சென்னை, ஆக.2 சட்டமன்றத்தில் கலைஞரின் உருவப்படம் திறக்கப்படும் நாள், தமிழ்நாடு பெருமை கொள்ளும் நாள் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (2.8.2021) நடக்கவிருக்கும் சட்டசபை நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் முழு உருவப் படம் திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கலைஞரின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.
இந்த விழாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார். சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்கள் உள்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். குடியரசுத் தலைவர் வருகை யையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி, செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் உருவப்படம் திறக்கப்படும் நாள், தமிழ்நாடு பெருமை கொள்ளும் நாள் என்று குறிப்பிட்டார். மேலும் கலைஞர், தமிழ்நாடு தேர்தலில் தோல்வி என்பதையே பார்க்காத தலைவர் என்றும், போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வென்று முதல்-அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றியவர் என்றும் அவரது மகளான கனிமொழி எம்.பி. பெருமிதம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment