பளுதூக்குதல்தான் தன்னுடைய எதிர்காலம் என மீரா பாய் சானு முடிவு செய்தாலும் பயிற்சியை விட அதற்காக அவர் மேற்கொள்ளும் பயணம் மிகவும் சிரமத்தை கொடுத்துள்ளது.
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை என்கிற பெருமையையும் மீராபாய் சானு பெற்றுள்ளார்.
வறுமையின் பிடியில் வாழ்க்கையை ஓட்டிய குடும்பத்தில் பிறந்து இன்று வரலாற்றில் முத்திரை பதித்துள்ளார்.
மீராபாய் சானு மணிப்பூர் மாநிலம் இம்பால் பகுதியில் உள்ள நோங்போங் கக்சிங் கிராமத்தில் பிறந்தவர். மீரா பாய் சானுதான் வீட்டில் கடைக்குட்டி. சிறுவயது முதலே பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்துள்ளார். விறகுகளை வெட்டி அவற்றை சுமந்து வந்து வறுமையை போக்க வேண்டிய சூழலில்தான் வளர்ந்தார்.
பள்ளிப்படிப்பும் மிகவும் சிரமத்துடனே படித்து வந்தார். பளுதூக்குதல்தான் தன்னுடைய எதிர்காலம் என மீரா பாய் சானு முடிவு செய்தாலும் பயிற்சியை விட அதற்காக அவர் மேற்கொள்ளும் பயணம் மிகவும் சிரமத்தை கொடுத்துள்ளது. இவரது கிராமத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பயிற்சி மய்யத்துக்கு செல்வது பெரும் சவாலாக இருந்துள்ளது. போக்குவரத்து வசதியும் கிடையாது. தடைகளை எல்லாம் படிகளாய் மாற்றி தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருந்தார்.
தனது கிராமத்தின் வழியே இம்பால் நகருக்கு மணல் ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகளில் உதவி கேட்டு பயணித்துள்ளார். இந்த லாரி ஓட்டுநர்களும் பல ஆண்டுகளாக மீரா பாய் சானுவை இலவசமாக ஏற்றி சென்று உள்ளனர். ஓட்டுநர்களின் உதவியால் தடையின்றி தனது பயிற்சியை தொடர்ந்துள்ளார். ஓட்டுநர்கள் அளித்த இலவச பயணத்தால் அவருக்கு போக்குவரத்துக்கான செலவு மிச்சமானது. அந்தப்பணத்தின் மூலம் தனது உணவை பார்த்துக்கொண்டார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீரா பாய் சானு தனக்கு உதவிய அந்த லாரி ஓட்டுநர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் என 150 பேரை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து உள்ளார். அவர்களுக்கு சட்டை ஆடை உள்பட பல பரிசளித்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து மீரா பாய் சானு கூறியதாவது:-
வீட்டிலிருந்து பயிற்சி மய்யத்துக்குச் செல்ல எனக்கு வழக்கமாக உதவி வழங்கிய லாரி ஓட்டுநர்களை பார்க்கவும் அவர்களின் ஆசியை பெறவும் விரும்பினேன். என் கடினமான காலங்களில் அவர்கள் எனக்கு மிகவும் உதவினார்கள். மணல் ஏற்றிச்செல்லும் லாரிகளை தேடிக் கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு இப்போது என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறேன். இந்த பயணத்தில் எனக்கு உதவிய அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து நன்றியை தெரிவிக்க முயற்சிக்கிறேன் என உணர்ச்சிப்பொங்க பேசினார்.
No comments:
Post a Comment