“மக்களவையில் ஒலித்த கர்ச்சனை!” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 14, 2021

“மக்களவையில் ஒலித்த கர்ச்சனை!”

 கவிஞர் கலி. பூங்குன்றன்

மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் - எழுச்சித் தமிழர் மானமிகு தொல்.திருமாவளவன் தனக்குக் கொடுக்கப்பட்ட குறுகிய காலத்தில் நறுக்குத் தெறித்ததுபோல் நான்கு முக்கியக் கருத்துகளை ஆணி அடித்தது போல பதிவு செய்திருக்கிறார்.

1) ஜாதி வாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

2) இடஒதுக்கீடு 50 விழுக்காடுக்கு மேல் போகக்கூடாது என்ற வரம்பு நீக்கப்பட வேண்டும்.

3) மக்கள் தொகையின் அடிப்படையில் பட்டியல் இன மக்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்.

தாழ்த்தப்பட்டோருக்கு (எஸ்.சி.) 20 விழுக்காடு, பழங்குடி மக்களுக்கு (எஸ்.டி.) 9 விழுக்காடு ஒதுக்கப்பட வேண்டும் என்றும், மதம் மாறிய பட்டியலினத்தவர்களுக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

4) தனியார் துறைகள் நாளும் வளர்ந்து வரும் நிலையில், தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு அளிக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்கிற அரிய - அவசியம் தேவைப்படுகிற கோரிக்கைகளை மிகவும் அழுத்தமாக மக்களவையில் பதிவு செய்துள்ளார்.

நீண்ட காலமாக திராவிடர் கழகம் வலியுறுத்தி வரும், பிரச்சாரம் செய்து வரும், இவற்றுக்காக மாநாடுகளைத் தொடர்ந்து நடத்தி வரும், போராட்டங்களையும் நடத்தி வரும் கொள்கைகளும், கோரிக்கைகளும்தான் இவை.

தி.. - தி.மு.. இரட்டைக்குழல் துப்பாக்கி என்றால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் சேர்த்து மூன்று குழல் துப்பாக்கி என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கூறியது எவ்வளவு துல்லியமானது என்பதை எழுச்சித் தமிழர் மானமிகு தொல்.திருமாவளவன் நியாயப்படுத்தி இருக்கிறார்.

இந்தப் பிரச்சினைகளோடு நகமும் சதையுமாக இணைந்த இன்னொன்று - இட ஒதுக்கீட்டின் அளவு கோலில் திணிக்கப்பட்டுள்ள கிரீமிலேயர் முறை கண்டிப்பாக நீக்கப்பட வேண்டும்.

சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்டுள்ள மக்களுக்குத்தான் இட ஒதுக்கீடு என்ற இந்திய அரசமைப்புச் சட்ட சாசனம் திட்டவட்டமாகவே, தெளிவாகவே வரையறுத்திக் கூறியுள்ளது.

தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடு பொங்கி எழுந்த போராட்டத்தின் விளைவாக வெகுவாக இந்திய அரசமைப்புச் சட்ட சாசனம் முதன் முதலாகக் திருத்தப்பட்டது (15(4)).

அதற்கான சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது, நடைபெற்ற விவாதத்தில் பொருளாதார அளவுகோலும் பேசப்பட்டதுண்டு. ஜனசங்கத்தைச் சேர்ந்த சியாமா பிரசாத் முகர்ஜி பொருளாதார அளவு கோலையும் இணைக்க வேண்டும் என்று திருத்தம் கொடுத்த நிலையில், வாக்களிப்பிற்கு விடப்பட்டது. பொருளாதார அளவு கோல் என்பதற்கு எதிராக 243 வாக்குகளும், பொருளாதார அளவுகோல் என்பதற்கு வெறும் அய்ந்து வாக்குகளுமே ஆதர வாகக் கிடைத்தது என்பது வரலாறாகும்.

பிரதமராக பி.வி.நரசிம்மராவ் இருந்தபோது பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு கொண்டு வந்தபோது அதனை உச்சநீதிமன்றம் சட்டப்படி தவறு என்று நிராகரித்ததா  - இல்லையா?

குஜராத் மாநில முதல் அமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு சட்டம் கொண்டு வந்த போதும், ராஜஸ்தான் மாநில பா... ஆட்சியில் பொருளாதார அடிப்படையில் 14 விழுக்காடு இடம் அளிக்கும் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் நீதிமன்றங்கள் சட்ட விரோதம் என்று தள்ளுபடி செய்யவில்லையா?

