கோவை, ஆக.10 அதிமுக மேனாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மேனாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நபர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேனாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே மேனாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பள்ளி செல்லா குழந்தைகளை
கணக்கெடுக்கும் பணி
சென்னை, ஆக.10 பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி இன்று முதல் 31ஆம் தேதி வரை நடக்கிறது.
2021-2022 ஆம் ஆண்டில் 6 முதல் 19 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள், இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் பிறப்பு முதல் 19 வயதுடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கணக்கெடுக்கும் பணிக்கான முன் ஆயத்த கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயராணி தலைமையில் நடைபெற்றது. இன்றைய (10.8.2021) கூட்டத்தில் கணக்கெடுக்கும் பணி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கணக்கெடுப்பின் போது, கரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த மாணவர்களின் விவரங்களும் சேகரிக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த கணக்கெடுப்புப் பணியில் மண்டல மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்வி தன்னார்வலர்கள், இயன்முறை பயிற்சியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பகல் நேர பாதுகாப்பு மய்ய பாதுகாவலர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், தொடர்புடைய பிற துறை அதிகாரிகள் ஆகியோர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
உலக அளவில் கரோனா பாதிப்பு
புதுடில்லி, ஆக.10 டெல்டா வகை கரோனா பரவலால் அய்ரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 204,132,754 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 4,316,026 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 183,319,193 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 16,497,535 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment