மகளிரின் வினாக்களும், கருத்துகளும்; தமிழர் தலைவர் அவர்களின் விடைகளும், வாழ்த்துகளும்
சென்னை, அக். 9- மகளிருக்கான சிறப்பு பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில், வேலூர், காஞ்சிபுரம், கடலூர், புதுவை, தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் நெல்லை ஆகிய எட்டு மண்டலங்களுக்கான பயிற்சி வகுப்பு நிறைவு விழா 31.7.2021 அன்று மாலை 6.00 மணிக்கு கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக் கனி தலைமையில் நடைபெற்றது.
விழாவின் நிறைவில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சிமிகு நிறைவுரை ஆற்றினார்.
கேள்வி - பதில்
இப்பயிற்சி வகுப்பில் மகளிர் தோழர்கள் சிலர் எழுப்பிய கேள்விகளும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அளித்த பதில்களும் வருமாறு:
மாணவரின் கேள்வி:- சுஷ்மிதா:
இன்றைய காலகட்டத்தில் பெரியார் இருந்திருந்தால் இந்த சமூகத்தை பார்த்து மிகவும் மகிழ்ந்து இருக்கக்கூடிய செயல் எதுவாக இருந்திருக்கும்? மிகவும் வருத்தப்படக்கூடிய செயல் எதுவாக இருந்திருக்கும் ?
ஆசிரியர் அவர்களின் பதில்:
தன்னுடைய கருத்துகள் - சுயமரியாதைத் திருமணம், செங்கல்பட்டு மாநாட்டு தீர்மானங்கள் உட்பட அனைத்தும் இன்றைக்குச் சட்ட வடிவம் பெற்றிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்திருப்பார். அதே நேரத்தில் இன்னமும் பழைமைவாதிகள் பெண்களை அடிமைத்தனத்திற்கு ஆழமாய் ஆளாக்கி வைத்து இருக்கின்றார்களே என்று வருத்தப்பட்டு இருப்பார்.
“பெண்களே, நீங்கள் நகைமாட்டும் ஸ்டேண்டா?அலங்கார பொம்மைகளா? படுக்கையறை பதுமைகளா? என்றென்றும் சமையலறையிலேயே இருக்க வேண்டியவர்களா?” என்று கேட்டவர் தந்தை பெரியார். ஆனால், இவையெல்லாம் இன்றளவும் மாறவில்லை. ஒரு கம்யூனிட்டி கிச்சன் இருந்தால் 100 பேருக்கு ஒன்றாக சமைக்கலாம். நேரமும் மிச்சமாகும் என்று கூறினார். அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அடைய வேண்டிய இலக்கு இன்னும் வரவில்லை. ஆனால், கடந்து வந்துள்ள தூரம், கடக்க வேண்டிய தூரம் - இவைகளை வைத்துப் பார்க்கும் பொழுது வருத்தப்படுவது குறைவாகவும், மகிழ்ச்சி அடையக் கூடிய வெற்றிகள் அதிகமாகவும் அவர் வாழ்நாளில் பார்த்த நிறைவோடு மகிழ்ந்திருப்பார்.
பெண்களுக்கானத் தற்காப்பு கலைப் பற்றி
கேள்வி:- அன்புக்கனி:
கிராமத்து மக்களுக்குப் பகுத்தறிவு சிந்தனை அவ்வளவாக இல்லை. இங்கே ஒரு கூட்டம் நடத்தி பயிற்சி முகாம் நடத்த வேண்டும் அய்யா. பெண்களுக்கானத் தற்காப்புக் கலை பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும். இதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: தாராளமாக நடத்தலாம். உங்கள் விருப்பம் நிறைவேறும்.
பெண்களுக்கான சொத்துரிமை
கேள்வி:- வசந்தி:
பெரியார் வழி வந்தவர் தானே கலைஞர்? அவர், பெரியாரின் கொள்கைகளை, திட்டங்களை இன்னும் கொஞ்சம் அதிகம் நிறைவேற்றி இருக்கலாம் அல்லவா?
பதில்: அரசியல் என்று வரும் பொழுது அவருக்கு இருந்த காலகட்டத்தில் என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்து இருக்கிறார். ஜனநாயக அமைப்பு என்று வரும் பொழுது - தேர்தல் வாக்கு வங்கி இவை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது அவர் இவ்வளவு செய்து இருப்பது மிகவும் அதிகம். அதுவே பெரிய விஷயம். வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் செய்தார். 1929இல் செங்கல்பட்டு மாநாட்டில் பெரியார் அவர்கள் தீர்மானம் போடுகிறார் - பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று. அப்போது கலைஞர் அவர்களுக்கு வயது 5. 1924 இல் பிறந்தவர். 1989இல் சட்டம் இயற்றுகிறார் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி. பெரியார் பெண்களை ஆசிரியர்களாக ஆக்க வேண்டும் என்று விரும்பினார். அதை கலைஞர் நிறைவேற்றினார். பல எதிர்ப்புகளைச் சந்தித்து மாநில முதலமைச்சர் எல்லைக்குள் செய்ய வேண்டிய அத்தனையும் செய்தார். அவருடைய பணி என்பது சிறப்பானது. குறைவானதல்ல. ஆகவே, அதைக் குறைத்து மதிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. வேறு யாரும் செய்ய முடியாத அளவு நிறைய செய்து இருக்கிறார் கலைஞர். அதில் பெரும்பாலும் பெரியார் சிந்தனையில் உதித்தவை - பெரியார் சமத்துவபுரம் உட்பட.. அம்பேத்கர் அவர்கள் காலத்திலேயே பெண்களுக்கான சொத்துரிமை சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. கலைஞர் அவர்கள் அதை நிறைவேற்ற வழி வகை செய்தார். அங்கே அம்பேத்கர் அவர்கள் செய்து முடிக்க முடியாத படி சனாதனம் எதிர் வேலை செய்தது. இங்கே கலைஞர் செய்தது மிகப்பெரிய சாதனை!
பெரியாரைத் தாங்கிப் பிடியுங்கள்
கேள்வி:- யாழ்சுபா:
ஆண்கள் பெண்களுக்கு உரிமை கொடுக்கும் பொழுது அவர்களை சகோதரியாகவும், மகளாகவும் நினைத்துப் பார்த்து உரிமை கொடுக்க சொன்னீங்க அய்யா. இங்கே கிராமத்தில் ஆண்களுக்கே உரிமை இல்லாத நிலையாக இருக்கின்றது. ஆண்கள், எப்படி பெண்களை, மனைவியை நடத்துவது என்றும் தெரியாமல் இருக்காங்க. இதைப்பற்றி உங்கள் கருத்து?
பதில்: பெரியாரைப் படியுங்கள். பெரியாரைத் தாங்கிப் பிடியுங்கள். பெரியார் வழி நில்லுங்கள். வீட்டுக்கு வீடு பெரியார் உள் நுழைந்தால் போதும். இந்தப் பிரச்சனை தீரும். நாட்டுக்குள் புகுந்த பெரியார் அனைவரின் வீட்டுக்குள்ளும் போக வேண்டும்.
மூளைக்குள் போடப்பட்ட விலங்கு
கேள்வி:- குமுதா:
தந்தை பெரியார் ஜாதி ஒழிப்புக்காக நிறைய மாநாடு நடத்தி இருக்கிறார் என்பதை தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள் தந்தை பெரியாரின் “ஜாதி ஒழிப்புப் பணி” என்ற தலைப்பில், வகுப்பில் பட்டியலிட்டார். நீங்களும் நிறைய ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடுகள் நடத்தி இருக்கீங்க. நாங்கள் இருக்கின்ற தருமபுரி மாவட்டத்திலும் நடத்தினீர்கள். எத்தனை மாநாடுகள் நடத்தினாலும், பலபேர் “ஏம்மா, ஜாதியை ஒழித்து விட்டீங்களா? ஜாதி இன்னும் ஒழியலையே?” என்று நம்மை மட்டுமே பார்த்துக் கேட்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது அய்யா?
பதில்: ஜாதி என்பது வரையறுக்கப்பட்ட ஒரு கட்டடம் இல்லை - கடப்பாரை கொண்டு போய் இடித்துத் தள்ள. அது மூளைக்குள் போடப்பட்ட ஒரு வலிமையான விலங்கு. உங்களிடம் கேள்வி கேட்பவர்களிடம் நீங்கள் கேளுங்கள் - “சொந்த ஜாதியிலா டாக்டரைத் தேடுறீங்க? சொந்த ஜாதிக்காரன் கிட்டயா ஊசி போடுறீங்க? உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்று வரும் பொழுது உதவி செய்பவர் எந்த ஜாதியை சார்ந்த மருத்துவர், செவிலியர் என்று கேட்பதில்லையே; அங்கே எல்லாம் ஜாதி ஒழிந்து தானே இருக்கு. இரத்தம் தேவை எனில் அங்கு இரத்தம் கொடுப்பவர் எந்த ஜாதி என்று யாரும் கேட்பதில்லையே” - என்று சொல்லுங்கள். ஜாதி என்பது 5000 வருட நோய். அதை பெரியார் இயக்கம் தொடர்ந்து எதிர்த்துப் போராடி வருகிறது - 100 ஆண்டு கால தமிழ் நாட்டில் எந்தத் தலைவர்களும் இப்ப ஜாதி பெயர் போடுவதில்லை. இதுவே மிகப்பெரிய வெற்றி அல்லவா?
