கழகப் பொறுப்பாளர்கள் அனைவரது கடும் உழைப்பாலும் எடுத்துக்காட்டான ஒத்துழைப்பு நல்கையாலும், நமது பெரியாரியல் பயிற்சிவகுப்புகள் - பெரியார் பணிகளில் திராவிட நாற்றுக்கள் உருவாவதற்கு முழுக் காரணமாகவே இருந்தது.
எந்தப் பணியானாலும், முழு மனதோடு, உற்சாகத்துடனும் ஒரு கூட்டுக் குழு மனப்பான்மையுடன் இணைந்து பாடுபட்டு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்ற பாடத்தை நம் எல்லோருக்கும் இந்த கரோனா கொடுந்தொற்றுக் காலத்திலும் நமது நம்பிக்கையும் திட்டமிடுதலும் அறிவியலும் நமக்குக் கற்றுக் கொடுத்தன.
புதிய வரவுகளை இரு கரம் கூப்பி வரவேற்கும் நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக, முதலில் 10.8.2021 அன்று மாலை தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில், பெரியார் உயராய்வு மய்யத்தின் சார்பில், முதல் பரிசு, இரண்டாம் பரிசினைப் பெற்ற பயிற்சியாளர்களான திராவிட நாற்றுகளை அழைத்து - அமெரிக்காவின் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர், பொறுப்பாளர்கள் மிகுந்த அன்புடன் - நாம் கேட்காமலேயே அவர்களாக இளம் திராவிட நாற்றுக்களை உற்சாகப்படுத்த நன்கொடையாக அளித்ததொகை - சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி - 10.8.2021 மாலை சரியாக 4.30 மணிக்கு அரங்கத்தில் தனி நபர் இடைவெளி, முகக் கவசத்துடன் நடைபெற ஏற்பாடுகள் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய இயக்குநர் முனைவர் நம். சீனிவாசன் அவர்களும், கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் அவர்களும் இணைந்து தஞ்சை மாவட்டக் கழக தலைவர், மண்டலப் பொறுப்பாளர் ஆகிய அனைவரது கூட்டு உழைப்போடு நிகழ்வு ஏற்பாடுகள் நடத்திட மகிழ்ச்சியுடன் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் அவர்கள் தலைமையிலும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் மற்றும் பொறுப்பாளர்கள் இணைந்து கட்டுப்பாட்டோடு இந்த நிகழ்ச்சியை எளிமையாக நடத்த முன் வந்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது.
10.8.2021 மாலை 4.30 மணிக்கு துவங்கி 6 மணிக்கு முடிவடையும்.
முன் கூட்டியே வரும் (சுமார் 3 மணி அளவில்) பயிற்சியாளர்கள் அவர்கள் உடன்வரும் பெற்றோர், மற்றோர் அனைவருக்கும் பல்கலைக் கழக வளாகத்தினை சுற்றிகாட்டுவார்கள் தனி நபர் இடைவெளி கடைப்பிடிப்போடு.
இதுஒரு பொங்கல் போன்ற கழக விளைச்சலுக்குப் பிறகான அறிவுத் திருவிழா போன்றது! நாற்றுகளை பாதுகாப்பாய் களத்து மேட்டு நெல்லாக காணும் வரை.
சந்திப்போம் ஆகஸ்ட் 10ஆம் தேதி!
சென்னை
3.8.2021
No comments:
Post a Comment