மின்சாரம்
‘லியோனிக்கு ஒரு நியாயம் குருமூர்த்திக்கு ஒரு நியாயமா?' என்று முரசொலி (10.7.2021) எழுதி விட்ட தாம். தாண்டிக் குதிக்கிறார் திருவாளர் குருமூர்த்தி.
அவரே ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுப்பதைப் பார்க்கலாம்.
"இரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘பெண் நலம்' என்ற கேன்ஸர் நோய்த் தடுப்பு அமைப்பு நடத்திய பெண்களுக்கான நிகழ்வில் நரம்பியல் மருத்துவர் ஒருவரும், நானும் பெண்களின் தன்மைப் பற்றிப் பேசினோம். அந்த மருத்துவர் நரம்பியல் விஞ்ஞான ரீதியில் பெண்மையை விளக்கினார். நான் கலாச்சார ரீதியாக பெண்மையை (Cultural Femisnism) விளக்கினேன். பெண்களை தெய்வமாக வணங்கும் நான் ‘நவீன கலாச்சாரத்தில் சிக்கிய பெண்களில் சிறுபான்மைதான் (30 சதவிகிதம்) தமிழ்க் கலாச்சாரம் பற்றிக் கூறும் பெண்களாக உள்ளார்கள்" என்று அங்கலாய்த்து பேசினேன். நான் பெண்களை இழிவாகப் பேசினேன் என்று சிலர் புரளி கிளப்பிட, இடதுசாரி அமைப்புகள் என்னை எதிர்த்து போராட்டம் செய்தன."
(‘துக்ளக்‘, 28.7.2021 பக். 3)
இதில் அவரே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து விட்டாரே!
தமிழ்க் கலாச்சாரம் என்று கூறுகிறாரே குருமூர்த்தி - எது தமிழ்க் கலாச்சாரம் என்று முதலில் விளக்க வேண்டும் - அந்தக் கலாச்சாரத்தில் பார்ப்பனப் பெண் களும் அடங்குவார்களா என்பதையும் விளக்க வேண்டும்.
30 சதவிகிதம் பெண்கள்தான் தமிழ்க் கலாச்சாரம் பற்றிக் கூறும் பெண்மை உள்ளவர்கள் என்கிறாரே - அது என்ன 30 சதவிகிதம்?
மீதி 70 சதவீதம் பெண்களின் மீது இவரது கருத்து மோசமானது தானே! அவரின் கண்ணோட்டத்தில்!
அதற்கான புள்ளிவிவரங்கள் அவரிடம் இருக் கின்றதா? இருந்தால் அதை வெளியிடட்டும் - அந்தப் புள்ளி விவரம் எந்த வகையில் எடுக்கப்பட்டது என் பதையும் தெளிவு படுத்தட்டும் - இதுவரை தெளிவு படுத்தாவிட்டால் அடுத்தடுத்த ‘துக்ளக்' இதழ்களிலாவது தெளிவுபடுத்த முன் வருவார் என்று எதிர்பார்க்கலாமா?
இது ஒரு புறம் இருக்கட்டும் - இவர்கள் போற்றும் ஹிந்துக் கலாச்சாரத்தில் மனுதர்மத்தில், கீதையில், இதிகாசங்களில் புராணங்களில் கூறப்படும் பெண்கள் பற்றிய கருத்துகளை இவர்கள் ஏற்றுக் கொண்ட பிறகு ‘பெண்களைத் தெய்வமாக வணங்கும் நான்' என்று கூறுவது அறிவு நாணயமற்ற தன்மை தானே!
மனுதர்மத்தில் பெண்கள் பற்றிக் கூறியது குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் - எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் கருத்துக் கூறியபோது ‘துக்ளக்', ‘தினமலர்', ‘தினமணி' வகையறாக்கள் வறுத்துக் கொட்டவில்லையா?
மாதர்கள் விபசார தோஷமுள்ளவர்கள் என்று கூறும் மனுதர்மத்துக்கு (அத்தியாயம் 9, சுலோகம் 19) வக்காலத்து வாங்குபவர்கள் குடலைக் கிழித்துக் காட்டி ‘பெண்களைத் தெய்வமாக வணங்கக் கூடியவர்கள் நாங்கள்' என்று சொன்னால் கிறுக்கன் கூட நம்ப மாட்டான்.
படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம் பொய் துரோக சிந்தனை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (மனு, அத்தியாயம் 9, சுலோகம் 17) என்று ஊத்தை வாயால் உளறும் மனுவுக்கு பாதந் தாங்குவோர் தலைகீழாக நின்று ‘பெண்களை தெய்வமாக வணங்குவோர் நாங்கள்' என்று கதறிக் கதறிக் கூவினாலும் கழிசடை மனிதன் கூட ஏற்க மாட்டான்.
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று கூறும் கீதையை (அத்தியாயம் 9, சுலோகம் 32) பகவான் கிருஷ்ணன் அருளியது என்று பக்திப் பரவசக் கண்ணீர் மல்கக் கண்களில் ஒத்திக் கொள்ளும் கூட்டம், ‘பெண்களைத் தெய்வமாக வணங்கக் கூடியவர்கள் நாங்கள்' என்று குட்டிக் கரணம் அடித்துக் குரல் கொடுத்தாலும் கொல்லென்று சிரித்து குப்பையில் ஒதுக்குவார்கள்.
வெகுதூரம் செல்வானேன்?
இவர்களின் ‘துக்ளக்'கில் பெண்கள் பற்றிய பார்வை என்ன?
கேள்வி: பெண்களைப் பற்றி உங்களின் உண்மையான அபிப்பிராயம்தான் என்ன?
பதில்: உயர்ந்தவர்கள், அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள் (‘துக்ளக்', 28.7.2009)
பெண்களைப் பார்த்து மனம் இரங்க நான் என்ன அரசியல்வாதியா, பேயா, பிசாசா? (‘துக்ளக்', 16.7.2009) என்று எழுதும் சோ ராமசாமியின் சீடரான குருமூர்த்தி பெண்களைத் தெய்வமாக மதிப்பதாகக் கும்பிட்டுச் சொன்னாலும், அதைக் கூழைக் கும்பிடு தான் என்று கூறி மன்னிக்க மாட்டார்கள்.
இதே குருமூர்த்தி கடந்த ஜூன் மாத துக்ளக்கில் கூட (23.6.2021) பெண்ணுரிமை என்னும் கோடாரியால் குடும்பங்கள் பிளக்கப்படுகின்றன என்று எழுதவில்லையா? பெண்கள் என்றால் உரிமை கோரக் கூடாது, அய்வருக்குத் தேவியாக இருந்து பத்தினி பட்டம் பெறவேண்டும் அப்படித்தானே!
காஞ்சி சங்கர மடத்திற்குச் சென்ற எழுத்தாளர் அனுராதா ரமணனின் கையைப் பிடித்து இழுத்த காஞ்சி சங்கராச்சாரிக்கு வக்காலத்து வாங்கி எழுதிய புரோக்கர் தானே இந்தக் குருமூர்த்தி.
‘முரசொலி'க்குப் பதில் எழுதும் குருமூர்த்தி ‘விடுதலை'க்கும் பதில் எழுதட்டும். பார்க்கலாம்! இன்னும் வாங்கிக் கட்டிக் கொள்ள ஏராளம் இருக்கிறது.
No comments:
Post a Comment