புதுடில்லி,ஆக.9- கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ், ஒரு சில விநாடிகளிலேயே வாட்ஸ் அப்பில் வந்து சேரும் வகையிலான புதிய நடைமுறையை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. அத்துடன் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணி அனைத்து மாநிலங்களிலும் வேகமெடுத்துள்ளது.
இதனிடையே, கடந்த சில வாரங்களாக கரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது, கரோனா மூன்றாம் அலையின் தொடக்கமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனவே, மூன்றாம் அலை அதிகரிப்பதற்கு முன்பாகவே கரோனா தடுப்பூசியை பெரும்பாலான மக்களுக்கு செலுத்திவிட வேண்டும் என்பதில் ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தங்கள் சான்றிதழை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு நேரில் சென்றோ அல்லது குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வாயிலாகவோ மட்டுமே பெற வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் எஸ்எம்எஸ்-இல் வருவதில்லை என்றும், அப்படியே வந்தாலும் அதில் உள்ள லிங்க்-அய் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை எனவும் பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதை கருத்தில்கொண்டு, கரோனா தடுப்பூசி சான்றிதழை 'வாட்ஸ் அப்பில்' சில நொடிகளிலேயே பெறும் வகையிலான நடைமுறையை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு 3 எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது. அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், முதலில் 9013151515 என்ற எண்ணை தங்கள் அலைபேசியில் 'சேவ்' செய்ய வேண்டும். பின்னர், covid certificate என ஆங்கிலத்தில் டைப் செய்து அந்த எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப வேண்டும். இதையடுத்து, வாட்ஸ் அப்பில் வரும் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய கடவுச்சொல்லை (ஓடிபி) பதிவு செய்ய வேண்டும். அவ்வளவுதான். ஒரு சில விநாடிகளுக்கு உள்ளாகவே சம்பந்தப்பட்ட நபரின் கரோனா தடுப்பூசி சான்றிதழ் அவரது 'வாட்ஸ் அப்' எண்ணுக்கே வந்துவிடும்.
கரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறுவதை மிகவும் எளிமையாக்கும் இந்த நடைமுறைக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து பாராட்டும், வரவேற்பும் குவிந்து வருகின்றன. ஒன்றிய அரசின் இந்த புதிய திட்டத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசிதரூர் பாராட்டு தெரிவித்து சுட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
No comments:
Post a Comment