கலைஞருடைய நினைவு நாள் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 31, 2021

கலைஞருடைய நினைவு நாள் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்!

கலைஞர் உருவாக்கிய வரலாற்றை அசைக்கவோமாற்றி எழுதவோ யாராலும் முடியவில்லை!

 அமெரிக்க தி.மு.. சார்பில் நடைபெற்ற  மெய்யிணைக் கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை,ஆக.31  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஏன் இன்றைக்கும் போற்றப்படுகிறார்? அவர் உரு வாக்கிய வரலாற்றை அசைக்கவோ, மாற்றி எழுதவோ யாராலும் முடியவில்லை என்று சொல்வதற்கு எது அடித்தளம்? அந்த அடித்தளத்திலிருந்து நாம் சொல் கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் .

‘‘கலைஞரின் சாதனைகளும்நமது கடமைகளும்!''

கடந்த 8.8.2021 அன்று மாலை அமெரிக்க தி.மு..வின் மெய்யிணைக் கலந்துரையாடல் காணொலி கூட்டத்தில், ‘‘கலைஞரின் சாதனைகளும், நமது கடமைகளும்'' என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்பது திராவிடத் தத்துவம்

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய சிறப்பு வாய்ந்த இந்நிகழ்ச்சியினுடைய தலைவராக, நேரிலே கலந்துகொண்டு ஒரு நல்ல அறிமுக உரையாற்றி - அமெரிக்காவிற்குச் சென்றாலும், திராவிடத்தினுடைய தத்துவம் என்பது, அடிப்படையிலேயே இரு வேறு பண்பாடுகள் என்பதற்கு அடையாளமாக இருக்கக் கூடிய ஒன்றிலே, ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்பது திராவிடத் தத்துவம் - திராவிடத்துவம்.

தமிழர்களுடைய உயர்ந்த பண்பாடுகளிலே செயல் முறைகளிலே ஒன்று.

அதேநேரத்தில், தத்துவ ரீதியாகவே மாறுபடுகிறார்கள் என்பதற்கு உதாரணம் என்னவென்றால், கடல் தாண்டாதே என்று சொல்வது ஹிந்துத்துவா!

மண்ணுருண்டை மாளவியா!

ஆனால், இன்றைக்குக் கடல் தாண்டாமல் எத்தனை பேர் அவர்களில் இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறி.

அதிலும் அவர்கள் சாமர்த்தியமாக - மாளவியா என்பவர் ஒருவர் - அவர்தான் ஹிந்து பனாரஸ் பல் கலைக் கழகம் - காசி பல்கலைக் கழகத்தை உருவாக் கியவர். அவர் ஆர்.எஸ்.எஸினுடைய முன்னோடி, ஹிந்துத்துவா கருத்துகளுக்கு முன்னோடி.

கடல் தாண்டக்கூடாது என்று சொன்னார்கள் பார்ப்பனர்கள் -

லண்டனுக்குப்  போய் பேசப் போகிறேன் என்று சொன்னார்.

எல்லாவற்றிற்கும் ஒரு விதிவிலக்கு உண்டு என்று சொல்லி, இங்கே இருந்து மண்ணை கொஞ்சம் எடுத்துக் கொண்டு போங்கள் என்று சொல்லி, அவரை அனுப்பி வைத்தார்கள்.

வெளிநாட்டில் தங்குகின்ற அறையில் மண்ணை வைத்திருந்தால் போதும் என்று சொன்னார்கள், அப்பொழுது. ஆனால், இப்பொழுது மண் எல்லாம் எடுத்துக்கொண்டு போவதில்லை.

ஆனால், நம்முடைய பண்பாடு, திரைகடல் ஓடியும் திரவியம் தேடு - நாவாய் ஓட்டிய தமிழன் - மரைக் காயர்கள் - அப்படிப்பட்ட  ஒரு பெரிய உணர்வுகள்.

கொள்கையை எடுத்துக்கொண்டு போய் அமெரிக்க தி.மு.. என்று சிறப்பாக செயல்படுகிறீர்கள்!

