ஜெய்ப்பூர்,ஆக.10- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ளது சபர்மதி ஆசிரமம். சுமார் 13 ஆண்டுகள் இங்கு காந்தியார் வாழ்ந்துள்ளதால், இன்றும் மதிப்புமிக்க இடமாக போற்றப்பட்டு வருகிறது.
இந்த ஆசிரமம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால், புதுப்பிப்பதற்கான திட்டத்தை குஜராத் மாநில அரசு முன்வைத்தது. சுமார் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் காந்தி ஆசிரம அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் இங்கு நடைபெற உள்ளன. இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூறுகையில், ‘‘சபர்மதி ஆசிரமத்தின் தனித் தன்மையை சிதைக்கக் கூடாது. காந்தி எத்தனை எளிமையாக வாழ்ந்தார் என்பதை அந்த இடத்தைப் பார்க்கும் மக்கள் புரிந்துகொள்வார்கள். பாரம்பரியம் மாறாமல் அதை காப்பாற்ற வேண்டியது நம் கடமை. ஆசிரமத்தை இடித்து விட்டு அருங்காட்சியகம் கட்டப்போவதாக செய்திகள் வருகின்றன. காந்தியை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் இது அதிர்ச்சியான செய்தியாக உள்ளது. பிரதமர் மோடி உடனே இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். இந்த திட்டத்தை குஜராத் அரசு மறுபரீசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.
No comments:
Post a Comment