கூட்டமாகக் கூடி கரோனா பரவலுக்கு மக்களே காரணமாகிவிடக் கூடாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 3, 2021

கூட்டமாகக் கூடி கரோனா பரவலுக்கு மக்களே காரணமாகிவிடக் கூடாது!

முதலமைச்சர் மு..ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை, ஆக.3 கூட்டமாகக் கூடி கரோனா பரவலுக்கு மக்களே காரணமாகிவிடக் கூடாது என்றும், மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அர சாங்கத்தை நிர்பந்தித்து விடா தீர்கள் என்றும் முதலமைச்சர் மு..ஸ்டாலின் எச்சரிக்கை விடுத் துள்ளார்.

முதலமைச்சர் மு..ஸ்டாலின், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து காணொலிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது:-

கரோனா என்ற பெருந்தொற்று கடந்த 18 மாதங்களாக நாட்டையும், நாட்டு மக்களையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. கரோனா 2- ஆவது அலையை கட் டுப்படுத்தி இருக்கிறோம். கேரளா, கருநாடகா போன்ற நமது அண்டை மாநிலங்களில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மராட்டியத்தில் கூடுதலாகி வரு கிறது.

மக்கள்தொகை நெரிசலாகவும், அதிகமாகவும் உள்ள நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்து வதில் பல்வேறு சிரமங்கள் இருந் தாலும், மக்களை காக்கிற பெரும் பொறுப்பு அரசின் கையில் இருக் கிறது என்பதை நான் உணர்ந் திருக்கிறேன்.

அதற்கேற்ப பல்வேறு நட வடிக்கைகளை எடுத்துக் கொண்டும் வருகிறோம். முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது கரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. தளர் வுகள் அறிவிக்கப்பட்டபோது லேசாக பரவத்தொடங்குகிறது. இதை கவனத்தில் வைத்து மக்கள் செயல்பட வேண்டும் என்று மன் றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

கடைகளை திறக்க அனுமதிப் பதன் மூலமாக தன்னுடைய தேவை களை வாங்குவதற்காக மக்களுக்கு வழி ஏற்படுத்தி தருகிறோம். ஆனால், அங்கு வரும் மக்கள் கரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றத் தவறிவிடுகிறார்கள். முகக்கவசம் அணியாமல் செல்லு தல், கூட்டமாக கூடுதல், நெரிசலாக நிற்பது, இதை எல்லாம் பார்க்கும் போது மக்கள் விழிப்புணர்வு பெறாமல் இருப்பது எனக்கு வேதனையைத்தான் தருகிறது.

அதனால்தான் சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவு கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட் டால் அப்பகுதியை மூடும் நட வடிக்கை எடுக்கலாம் என்று மாவட்ட மாவட்ட ஆட்சியர் களுக்கு நான் அறிவுறுத்தியிருக் கிறேன். சென்னையில் அப்படி பல பகுதிகள் மூடப்பட்டுள்ளன. மக் களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதற்காக மட்டுமே, கடைகள் திறக்க அனுமதி தரப்பட் டுள்ளது. அதை உணராமல், விதி முறைகளை பின்பற்றாமல் மக்கள் நடந்துக்கொள்ளக்கூடாது.

கூட்டமாக கூடுவதின் மூலமாக கரோனா பரவலுக்கு மக்களே கார ணமாகிவிடக்கூடாது என்று, மீண் டும், மீண்டும் உங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்துவிடாதீர்கள் என்று கொஞ்சம் கடுமையாகவே சொல் லிக்கொள்கிறேன். 3- ஆவது அலையை மட்டுமல்ல, எந்த அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வல்லமை தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் ஏரா ளமாக தயார்நிலையில் இருக் கின்றன.

இத்தகைய சூழலில் மக்கள் எவ் வளவு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை, நான் சொல்லத் தேவையில்லை. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக் கொள் ளுங்கள். தனியார் மருத்துவமனை களும் இலவசமாக தடுப்பூசி செலுத்த முன்வந்துள்ளதை இந்த நேரத்தில் நான் பாராட்டுகிறேன்.

முதல், 2- ஆவது அலைகளை விடவும் 3- ஆவது அலை மோசமான தாக இருக்கும். ஸ்பானிஷ் காய்ச் சலை போல இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்வதை பய முறுத்தலாக இல்லாமல், நமக்கு தரப்படுகிற எச்சரிக்கையாக எடுத் துக்கொள்வோம். ஜிகா வைரஸ், டெல்டா, டெல்டா பிளஸ் என்ற புதிய, புதிய படையெடுப்புகள் சொல்லப்படுகின்றன. இவை அனைத்தையும் நாம் வெல்வோம்.

மிக, மிக அவசிய, அவசர தேவை கள் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வாருங்கள். 2 முகக் கவசங்களை பயன்படுத்துங்கள். வெளியில் வைத்து முகக்கவசத்தை கழற்றவோ, எடுக்கவோ வேண்டாம். கைகளை சுத்தமாக வைத்திருங்கள்.

இவ்வாறு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்கள் காணொலியில் பேசினார்.

No comments:

Post a Comment