அப்படி புலம் பெயர்ந்து அமெரிக்க நாட்டிற்குச் சென்றாலும், எப்படி அவர்கள் சனாதனவாதிகள்கூட தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு மண்ணுருண் டையை எடுத்துக் கொண்டு போனார்கள் என்பதைவிட, நீங்கள் அப்படிப்பட்ட மண்ணுருண்டையை எடுத்துக் கொண்டு போகாமல், கொள்கையை சிறப்பாக எடுத்துக் கொண்டு போய், அங்கேயும் அமெரிக்க தி.மு.. என்று சிறப்பாக செயல்படுகிறீர்கள்.

எது தங்களை ஆளாக்கியதோ -

எது நம்மை மனிதனாக்கியதோ -

எது நமக்குக் கல்வி உரிமையைக் கொடுத்து, அமெ ரிக்காவிற்குச் சென்று தொழில் முறையில் இருக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கியதோ - அந்தத் தத்துவம் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டது.

அது ஓர் இனத்திற்கோ, ஒரு மக்களுக்கோ, ஒரு நாட்டிற்கோ சொந்தமல்ல. உலகத்திற்கே சொந்தம். காரணம்,  ஆரம்பத்திலேயே, திராவிடம் என்பது யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற அந்தத் தத்துவத்தைக் கொண்டது என்பதை நிரூபிக்கக் கூடிய அளவிற்கு, சிறப்பான அந்தத் தத்துவத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டு, அமெரிக்க நாட்டிலேயே நீங்கள் அமெரிக்க தி.மு.. என்கிற ஓர் அமைப்பை கடந்த சில ஆண்டு களுக்குமுன் உருவாக்கி, அருமையான நிகழ்ச்சிகளை நடத்தி, அவ்வப்பொழுது தன்மான உணர்ச்சியை உண்டாக்கிக் கொண்டு, தாய்த் தமிழ் மண்ணையும் மறக்காமல், அதேநேரத்தில், தாங்கள் குடியேறிய நாட்டிலும் சிறப்பான இந்தக் கொள்கை உணர்வுகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்ற அமெரிக்க தி.மு.. தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய அருமை சகோதரர் வாஷிங்டன் சிவா அவர்களே,

அதேபோல, இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய  அன்புச் சகோதரர் அவர்களே,

எனக்கு முன் உரையாற்றிய பெரியார் பன்னாட்ட மைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளதன்மூலமாக உலகம் முழுவதும் உள்ள உங்களையெல்லாம் சந்தித்து மகிழக்கூடிய வாய்ப்பை எனக்குக் வழங்கியிருக்கக் கூடிய அருமைத் தோழர்களே, கொள்கை உறவுகளே, திராவிட உணர்வாளர்களே, பகுத்தறிவாளர்களே, நண்பர்களே, மனிதநேயர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞருடைய நினைவு நாள் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்!

இந்த நாள் - கலைஞருடைய நினைவு நாள் என்பது - அது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்.

கலைஞரை நாம் என்றைக்கும் மறந்ததில்லை - மறக்கவும் முடியாது. இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டி யதைப்போல, டாக்டர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, சிவா அவர்கள் சொன்னதைப்போல, இணைப்புரை வழங்கியவர் சொன்னதைப்போல,

ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு நாளும் கலைஞருடைய செயல்பாடு என்பது பரிமளித்துக் கொண்டே இருக்கிறது. இளைஞர்களுடைய போக்கு என்பது - கலைஞர் தேவை! கலைஞருடைய போர் முறை என்றைக்கும் தேவை என்ற உணர்வை தெளிவாகக் காட்டிக் கொண்டிருக்கிறது.

எனவேதான், இந்த மூன்றாம் ஆண்டு நினைவு நாள் என்பது  - நம்முடைய கொள்கைகள், பயணங்கள் முடிவதில்லை. கொள்கைப் பயணத்திலே ஒரு கட்டம். அதை வேகப்படுத்தவேண்டும். இந்த நினைவு நாளில் உலகம் முழுவதும் இருக்கின்ற நம்முடைய மக்கள் உறுதி கொள்ளவேண்டும்.

தந்தை பெரியார் தலைசிறந்த மானுடப் பற்றாளர்

திராவிடத் தத்துவம் என்பது அது ஒரு மனித நேயத் தத்துவம். தந்தை பெரியார் தலைசிறந்த மானுடப் பற்றாளர். அவர் சொன்னார், ‘‘எனக்கு மனிதப் பற்றைத் தவிர, வேறு பற்று கிடையாது'' என்று.

பற்றுகள் எல்லாம் மனிதப் பற்றை அடிப்படையாகக் கொண்ட பற்றுகள். கொள்கைகள் எல்லாம் மனிதப் பற்றை, மனித சமத்துவத்தை, மனித கருத்துச் சுதந் திரத்தை, மனிதனுடைய சகோதரத்துவத்தை அடிப் படையாகக் கொண்டவை.

அதிலே பிறந்ததுதான் திராவிடம்.

அந்த வகையில்தான் நண்பர்களே, திராவிட இயக்கத்தில், மிகப்பெரிய அளவிற்கு, அது தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக - பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று எதிர்மறையான ஒரு பெயரை வைத்திருந்ததை மாற்றி, திராவிடம் என்று ஆக்கப்பூர்வமான ஒரு நியாயத்தை, அன்று நீதிக்கட்சி தொடங்கியது.

திராவிடம் என்பது அனைவருக்கும் அனைத்தும், எல்லோருக்கும் எல்லாமும்!

அதேபோல, பண்பாட்டு அடிப்படையிலும், மனித நேய அடிப்படையிலும்

திராவிடம் என்பது சமத்துவம் -

திராவிடம் என்பது சகோதரத்துவம் -

திராவிடம் என்பது பகுத்தறிவு -

திராவிடம் என்பது அனைவருக்கும் அனைத்தும், எல்லோருக்கும் எல்லாமும் என்ற தத்துவத்தை அடிப் படையாகக் கொண்டுதான், திராவிடம் என்று வந்த நேரத்தில், திராவிடர் கழகமாக மாறியது.

இன்றைக்கு அரசியல் ரீதியான ஓர் அம்சமாக, ஓரணியாக இருப்பதுதான் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம்.

எனவே, கலைஞர் அவர்களுடைய 3 ஆம் ஆண்டு நினைவு நாள் என்பது ஒரு தொடர்ச்சி.

இங்கே சொன்னதுபோல, காமராஜர் அவர்கள் காங்கிரஸ் கட்சியில், தேசிய கட்சியில் இருந்தாலும், நடைமுறையிலே அவரை திராவிட உணர்வை வைத் துத்தான் இன எதிரிகள் பார்த்தார்கள்.

நீண்ட காலமாக அவர் தேசியத்திற்குள்ளே இருந்து போராடினார். பெரியார் போராடி வெளியேறினார். காமராஜர் கடைசிவரையில் தாக்குப்பிடித்து, கடைசி யிலேதான் அதைவிட்டு வெளியேறினார். அப்பொழுதும் அந்த முத்திரையோடு இருந்தார்.

எனவே, திராவிடம் என்று சொல்வதற்கு ஒரு விரிந்த பொருள் உண்டு. அது வெறும் குறுகிய பார்வை, வெறும் இனவாதம் என்று சொல்லக்கூடிய அளவில் இல்லை.

பத்திரிகையாளர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ்

மிகப்பெரிய பத்திரிகையாளர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் போன்றவர்கள், இது இனவாத அமைப்பு இல்லை என்பதை அழகாகச் சொன்னார்கள். ஒரு பண்பாட்டுப் புரட்சி  - மனிதநேயம், சமத்துவம் அவற்றை உருவாக்க வேண்டும் என்று நினைத்த நேரத்தில், அதை செய்வதற்கு, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சி - திராவிடர் ஆட்சி.

கல்வியா? அனைவருக்கும் தேவை

உத்தியோகமா? அனைவருக்கும் தேவை

மானம் கருதி, எல்லோருக்கும் மரியாதை இருக்க வேண்டும். யாரும், யாருக்கும் தாழ்ந்தவர் அல்ல.

ஒரு மனிதன் தொடக்கூடியவன்; இன்னொரு மனி தன் தொடக்கூடாதவன் என்கிற பேதம் இருக்கக்கூடாது.

அதை அடிப்படையாகக் கொண்ட கொள்கையை வைத்துத்தான், தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக இருந்து, அதற்குப் பிறகு சுயமரியாதை இயக்கம் என்று தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசிலிருந்து வெளியே வந்து உருவானது.

திராவிடர் கழகம் என்று 1944 இல் உருவாயிற்று!

அந்த சுயமரியாதை இயக்கமும், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் திராவிட ஆட்சியை, நீதிக்கட்சி ஆட்சியை சிறப்பாக ஆதரித்தது. அவை இணைந்து, ஒரு காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் தலை வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இரண்டும் இணைந்த நேரத்தில்தான், அண்ணா போன்றவர்கள் மிகப்பெரிய அளவிற்கு தளபதிகளாக பெரியார் அவர் களிடத்தில் வந்து இணைந்த நேரத்தில், அதையெல்லாம் பயன்படுத்தித்தான் திராவிடர் கழகம் என்று 1944 இல் உருவாயிற்று.

எனவே, தென்னிந்திய நல உரிமைச் சங்கம், சுயமரி யாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகிய எல்லாமே மனிதநேயம் - எல்லாமே மனித உரிமைகள்; எல்லாமே சமத்துவத்திற்காக. யாவரும் கேளிர் என்பதற்காக - இப்படிப்பட்ட ஓர் உணர்வை வைத்து வந்த நேரத்தில் தான், திராவிடர் கழகம் என்று அது பெயர் பெற்றிருந் தாலும், அதனுடைய அடிப்படையில், அதனுடைய தலைவராக உருவாகிய பின்பு, அந்த இயக்கம் தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையில், மிகப்பெரிய ஒரு சமுதாயப் புரட்சி இயக்கமாக வளர்ந்த நேரத்தில், அடுத்தது, அரசியல் பிரிவாக, பல்வேறு காரணங்களைச் சொல்லி உருவானது. அதுகுறித்து ஆழமாகச் சொல்வதற்கு நேரமில்லை, தேவையும் இல்லை. தத்துவ ரீதியாக நாம் பேசுகிறோம்.

ஒரு கிளை அமைப்பாக பிரிந்து அமைந்ததுதான்  திராவிட முன்னேற்றக் கழகம். அமெரிக்காவில், அமெ ரிக்க தி.மு.. என்று வைத்திருக்கின்ற காரணத்தினால், தமிழ்நாட்டில் இருக்கின்ற தி.மு..வும் ஒன்றுதான், அமெரிக்காவில் உள்ள தி.மு..வும் ஒன்றுதான்.

தி.மு.. - தி.. வேறு வேறல்ல!

தி.மு.. வேறல்ல; தி.. வேறல்ல. அதைப்பற்றி சொல்கின்ற நேரத்தில், தி.மு.. ஒரு அரசியல் பிரிவாக இருக்கிறது. சமுதாயப் புரட்சிக்கு ஓர் அணி இருக்கிறது.

அதற்கு விளக்கம் சொன்னபொழுது, அண்ணா சொன்ன கருத்து - அது எப்படி பின்னாளில், கலைஞர் அவர்களாலும், இன்றைய தலைமை - முதலமைச்சர் தளபதி மு..ஸ்டாலின் வரையில், காலங்காலமாக பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. புலம் பெயர்ந்த நாட்டில் இருந்தாலும்கூட, நீங்கள் நிலம் மாறு பட்டு இருந்தாலும், கொள்கை மாறுபடாத அளவிற்கு, அதே லட்சியப் பயணத்தில் பயணம் செய்பவர்கள் என்கிற முறையில், இந்த அறிவார்ந்த அரங்கத்திற்கு அப்படிப்பட்ட சில ஆய்வுக் கருத்துகளை இங்கே நான் எடுத்துக் கூறுவது, கலைஞர் அவர்களுடைய நினைவு நாளில் பொருத்தமுடையதாகும்.