இவ்வளவு இருந்தும் பொருளாதாரத்தில் நலிந்தோர் என்று கூறி(EWS) உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு சட்டத்தை ஒன்றிய பா... அரசு அவசர அவசரமாக செயல்படுத்தியது சட்டப்படி சரியானது தானா?

அதுவும் அதனை எதிர்த்து வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் அதனை செயல்படுத்தியது எப்படி?

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு என்று வரும் போது, வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகக் காரணம் காட்டும் ஒன்றிய பா... அரசு இதில் மட்டும் அதனைக் கண்டு கொள்ளாதது ஏன்? ஏன்?

ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய் இருக்கும் உயர் ஜாதியினர் ஏழையாம்! என்ன கொடுமை இது! பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை என்பது இதுதானோ!

தோழர் திருமா அவர்கள் அரசியல் நிலையிலும் மிகவும் தெளிவாகவே இருக்கிறார். எந்தக் காரணத்தை முன்னிட்டும் பா...  - ஆர்.எஸ்.எஸ்.களோடு இணக்கம் இல்லை என்பதில் கறாராகவே இருக்கிறார்.

ஜூனியர் விகடன்இதழில் (15.8.2021) வெளிவந்த செவ்வியில் ஒரு கேள்வி பதில்.

கேள்வி: இந்திய அளவிலும் சரி, தமிழக அளவிலும் சரி, தலித்திய இயக்கங்கள், தலைவர்கள், பா...வோடு நெருங்கிவிட்ட நிலையில் திருமாவளவன் மட்டும் விலகியே நிற்பது ஏன்?

திருமா பதில்: நான் கல்லூரி மாணவனாக இருந்த போதே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்சாகாபயிற்சிகளில் கலந்து கொள்ளச் சொல்லி என்னிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால் அப்பொழுது திராவிட இயக்கங்களோடு தொடர்புடைய என் சீனியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அதேபோல, அம்பேத்கர் கடைசி வரை ஒரு விஷயத்தை மூர்க்கமாக எதிர்த்தார் என்றால், அது சனாதனம்தான்.

ஆனால் ஆர்.எஸ்.எஸின் அடிப்படைக் கொள்கையே அதுதான். அவர்களின் அரசியல் பிரிவுதான் பாஜ.. சமத்துவத்தை, சமூக நீதியை விரும்பாத ஒரு கட்சியோடு, பதவிக்காக தனிப்பட்ட நலனுக்காக உறவாடுவது அல்லது கூட்டணி வைப்பது சரியல்ல என்பதில் நான் மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறேன் - என்று எழுச்சித் தமிழர் அளித்த விடை பதவிக்காகப் பல்லிளிக்கும் அரசியல் அவசியமே கிஞ்சிற்றும் இல்லை என்பதற்கான ஆதாரமாகும்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவரை அடையாளம் கண்டதும் - பெரியார் விருது அளித்து உச்சி மோந்ததும் - அமெரிக்காவின் வாசிங்டனில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்கச் செய்ததும் - அவர்மீது வைத்த இலட்சிய ரீதியான மதிப்பீடேயாகும்.

கழகம் நடத்தும் அத்தனை மாநாடுகளிலும் எழுச்சித் தமிழரின் கர்ச்சனை இருந்து கொண்டே இருக்கும்.

அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் நமது தலைவருக்குரிய முக்கியத்துவம் கண்டிப்பாக இருக்கும்.

எண்ணூரில் நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற எழுச்சித் தமிழர் அண்ணல் அம்பேத்கர் சிலை எங்கு திறக்கப்பட்டாலும் தந்தை பெரியார் சிலை திறப்பும் சேர்ந்தே இருக்கும் என்ற அவரின் பிரகடனம் மிகவும் முக்கியமானதாகும்.

ஆம், விடுதலை சிறுத்தைகள் மூன்றாவது குழல் - குழலேதான்!

குறிப்பு: ஆகஸ்டு 17 எழுச்சித் தமிழரின் 59ஆம் ஆண்டு பிறந்த நாள். அதனைப் போற்றும் வகையிலேயே இந்தக் கட்டுரை.

No comments:

Post a Comment