மூன்றாமாண்டு நினைவு நாள் முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு! முத்தாய்ப்பான கொள்கை மலர்வளையம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

மூன்றாமாண்டு நினைவு நாள் முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு! முத்தாய்ப்பான கொள்கை மலர்வளையம்!

 தமிழர் தலைவர்  ஆசிரியர்  விடுத்துள்ள  அறிக்கை

மூன்றாமாண்டு நினைவு நாள் முத்தமிழறிஞர் கலைஞருக்கு - முத்தாய்ப்பான  கொள்கை மலர்வளையம் இதுதான் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று (7.8.2021).

ஓய்வே அறியாது எழுதியும், பேசியும், நாடாண்டும், நல்ல தமிழ்க் காவியங்களையும், திரை ஓவியங்களையும் படைத்தும், என்றும் மறையாமல் கொள்கை உறவு களின் நெஞ்சங்களில் நிரந்தரமாகக் குடியேறி வாழ்பவராக இன்றும் இருக்கின்ற நம் முத்தமிழ் அறிஞர் கலைஞர்; என்றும் இருப்பார்!

முத்தமிழறிஞர் கற்ற பெரியாரியப் பாடம்!

தான் பயின்ற ஈரோட்டுக் குருகுல வகுப்பில் அவர் கற்ற முதல் பாடமே  -

எதிர்நீச்சலுக்கு அஞ்சாதே -

கடமையாற்றுவதை விட்டுத் துஞ்சாதே -

உழைத்துக் கொண்டே இரு -

உனக்கு உற்சாகத்திற்கான உணவு அதுதான்

என்பதே அவர் கற்ற பெரியாரியப் பாடம்!

அந்த எதிர்நீச்சல் கலைஞருக்கு - தந்தை பெரியாரைப் போலவே, உடலால் மறைவுற்ற பிறகும் கூட தொடரவே செய்தது என்பது அதிசய வரலாறு!

என்ன வியந்து பார்க்கிறீர்களா?

உடல் மறைவுக்குப் பின் எப்படிப் போராட முடியும்? அதிலும் எதிர்நீச்சல் எப்படிப் போட முடியும்? என்று கேட்கலாம்.

அண்ணாவின் நினைவிடத்திற்குப் பக்கத்தில் தனக்கும் இட ஒதுக்கீடு தேவை என்ற அவரது விருப்பத்தை நிறைவேற்ற முட்டுக்கட்டைப் போட்டனர் மூளிகள் - அன்று ஆட்சியில் இருந்த மனிதாபிமான மற்றவர்கள்!

வரலாறு படைத்தார் தளபதி!

அவரது போர்க்குணத்தை அப்படியே வரித்துக் கொண்ட அவரது அரிய கொள்கை வாரிசான தளபதி மு..ஸ்டாலின், வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளைத் துடைத்துக் கொண்டு, கலைஞரின் இறுதிப் பயணம் தொடங்கும்முன்பு நடத்திய சட்டப் போராட்டத் தின்மூலம் நீதியைப் பெற்று - வாகை சூடி - வைராக் கியத்துடன் அண்ணாவுக்கு அருகே நினைவிடத்தில் - கலைஞரையும் துயில் கொள்ளச் செய்து வரலாறு படைத்தார்!

இது கலைஞரின் எதிர்நீச்சல் வெற்றி அல்லவா!

தளபதி மு..ஸ்டாலின் செயல்திறனைக் கண்டு ஜெகமே வியந்தது!

திராவிடம் வெல்லும்நாளைய வரலாறு இதைச் சொல்லும்!

தளபதியின் கடும் உழைப்பு - அந்த  முதல் வெற்றியை தொடர் வெற்றியாக 2019 இல் நாடாளு மன்றத் தேர்தலில், 2021 இல் சட்டமன்றத் தேர்தலில்.

திராவிடம் வெல்லும் - நாளைய வரலாறு இதைச் சொல்லும்' என்ற குரல் தரணியெங்கும் ஒலித்தது!

கோட்டையில் கொடியேற்றும் உரிமை மாநில முதலமைச்சர்களுக்கு வரவேண்டும் என்று போராடி கலைஞர் பெற்ற வெற்றியால், இந்தியா முழுவதிலும் உள்ள பல கட்சி மாநில முதலமைச்சர்களும் உரிமைக் கொடியாக தேசியக் கொடியை ஏற்றுகின்றனர்.

தளபதியின் ஆளுமையை அகிலமே போற்றுகிறது!

இந்தியாவிற்கே கலைஞர் கொடுத்த அருட் கொடையல்லவா? அந்தக் கொடை அவரது ஆளுமைத் திரட்சியாகவும், நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சியாகவும் அடுத்த வாரம்  கோட்டையில் கொடியேற்றவுள்ள  - தமிழ்நாட்டை ஆளும் முதல மைச்சர் மு..ஸ்டாலின் நாளும் சாதனை சரித்திரத்தின் பொன்னேட்டில் எழுதிய வண்ணம் உள்ளார்!

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை பளிச்சிடுகிறது; அவரது ஆளுமையை அகிலமே போற்றுகிறது.

கொள்கை மலர்வளையம்!

இதைவிட, கலைஞர் நினைவிடத்தில் - அவரது மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் வைக்கும் கொள்கை மலர் வளையம் வேறு வேண்டுமா?

முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி தொடருகிறது!

திராவிடம் அதன் சிறகுகளை விரித்து மகிழ்கிறது!

வாழ்க பெரியார்!

வாழ்க கலைஞர்!!

வெல்க திராவிடம்!!!


கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை

7.8.2021

No comments:

Post a Comment