கலைஞர் உருவாக்கிய வரலாற்றை அசைக்க, மாற்றி எழுத யாராலும் முடியவில்லை!

அவர்கள் ஏன் இன்றைக்கும் போற்றப்படுகிறார்?

அவர் உருவாக்கிய வரலாற்றை அசைக்க, மாற்றி எழுத யாராலும் முடியவில்லை என்று சொல்வதற்கு எது அடித்தளம்?

அந்த அடித்தளத்திலிருந்து நாம் சொல்கிறோம்.

ஒரு நல்ல மரம், செழிப்பாக, பரந்து விரிந்து இருக்கிறது என்று சொன்னால், அதனுடைய வேர்கள் மிகவும் முக்கியம். விழுதுகள் பெருமைப்படுத்துகின்றன என்று சொன்னாலும்கூட, அந்த வேர்கள் மிகவும் முக்கியம். அந்த வேர்கள் எப்படிப்பட்டவை - எப்படி அமைந்தவை என்பதை உங்களுக்கு வரலாற்று ரீதியாக ஒரு சிலவற்றை முன்னால் சொன்னேன். பின்னால் நான் சொல்லப் போகின்ற கருத்துக்கு ஒரு தெளிவான முகப்புரையாக அது அமையவேண்டும் - அமையும் என்பதற்காகத்தான் இந்தக் கருத்துகளைச் சொல்கிறேன்.

எங்களைப் போன்றவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறோம்

அருமை நண்பர்களே,

இன்றைய இளைஞர்களுக்கு வரலாறு தெரிய வேண்டும். சில நேரங்களில் வெவ்வேறு அமைப்புகள் என்பதைப்போல, இடையிலே புகுந்து மித்ர பேதம் என்று சொன்னதையே, பஞ்ச தந்திரங்களில் ஒன்றாக வைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு ஆரியத் தத்துவம் - பல பேரை குழப்பலாம். அவர்கள் தெளிவடையவேண்டும். அந்த வகையிலே, அமெரிக்க தி.மு.. அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் அருமையான இளைஞர்கள்; தெளிவான கொள்கையாளர்கள்; உறுதி யான லட்சியவாதிகள் என்பதைப் பார்க்கும்பொழுது, எங்களைப் போன்றவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி யடைகிறோம்.

எனவேதான், இந்த ஆழமான கருத்துகள் உங் களுக்கு மட்டுமல்ல, உங்களைச் சுற்றி இருக்கிறவர்கள், உங்களிடத்திலே வருகிறவர்கள், நீங்கள் மற்றவர் களுக்குத் தெரியப்படுத்துவதற்காக சில கருத்துகளை உங்கள் முன்னால், இந்த அறிவார்ந்த அரங்கத்திற்கு முன் நான் வைப்பதிலே மகிழ்ச்சியடைகிறேன்.

விழுதாக இருப்போமே தவிர, வாழை மரத்தின் கன்றுகளாக இருக்கமாட்டோம்!

அண்ணாவைப் பார்த்து கேட்கிறார்கள், ‘‘நீங்கள் அய்யாவைவிட்டுப் பிரிந்திருக்கிறீர்களே?'' என்று.

‘‘இல்லை. நாங்கள் இரட்டைக் குழல் துப்பாக்கி'' என்றார். தி..வும், தி.மு..வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள். ஆலமரத்திற்கு விழுதுகளாக இருப்போம். விழுதாக இருப்போமே தவிர, வாழை மரத்தின் கன்றுகளாக இருக்கமாட்டோம் என்றார்.

எப்படி இந்த இயக்கம், பெரியார், அண்ணா, கலைஞர், இன்றைக்கு அரசியலில் ஸ்டாலின் இப்படி வரிசையாக -

அதேபோல, திராவிடர் கழகம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், இப்போது நான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தாலும்,

எத்தனையோ கொள்கை உரசல்கள்கூட இருந்தி ருக்கலாம். ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி, லட்சி யப் பாதையில் வெற்றிகளை அடைந்து கொண்டி ருக்கிறது.

