தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞர் படத்திறப்பு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 1, 2021

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞர் படத்திறப்பு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகை

சென்னை, ஆக.1 தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞர் உருவப்படத்தை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை (திங்கட்கிழமை) சென்னை வருகிறார். இதையொட்டி 7 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டமன்ற அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் உருவப்பட திறப்புவிழா நாளை மாலை 5 மணியளவில் நடக்கிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கலைஞரின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளார்.

இதற்காக அவர், டில்லியில் இருந்து விமானம் மூலம் நாளை காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணியளவில் சென்னை வருகிறார். பின்னர் கிண்டி ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து மாலை 4.35 மணியளவில் புறப்பட்டு சாலை மார்க்கமாக சட்டமன்ற விழா அரங்குக்கு மாலை 5 மணிக்கு வருகை தர உள்ளார்.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி சென்னையில் உயர் காவல்துறை அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் 7 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குடியரசுத் தலைவர் செல்லும் வழி நெடுகிலும் காவல்துறையினர் சீரான இடைவெளியில் நின்று பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். விமானநிலையம், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் வருகையையொட்டி செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒன்றிய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (31.7.2021)  ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், உயர் காவல்துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். விமான நிலையத்தில் இருந்து ஆளுநர் மாளிகை வரையிலும், பின்னர் அங்கிருந்து விழா நடைபெறும் தலைமைச் செயலகம் வரையிலும் பாதுகாப்பு ஒத்திகையை காவல்துறையினர் மேற்கொள்ள உள்ளனர். குடியரசுத் தலைவர் வருகையின்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சட்டமன்றத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் அன்றைய தினம் இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். 3ஆம் தேதி காலை விமானம் மூலம் கோவை புறப்பட்டு அங்கிருந்து ஊட்டி செல்கிறார்.

No comments:

Post a Comment