நிலத்தை பண்படுத்தினால் தான்
கேள்வி:- ஆர்.டி.முகில்:
ஆங்கிலேயர்கள் பெரியாருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தாங்க. பெரியார் ஏன் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை? பதவியிலிருந்து கொண்டு கொள்கை களைச் சட்டமாகக் கொண்டு வந்திருக்கலாம் அல்லவா?
பதில்: முதலமைச்சருக்கு அவ்வளவு அதிகாரம் கிடை யாது. முதலமைச்சராக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எதிர்த்து நின்று, ஓர் இயக்கத்தைப் பற்றி வெளியில் மக்களுக்குப் பிரச்சாரம் செய்து மக்களைப் பண்படுத்துவது என்பது மிக முக்கியம். முதலமைச்சர் என்பது விதை விதைக் கிற மாதிரி. அதற்கு முன்னால் நிலத்தை பண்படுத்தினால் தான் யார் வேண்டுமானாலும் விதைகளை நட முடியும். எனவே அரசியலில் வந்தால் ஓரளவுதான் செய்ய முடியுமே தவிர, அதையும் செய்யக்கூடிய பக்குவத்தை உண்டாக்க வேண்டும். சுயமரியாதை திருமணத்திற்குச் சட்ட வடிவம் கொடுத்த போது அதற்கு எதிர்ப்பு இல்லை. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு இப்பொழுது மிகப்பெரிய எதிர்ப்பு இல்லை. ஆரம்பத்தில் எதிர்த்தவர்கள் இன்று அமைதியாகி விட்டனர். ஆகவே வெளியிலிருந்து பக்குவப் படுத்துவது என்பது மிக முக்கியம். கரடுமுரடு - மேடு பள்ளம் எல்லாம் சரி செய்து, பக்குவம் ஆக்கி அதன் பிறகு விதை விதைக்கும் பணி தான் முக்கியம். பதவிக்குப் போனால் செய்ய முடியாது. மேலும் பதவிக்குப் போனால், அந்தப் பதவியைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி என்ற எண்ணம்தான் வருமே தவிர கொள்கையைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் வராது. ஏனென்றால், சிக்கல்கள் நிறைந்த இடம். அந்த சிக்கலில் இவ்வளவு நடத்தி இருக்காங்க - அண்ணாவும், கலைஞரும். வேலை வாங்குவது என்பது வேறு இடம். வேலை செய்பவர்கள் எல்லா இடமும் போகக்கூடாது. கண்ட்ரோல் ரூம் என்று ஒன்று இருக்கிறது - எல்லாவற்றிற்கும் வழிகாட்ட. அதைத்தான் இயக்கம் செய்தது - தந்தை பெரியார் அவர்கள் செய்தார். பதவிக்குப் போனால் சுயநலம் உண்டாகும். கொள்கையில் சமரசம் செய்ய வேண்டி வரும். அதனால் தான் தந்தை பெரியார் முதலமைச்சராக பதவி ஏற்கவில்லை.
மாநில பொறுப்பாளர்கள் வாழ்த்துரை
தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்):
“மாணவர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழாவின்போது தமிழர் தலைவர் அவர்கள் தெரிவித்த இந்த சிந்தனைதான் பெரியாரியல் மகளிர் பயிற்சி வகுப்பு என்பது.
உடனடியாக மகளிர் அணியின் மாநில பொறுப்பாளர்கள் மண்டல அளவில் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி இந்த பயிற்சி வகுப்புக்கு மகளிரை தயார் படுத்தினார்கள். பயிற்சி வகுப்புக்கு முன்னதாக ஆரம்ப காலத்தில் ஜூம் காணொலி தொழில்நுட்பத்தை நாங்கள் உட்பட தோழர்கள் மகளிருக்குப் பயிற்சி அளித்தோம். அதனைத் தொடர்ந்து மகளிர் தாங்களாகவே மிகப்பெரிய அளவில் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்தி வெற்றியை தந்திருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் பாராட்டுக்கள்” என்று வாழ்த்தினார்.
ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்):
“நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது, வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்“ என்ற தமிழர் தலைவரின் தத்துவத்திற்குச் செயல் வடிவம் கொடுத்து மகளிர் இந்த பெரியாரியல் பயிற்சி வகுப்பை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார்கள். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தை இணைத்து அவர்களுக்கு இந்த வகுப்புகளை ஏற்பாடு செய்த பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு நன்றியினையும் மற்றும் அனைத்து மகளிர் தோழர்களுக்குப் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி வாழ்த்தினார்.
சிவ.வீரமணி ( புதுச்சேரி மாநில தலைவர்):
“மகளிரே பங்கேற்று இந்த பெரியாரியல் மகளிர் பயிற்சி வகுப்பை சிறப்பாக நடத்தி முடித்தது என்பது திராவிடர் கழகத்தின் ஒரு மிகப்பெரிய வெற்றிகரமான சாதனை. இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டிய அத்துனை மகளிர் பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுக்கள்” என்று வாழ்த்தினார்.
பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவர்கள்
சிலர் பகிர்ந்துக் கொண்ட கருத்துக்கள்:
ரமா பிரபா (மகளிரணி செயலாளர், கடலூர் மண்டலம்):
இதில் (கடலூர், புதுச்சேரி, வேலூர், காஞ்சிபுரம் மண்ட லங்கள்) பதிவு செய்தவர்கள் 88 பேர். வகுப்பில் இணைந் தவர்கள் 54 பேர். தேர்வு எழுதியவர்கள் 28 பேர். இவர்கள் அனைவரும் கிராமப் பகுதியை சார்ந்தவர்கள். கைப்பேசி வசதி அற்றவர்கள். ஒரு கைப்பேசியிலிருந்து மூன்று முதல் அய்ந்து பேர் பார்க்க வேண்டிய சூழ்நிலை. பெரியாருடைய கருத்தை, பெரியாருடைய சிந்தனையை எப்பொழுது கிராமங்களுக்குக் கொண்டு போய் சேர்க்கிறோமோ அப்பொழுதே அது பெரியாருக்குக் கிடைத்த முழுமையான வெற்றி என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் சொல்வார்கள்..!!
அந்த அடிப்படையில் பார்த்தால் நாங்கள் முழுமையாக வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதற்கு இதுவே ஒரு சான்று...
இந்த பயிற்சி வகுப்பில் மாணவர்கள் அறிந்து கொண் டதை, தெளிவு பெற்றதை 28 மாணவர்கள் என்னிடம் பதிவு செய்திருக்கிறார்கள். அதில் ஒருவருடைய கருத்தை மட்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். அவர் அனுப்பிய குறுஞ்செய்தியை அப்படியே படிக்கிறேன்.
“என் பெயர் கோ சவுந்தர்யா. தகர குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர். நான் இளம் அறிவியல் இயற்பியல் இரண்டாம் ஆண்டு மாணவி. எனக்கு உரிய வயதில் சிறந்த பயிற்சி வகுப்பு அளித்தீர்கள்.
இதுவரை நான் பள்ளிகளிலும், கல்லூரியிலும் தெரிந்து கொள்ளாதவற்றை இப்பயிற்சி வகுப்பில் அறிந்து கொண் டேன். படிப்பின் மூலம் ஏற்படாத மாற்றம் இந்த ஒவ்வொரு நாள் பயிற்சி வகுப்பும் என்னுள் ஏற்படுத்துகிறது.
இதற்கெல்லாம் நான் நன்றி என்று கூறி ஒரு வார்த்தையில் முடித்துவிட முடியாது. இனிமேல் இவளின் ஒவ்வொரு செயலும் பெரியார் கண்ட பெண்ணின் செயலாகவே இருக்கும். சமூகத்தில் என்னால் முடிந்தவரை பெரியார் வழியில் மாற்றத்தைக் கொண்டு வருவேன்...
இதுவே இப்பயிற்சி வகுப்பிற்கு நான் செலுத்தும் நன்றியாக இருக்கும் என நம்புகிறேன்” என்று முடித்திருக்கிறார்.
இதுவே இந்தப் பயிற்சி வகுப்பிற்குக் கிடைத்த சான்றாக நான் கருதுகிறேன். இதற்கெல்லாம் காரணமாக திகழக்கூடிய, பெண்ணினத்தை உயர்த்திப் பிடிக்கக் கூடிய, பெண்களின் இழிவு நிலையை நீக்கக்கூடிய, பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனே குரல் கொடுக்கக்கூடிய, பெரியாரின் மொத்த உருவமாக திகழக்கூடிய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி அய்யா!
சுஷ்மிதா:
மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்போடு என்னை இணைத்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சியே! சாதாரணமான, சமூகத்தில் தங்கள் மதிப்பை நினைத்து நித்தம் தங்களை வருத்திக் கொள்ளும் ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து வளர்ந்த எனக்கு இந்தப் பயிற்சி வகுப்பு மிக அவசியமானதாக இருந்ததில் ஆச்சரியமே இல்லை. முக நூலில் நான் இதற்கான பதிவைச் செய்த போது இத்தகைய பகுத்தறிவை நாம் பெறப் போகிறோம் என்று துளியளவும் எண்ணவில்லை. தோல்வி களைக் கண்டு துவண்டிருந்த எனக்குள் போராட்ட குணமே உன்னை வெற்றிக்கு இட்டுச் செல்லும் பேராயுதம் எனப் புரிய வைத்தது. பகுத்தறிவுப் பாதையை எனக்குள் பதிய வைத்து, வாழ்க்கையைப் புதிய பார்வையில் சரியாக பார்க்கச் செய்தது. பேச்சாளர்களின் உரைகள், பெண்ணுரிமை வெறும் பேச்சல்ல; எக்கணமும் நமது உரிமைக்காகப் போராட நாம் தயாராக வேண்டும், என்பதையும் தெளிவாக் கற்றுக் கொண்டேன். எவ்வளவு உள்ளது தெரிந்து கொள்ள! தவறாக எண்ணி இருந்ததை எல்லாம் சரியாகப் புரிந்து கொள்ள!! மொத்தத்தில் இந்த பயிற்சி எனக்கு என்னையே பகுத்தறிவால் திருத்திக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு. மேலும் இந்த பயிற்சி வகுப்பில் எங்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்திய மதிப்பிற்குரிய தேன்மொழி, ரமா பிரபா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
ராஜகுமாரி:
அனைவருக்கும் வணக்கம், மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட மாணவி என்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த பத்து நாள்களில் ஒவ்வொரு நாளும் பயிற்சி வகுப்பின் போது எல்லா ஆசிரியர்களும் சொன்ன ஒரே ஒரு கருத்து “பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற புத்தகத்தைக் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்பதுதான். நான் யோசித்தது உண்டு, ஏன் எல்லோரும் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று கூறினார்கள் என்று. எனது வாட்ஸ் அப் செயலியில் இந்தப் புத்தகம் வந்த போது, உடனே நான் அதைப் பதிவிறக்கம் செய்து படித்து முடித்துவிட்டேன். இதிலுள்ள 10 அத்தியாயம் என்பது பெண்களின் வாழ்க்கை யானது ஆண் வர்க்கத்தின் கீழ் அடிமையாக எப்படி உள்ளது? எப்படி இருந்திருக்கிறது? அதற்கான மாற்றங்களைக் கொண்டு வருவதற்காகப் பெரியார் பின்பற்றிய கொள்கைகள், போராட்டங்கள் முதலியன பற்றி நான் தெளிவாகப் புரிந்து கொண்டேன். இது மட்டுமல்லாமல் ஜாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை, பகுத்தறிவு சிந்தனை இதைப்பற்றி எல்லாம் தெளி வாகப் புரிந்து கொண்டேன். என்னோடு என் பயிற்சி தோழர் களும், கல்லூரி மாணவிகள் முதல் 55 வயதான வசந்தி, 70 வயதான முனியம்மா ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பயிற்சி நேரத்தில் குறிப்பெடுத்துக் கொண்டனர். அது மட்டு மல்லாமல் அன்றைய பயிற்சி வகுப்பில் எடுத்துக்கொண்ட குறிப்பை வாட்ஸ் அப் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனால் நாங்கள் தவறவிட்ட ஓரிரண்டு குறிப்புகளையும் எடுத்துக்கொண்டோம். ஒரு கருத்தை ஆசிரியர் நடத்துவது மட்டுமல்லாமல் மற்ற தோழர்களும் குழுவில் பதிவேற்றும் போது நாங்கள் மீண்டும் மீண்டும் அந்தக் கருத்தை திரும்ப படித்துப் பார்த்தோம். இதனால் அந்தக் கருத்து எங்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இந்தக் காணொலி நிகழ்ச்சியை ஒவ்வொரு நாளும் சிறப்பாகக் கவனித்தோம்
ஜெயந்தி:
பெண்கள் பயிற்சி பட்டறைக்கு ரமாபிரபா அவர்கள் என்னை கலந்து கொள்ளச் சொன்ன போது 9 மாதக் குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி என்று ஒரு விதத் தயக்கத்துடன் தான் கலந்து கொண்டேன். ஆனால் முதல் நாள் பயிற்சிக்குப் பிறகு எப்போது வகுப்பு ஆரம்பிக்கும், எப்போது 6 மணி ஆகும் என்று ஆர்வம் தொற்றிக்கொண்டது. ஒவ்வொரு நாள் வகுப்பையும் ஒவ்வொரு தலைப்பில் ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக எடுத்தனர். அதைப் போல் எங்கள் வகுப்பு துவங்கும் முன் ரமா பிரபா அவர்கள் ஆசிரியர் அய்யாவின் பொன்மொழியைக் (நம்மால் முடியாதது யாராலும் முடியாது, யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்) கூறித்தான் வகுப்பைத் துவங்குவார்கள். எங்களுக்கு எல்லாம் அது வெறும் சொல் அல்ல. எங்களுக்குப் புத்துணர்வும் நம்பிக்கையும் கொடுக்கும் வாசகம். இன்று அதை என் பிள்ளைக்கும் தினமும் சொல்லித் தருகின்றேன். அதை போல் உங்கள் அனைவருக்கும் தெரியும் - சில நாள்களாக என் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை. பயிற்சி வகுப்பிற்கு குழந்தையோடு தான் பங்கேற்றேன். அப்படி இருக்க, தேர்வு அன்று குழந்தையைப் பார்த்துக் கொள்ள வீட்டில் யாரும் இல்லை. அப்போது என் கணவர் கேட்டார் - “தேர்வில் என்ன 100 மதிப்பெண்ணா பெறப் போகிறாய்? தேர்வை விட்டுவிட்டு, குழந்தையைப் பார்த்துக்கொள்” என்று சொன்னார். அப்போது என் மனத்தில் தோன்றியது - நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் - என்பதுதான்! குழந்தையை வைத்துக் கொண்டே தேர்வில் 74 மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்பு என் வாழ்வில் ஒரு புத்தகம் வாங்கக் கூட பணம் இல்லாத நாள்கள் இருந்திருக்கிறது. ஆனால் இன்று இந்தப் பயிற்சி வகுப்பில் எத்தனையோ விலை மதிப்பில்லாத புத்தகங்களைப் பரிசாகப் பெற்றுள்ளேன். அதிலும் ரமா பிரபா அவர்கள் ஆசிரியர் அய்யாவின் ‘வாழ்வும் பணியும்‘ என்ற புத்தகத்தை அவரது கையெழுத்துடன் அன்பளிப்பாக வழங்குகிறேன் என்றார்கள். இதை விட வேறு என்ன வேண்டும் எனக்கு. என் தலையில் தங்கக் கிரீடம் வைத்தது போன்று இருந்தது. அனைவருக்கும் வணக்கம்.
வித்யா பிரபு:
மகளிர் பெரியாரியல் பயிற்சி முகாம் நிறைவு விழாவிற்குத் தலைமை ஏற்றுள்ள எங்கள் கொள்கை குடும்பத்தின் தலைவர் தமிழர் தலைவர் உள்ளிட்ட அனைத்து கழகப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம். இயக்கம் என்பது இயங்கிக் கொண்டே இருப்பது என்று தமிழர் தலைவர் அவர்கள் அடிக்கடி கூறுவார்.
அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் சுட்டிக் காட்டுவது போல் ‘குடிசெய்வார்க்கில்லை பருவம்‘ என்பதற்கிணங்க கரோனா ஊரடங்கு காலத்திலும் திராவிடர் கழகத்தினுடைய பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடைபெற்றது. இந்தியாவில் எந்த ஒரு அரசியல் இயக்கமும் செய்ய முடியாத அளவிற்கு ஒரு தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்தது.
அந்தவகையில் கடந்த 10 நாள்களாக மகளிரை மய்யப்படுத்தி நடைபெற்ற மகளிரணி பிரச்சாரத்தில் மகளிர் பெரியாரியல் பயிற்சி முகாம் - 1இல் தொழில்நுட்ப ஒருங் கிணைப்பாளராக பணியாற்ற வாய்ப்பளித்த தமிழர் தலைவர் அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் வீ.அன்புராஜ் அவர்களுக்கும், திராவிடர் கழக மகளிரணிச் செயலாளர் தமிழ்செல்வி அவர்களுக்கும் முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களின் கையில் இருந்த கரண்டியைப் பிடுங்கி தந்தை பெரியார் புத்தகங்களைக் கொடுத்தார். இன்றைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களோ பெண்களின் கைகளில் தொழில் நுட்பத்தைக் கொடுத்திருக்கிறார். திராவிடர் கழகம் ஓர் அறிவியல் இயக்கம். அறிவியலின் துணை கொண்டு, ஒரு மாபெரும் பிரச்சாரத்தை மகளிரை வைத்து கடந்த 10 நாள்களாக நடத்தி முடித்திருக்கிறது இந்த இயக்கம்.
இயக்க வரலாற்றில் மகளிர் அணியினர் ஒன்றுசேர்ந்து எடுத்திருந்த இந்த முயற்சி மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை தேர்வின் மதிப்பெண்கள் காட்டியுள்ளன.
கடந்த 10 நாள்களாகப் புதிய சிந்தனை, புதிய உறவுகள், புதிய தோழர்கள், புதுமையும் புரட்சியும் இணைந்த ஒன்றாக பயிற்சி வகுப்பு நடைபெற்றது. எங்களை எல்லாம் இந்தப் பயிற்சி முகாமில் ஒருங்கிணைத்த திராவிடர் கழக மகளிரணிச் செயலாளர் தமிழ்செல்வி ஜெயராமன் அவர்களுக்கு உள்ள படியே நாங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். கடந்த 10 நாள்களாக அவர் தூங்கினாரா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியவில்லை. காலையிலிருந்து மாலை வரைக்கும் விடாது ஒவ்வொருவரையும் தொலைபேசியில் அழைத்து ஒவ்வொருவருக்கும் அந்தப் பணியினை அறிவித்து விட்டு மிகச் சிறப்பாக அவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத் தார்கள்.
அதேபோல, பயிற்சி வகுப்பில் கருத்துரை ஆற்றிய அனைத்து உரையாளர்களின் உரையும் மகளிர் சிந்தனையில் புதிய ஒளி பாய்ச்சியது.
பல புதிய தோழர்கள் அந்தந்த வகுப்பு குறித்து நாளும் கருத்துக்களை வெளியிட்டு - ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் அளித்த மகளிர் பாதுகாப்பு சாதனமான Pepper Spray பரிசுகளை வென்றார்கள். மகளிர் ஒவ்வொருவரும் வகுப்பு குறித்து தெரிவித்த கருத்துக்களும் புதுப்புது சிந்தனை களை உருவாக்கின.
இயக்கத்தின் பாதையில் இந்த பயிற்சி முகாமை மற்றுமொரு மைல் கல்லாகப் பார்க்கிறோம். இதுபோன்ற பயிற்சிகளை தொடர்ந்து வழங்கி தந்தை பெரியாரின் அறிவுப் பாதையில் எங்களை அழைத்துச் செல்லக்கூடிய பெரும் பணியைக் கழகம் தொடர்ந்து செய்ய வேண்டும்.
சத்யபிரியா:
அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள். “ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான் என்றாலும், அவ னோடு அவனுடைய முயற்சிகளும் அவன் துவக்கிய காரியங்களும் செத்துப்போய் விடுவதில்லை”. ஆகையால், மனிதனாக பிறந்த அனைவரும் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல், உலகம் நம்மை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு சரித்திரம் படைக்க வேண்டும். மகளிர் தோழர்களுக்காக இந்த சிறப்பான வகுப்பை ஏற்படுத்தித் தந்த, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 10 நாள்களாக நடைபெற்ற மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பில், அன்றைக்கு நடைபெற்ற வகுப்பு குறித்து சிறப்பான கருத்துகளைத் தெரிவிப்போருக்கு ‘ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்‘ சார்பில், ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்பை மனதில் கொண்டு ‘Pepper Spray’ வழங்கப் பட்டது. தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்திய ஒருங்கிணைப் பாளருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 10 நாள்கள் நடைபெற்ற வகுப்பினைக் குறித்து கடைசி நாள் அனைத்து மகளிர் தோழர்களுக்கும் தேர்வு நடைப்பெற்றது. இதில் முதல் இடத்தை பெறுவோருக்கு 10,000 ரூபாயும், இரண்டாம் இடத்தை பெறுவோருக்கு 5,000 ரூபாயும் அறிவித்துள்ள டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேஜெஸ்வி:
இந்த பத்து நாள் பயிற்சி வகுப்பு அருமையாக இருந்தது. இது வரைக்கும் நான் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டது இல்லை. இது பயனுள்ள வகுப்பாக இருக்குமா? என்று யோசித்தேன். ஆனால், உண்மையில் பயனுள்ள வகுப்பாக இருந்தது. பள்ளியில் படிக்கும் போது யாராவது ஒருவரை அழைத்து ஆசிரியர் வருகைப்பதிவு எடுத்துக் கொண்டு வர சொல்லுவார். அதைக்கொண்டு வருகின்ற போது ‘’இது என்ன, நம் பெயருக்கு நேராக MBC, BC, SC, ST’’எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அப்படி என்றால் என்ன?” என்ற சந்தேகம் எழும். அப்போது அதை யாரிட மாவது கேட்கலாம் என நினைத்து, அதை தோழியிடம் கேட்போம். அது அவளுக்கும் தெரியாது. பிறகு ஆசிரியரிடம் கேட்கலாம் என நினைப்போம். ஆனால் சக தோழிகள் அதனை மறுத்து விடுவர். ஒரு விஷயத்தை பற்றி மறைக்க நினைத்தால் அது என்ன என்று இன்னும் நம் மனதில் ஆழமாக வேரூன்றி பதியும் (இது மனிதனின் இயல்பு), வேறுவழியின்றி தன் பெற்றோரிடம் கேட்பார்கள். அப்போது தான் அவர்கள் தங்கள் ‘’ஜாதி, மதம், குலம், கோத்திரம், பரம்பரை’’ என்று கூறி தன் புகழை நிலை நாட்டுவர். அது மட்டுமின்றி, நாம் தான் உயர்ந்தோர், உன்னை விட கீழ் ஜாதி பிள்ளைகளிடம் பழகாதே, பேசாதே, என்று கூறி தன் மகளை யும் அவர் வசப்படுத்தி விடுவர். எனவே, இது போன்று வருகைப் பதிவேடுகளில் ஜாதியைக் குறிக்கக் கூடாது என்ற என் கருத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆர்.டி.யாழினி:
பெரியார் மணியம்மை பள்ளியில்தான் படித்தேன். அதனால் எனக்குப் பெரியாரைப் பற்றி சில விஷயங்கள் தெரியும். மற்றும், சில பெரியார் புத்தகங்களைப் படித்து இருக்கிறேன். ஆனால், நான் இந்த மகளிர் பெரியாரியல் வகுப்பில் பெரியாரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டேன். நம்.சீனிவாசன் நடத்திய வகுப்பில் தான் நான் ஆசிரியர் பெரியார் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். அவர் நடத்திய போராட்டங்கள், தந்தை பெரியார் மக்களுக்கு செய்த தொண்டு அனைத்தையும் நான் இந்த வகுப்பில் தான் தெரிந்து கொண்டேன். இதையெல்லாம் கேட்கும்போது நானும் மக்களுக்காக உதவ வேண்டும், எதையாவது செய்ய வேண்டும், என்ற எண்ணம் வெளிவருகிறது.
மதி அக்கா நடத்திய வகுப்பு எனக்குப் பிடிக்கிறது என்று சொல்வதைவிட மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மற்றும் எனக்குப் பெரியாரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இது உதவியாக இருந்தது. இது தான் எனக்கு முதல் வகுப்பு. நான் இந்த பத்து நாள் வகுப்பை சிறப்பாக முடித்ததற்கு முக் கியக் காரணம் தமிழ்ச்செல்வி மற்றும் அம்பிகா ஆகியோர் தான். இவர்கள் எனக்குப் பெரும் உதவியாக இருந்தார்கள்.
நான் என் தோழியிடம் பெரியாரைப் பற்றி இந்த வகுப்பில் கற்றுக் கொண்டதைக் கூறினேன். அது அவர்களுக்கும் பிடித்திருந்தது. அவர்களும் அடுத்த வகுப்பிற்கு வருகிறேன் என்றார்கள். அது மிகவும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. நீங்கள் இந்த மாதிரி நிறைய வகுப்புகளைத் தொடர்ந்து நடத்துங்கள். அப்போதுதான் பெரியாரைப் பற்றி தெரியாத மாணவர்களுக்குப் பெரியார் கொள்கை பற்றி தெரிய ஒரு வாய்ப்பாக இருக்கும். நானும் அடுத்தடுத்து நீங்கள் நடத்துகிற வகுப்பில் கட்டாயம் கலந்துக் கொள்வேன்.
இவ்வாறு பயிற்சி மாணவர்கள் தங்கள் கருத்தினை தெரிவித்தார்கள்.
தொகுப்பு: இன்பக்கனி, துணைப் பொதுச் செயலாளர்
No comments:
Post a Comment