பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கூடுதலாக ஜாதிகள்: மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்ட மசோதா தாக்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 10, 2021

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கூடுதலாக ஜாதிகள்: மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்ட மசோதா தாக்கல்

புதுடில்லி, ஆக.10 இதர பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் கூடுதலாக ஜாதிகளை சேர்க்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா மக்கள வையில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்தன.

கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், நாடாளுமன்றத்தில் 102 ஆவது அரசியல் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு சட்டபூர்வத் தகுதி அளிக்க வகை செய்கிறது.

அதே சமயத்தில், இதர பிற் படுத்தப்பட்டோர் (.பி.சி.) பட்டியலில் கூடுதலாக ஜாதிகளை சேர்த்துக்கொள்ள மாநிலங்களுக்கு இருந்த அதிகாரம் பறிக்கப்பட்டது.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த மே 5ஆம்தேதி தீர்ப்பு அளித்தது. அதில், கூடுதலாக ஜாதிகளைச் சேர்க்க ஒன்றிய அரசுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக கூறியது.

இதையடுத்து, மாநில அர சுகளின் கோரிக்கையை ஏற்று, உச்சநீதிமன்றத் தீர்ப்பை நீர்த்துப்போக செய்யும்வகையில், அரசியல் சட்ட திருத்த மசோதா கொண்டுவர ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டது. இதன்மூலம், இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கூடுதலாக ஜாதிகளை சேர்த்துக்கொள்ள மாநிலங்களுக்கு அதிகாரம் கிடைக்கும். இந்த 127 ஆவது அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு கடந்த வாரம் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (9.8.2021) இம்மசோதா தாக்கல் செய்யப்படுவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. அதுபற்றிய நிலைப்பாட்டை முடிவு செய்வதற்காக, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறையில் 15 எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

இதில், காங்கிரஸ் மேனாள் தலை வர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார். தேசியவாத காங்கிரஸ், தி.மு.., சமாஜ்வாடி, சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட 15 கட்சிகளின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த மசோதா, மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா என்பதால், அதை ஆதரிப்பது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்தாலும், பெகாசஸ் உளவு விவகாரம், வேளாண் சட்டங்கள் ஆகியவை பற்றி விவாதிக்கக்கோரி அமளியை தொடருவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, மக்களவையில், பெகாசஸ் விவகார அமளிக்கிடையே, ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார், 127 ஆவது அரசியல் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மசோதாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்தார். அவர் கூறியதாவது:-

இந்த மசோதா, மக்கள் நலன் சார்ந்தது என்பதால், இதை ஆதரிக்க எதிர்க்கட்சிகள் சம்மதிக்கிறோம். இதே அவையில், 102 ஆவது அரசியல் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்தபோது, அது மாநிலங்களின் உரிமைகளை பறிக்கக்கூடியது என்று எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், ஒன்றிய அரசு கேட்கவில்லை. இப்போது, அந்த தவறு சரி செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இது, அரசியல் சட்ட திருத்த மசோதா என்பதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பதால், மசோதா நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது.

No comments:

Post a Comment