எப்படி வேகமாக, தடைகளையெல்லாம் தாண்டி, வேகமாக சென்று கொண்டிருக்கிறது?அந்த லட்சியத் தினுடைய வேகம், அதனுடைய பிடிப்பு, அதனுடைய தேவை அத்தனையையும் எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

பெரியார் என்ற ஜீவ நதி ஓடிக்கொண்டே இருக்கும்

ஆழமாக ஆழ்ந்து பார்த்தால், பெரியார் என்ற ஜீவ நதி ஓடிக்கொண்டே இருக்கும். முக்கொம்பு என்று திருச்சியில் இருக்கிறது - அது பிரிந்து கொள்ளிடமாக இருந்தாலும், காவிரியாக இருந்தாலும் மறுபடியும் ஒன்று சேரும்.

அண்ணாவிற்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகம் கலகலத்து விடும் என்று இன எதிரிகள் கணக்குப் போட்டார்கள். அந்த நேரத்தில், அந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு - அதிகமான கவலையோடு யார் இருந்தார்கள் என்றால், அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் கவலையோடு இருந்தார்கள்.

என்னை அழைத்துச் சொன்னார், திராவிட முன் னேற்றக் கழகத்திற்கு அடுத்தபடியாக யார் தலைமை ஏற்கவேண்டும் என்பதை.

அந்த முடிவு வரவேண்டும் என்பதற்காக ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு மேலாக சென்னை தலைநகரிலேயே தந்தை பெரியார் அவர்கள் தங்கியிருந்தார்கள்.

அந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றுவதற்காக ஒரு தந்தைக்கு உரிய கவலைதான் அது. இன்னுங்கேட்டால், தன்னுடைய இயக்கத்திற்கு எதிராக வந்ததுதானே அந்த இயக்கம் - அந்த இயக்கம் அழிந்து போகவேண்டும் என்று அவர் நினைக்கவில்லை.

அந்த இயக்கம் தேவை - அந்த இயக்கம் பாதுகாக் கப்படவேண்டும் என்றுதான் நினைத்தார்.

அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தைத் தொடங்கி வெற்றி பெற்றவுடன், இராஜகோபாலாச்சாரியாரின் வீட்டிற்குப் போகவில்லை; நேரே திருச்சிக்குப் போனார். நாங்கள் இரட்டைக் குழல் துப்பாக்கிதான் - என்றைக்கும் கொள்கைத் தடம் மாறாதவர்கள் என்பதை நிரூபிப்ப தற்காக தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்தார். அறிஞர் அண்ணா அவர்களோடு, கலைஞர், நாவலரும் உடன் சென்றிருந்தனர்.

பெரியாரிடத்தில், எங்களை வழி நடத்திச் செல்லுங்கள் என்றார் அண்ணா!

ஆச்சாரியாருக்கு அதிர்ச்சி; அண்ணா அவர்கள், பெரியாரிடத்தில், எங்களை வழி நடத்திச் செல்லுங்கள் என்று சொன்னவுடன்,

தேன் நிலவு முடிந்தது என்று சொன்னார் ஆச்சாரியார்.

அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன்,

தாய்த் தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர்

சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுத்தது.

இருமொழிக் கொள்கை என்பதை உருவாக்கியது.

இவற்றையெல்லாம் தாண்டி, அந்தக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய இயக்கம் இந்த இயக்கம்.

மக்கள் தீர்ப்பு கொடுத்திருக்கின்ற ஒரு பெரிய இயக்கம்.

அரசியலில் திராவிடர் ஆட்சியை, பகுத்தறிவாளர் ஆட்சியை நிரூபித்துக் காட்டுவதற்கு மிகப்பெரிய வாய்பை உருவாக்கிக் காட்டிய இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டாமா? கட்டிக் காக்க வேண்டாமா என்கிற அந்த கடமை உணர்வு  - தந்தை பெரியாருக்கு இருந்தது. அருகிலிருந்த எங்களைப் போன்றவர்களுக்கு மிக வேகமாக இருந்தது.

(தொடரும்)

No comments:

Post a Comment