு விளம்பரம் வெளி வந்துள்ளது. 'இவர்களை முன்னுதாரணமாகக் கொள்வோம்! - அள்ளித் தாருங்கள்" என்பது அந்த விளம்பரத்தின் தலைப்பாகும்.
அவ்வையார் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 'ஜாதி இரண்டொழிய வேறில்லை' என்ற பாடல் அது. இட்டார் பெரியோர், இடாதார் இழி குலத்தோர்' என்ற பாடலை எடுத்துக்காட்டி, நடைமுறையில் இருக்கும் ஜாதிமுறை சாடப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம்.
கரோனா துயர் துடைப்புப் பணிக்காக நன்கொடை அளித்தவர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
டி.வி. சுந்தரம் அய்யங்கார் நிறுவனங்கள் ரூ.25 கோடி என்பது அதன் தலைப்பு. தமிழ்நாடு ஆளுநர் உட்பட ஆறு பேர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டு, அவர்கள் அளித்த நன்கொடைத் தொகையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்து அந்த விளம்பரம் என்ன சொல்லுகிறது.
இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் ஜாதி ரீதியாகப் பார்த்தால் பிராமணர்கள். ஆனால் இவர்கள் யாரும் ஜாதியின் பெயரை முன்னிறுத்தி, நிதி வழங்கவில்லை. கடுமையான சூழலை மனதில் கொண்டு நிதி வழங்கிய உத்தமர்கள்.
"ஒரு தேசம் முன்னேற வேண்டுமென்றால் ஒரு ஜாதியைச் சாடுவதோ, ஒரு ஜாதியை தூக்கிப் பிடிப்பதோ கூடாது. ஏனென்றால் தேச நலனில் ஜாதிக்கும், மதத்திற்கும் இடம் கொடுக்கக் கூடாது" என்ற அறிவுரையும் இந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
தனது "எங்கே பிராமணன்" தொடரில், "பிராமணன் என்பவன் தான் கற்ற வித்தையை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து தர்மத்தின் அடிச்சுவட்டில் நடப்பவன்" என்கிறார் பிரபல எழுத்தாளர் சோ ராமசாமி என்று ஒரு பெட்டிச் செய்தியும் விளம்பரத்தில் நடு நாயகமாக இடம் பெற்றுள்ளது.
நோய்த்துயர் துடைப்புப் பணிக்கு நிதி வழங்கிய நல் உள்ளங்களுக்கு நன்றியும் பாராட்டும் உரித்தாகுக!
நன்கொடை அளித்தவர்கள் தங்கள் ஜாதிப் பெயர்களை வெளியிடவில்லை என்பதைப் பெருமையாகக் குறிப்பிட்டு விட்டு நன்கொடை அளித்த அனைவரும் "பிராமணர்கள்" என்று சொல்லியிருப்பது முரண்பாடு அல்லவா!
சோ ராமசாமி சொல்லியதும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. 'சோ' ஜாதி ஒழிப்புக்காரரா? 'உயர் ஜாதியின்' அடையாளமான பூணூலைத் தரிக்காதவரா?
ஜாதிகளைக் காப்பாற்றும் மனுதர்மத்தைத் தூக்கிப் பிடித்து அவர் எழுதவில்லையா? மனுதர்மம் என்பது பிர்மாவின் நெற்றியில் பிராமணனும், தோளில் சத்திரியனும், இடுப்பில் வைசியனும், காலில் சூத்திரனும் பிறந்தான் என்று கூறுவதுதானே?
ஒவ்வொரு வருணத்தானும் அவனவனுக்குரிய ஜாதித் தொழிலைத்தான் செய்ய வேண்டும் - மீறினால் அரசன் தண்டிக்க வேண்டும் என்று கூறப்படவில்லையா? இன்று வரை அத்தகைய மனுதர்மத்துக்காக வக்காலத்து வாங்குவோரை ஜாதி ஒழிப்பு வீரராக சித்தரிப்பது சரியானதுதானா?
நன்கொடையாளர்கள் தங்கள் ஜாதிப் பெயர்களைப் போடாததைப் பெருமையாகக் குறிப்பிடும் அந்த விளம் பரத்தில் முதல் பெயரே டி.வி. சுந்தரம் அய்யங்கார் நிறுவனங்கள் என்று போட்டு இருப்பது அசல் முரண்பாடு அல்லவா.
ஒரு பக்க அளவில் செய்யப்பட்ட விளம்பரத்திலேயே ஜாதியை ஒழிக்க முடியாதது ஏன்? முரண்பாடு ஏன்? என்ற கேள்வி எழுகிறதா இல்லையா?
1953இல் இதே டி.வி.எஸ். விழா ஒன்றில் - முதல் அமைச்சர் ராஜ கோபாலாச்சாரியாரும் (ராஜாஜி) காங்கிரஸ் தலைவர் காமராசரும் கலந்து கொண்ட விழா ஒன்றில் "சூத்திரர்கள் செய்யக் கூடிய மோட்டார் தொழிலை டி.வி.எஸ். சுந்தரம் அய்யங்கார் செய்கின்றார்?" என்று பேசியதும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த காமராசர் அந்த நிகழ்ச்சியிலேயே கண்டித்தார் (முருகு தனுஷ்கோடி எழுதிய "காமராஜ் சரித்திரம்" பக்கம் 144-145) என்ற வரலாறும் தெரியுமா?
ஒரு ஜாதியைத் தூக்கிப் பிடிக்கக் கூடாது- இன்னொரு ஜாதியை சாடுவதும் கூடாது என்று விளம்பரத்தில் கூறப்படும் கருத்து சரியானதுதான் - உண்மையில் அது வெறும் - விளம்பரத்துக்காக இருக்கக் கூடாது.
சங்கர மடத்திலிருந்து வெளிவர வேண்டும். தீண் டாமையை க்ஷேமகரமானது என்று கூறும் சந்திரசேகேந்திர சரஸ்வதியை ஜெகத் குரு என்றும் மகா பெரியவாள் என்றும் கூறும் வட்டாரத்தைச் சேர்ந்த 'துக்ளக்'கில் விளம்பரம் செய்வதுதான் முரண்பாடும் நகைச்சுவையின் உச்சமும் ஆகும்.
"ஜாதி ஒழிக!" என்ற முழக்கத்தை 'துக்ளக்'கிலும் 'தினமல'ரிலும், 'தினமணி'யிலும் வெளியிடச் செய்யுங்கள் பார்க்கலாம்.
No comments:
Post a Comment