டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பாலினச் சமத்துவத்தைக் கிட்டத்தட்ட எட்டிவிட்டோம் என்று பெருமிதப் படுகிற வேளையில் உண்மையான பாலினச் சமத்துவத்தை அடையவில்லை என்கிற வேதனையும் எழுகிறது.
எந்தவொரு விளையாட்டிலும் ஆணுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், பெண்கள் பங்கேற்கும் வகையில் 18 புதிய போட்டிகளையும் பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி அறிமுகப்படுத்தியது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களின் பங்கேற்பு 49 சதவீமாக உயரக் காரணமாக இருந்த பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டியின் செயல் அதிகாரிகள் குழுவிலேயே பாலின ஏற்றத்தாழ்வு நிலவுவது நகைமுரண். பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழுவில் 33.3 சதவீதப் பெண்களே இடம்பிடித்திருக்க, குழு உறுப்பினர்களில் 37.5 சதவீதத்தினர் மட்டுமே பெண்கள். பாரா ஒலிம்பிக் குழுவில் பெண்களின் எண்ணிக்கை 25 சதவீதம் மட்டுமே.
பாலினச் சமத்துவத்தை மேம்படுத்தும் எண்ணத்தில் இளம் தாய்மாரும் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வகையில் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், டோக்கியோவில் கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளால் வீராங்கனைகள் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்து வரத் தடைவிதிக்கப் பட்டது. பாலூட்டும் தாய்மார் இதற்குக் கண்டனம் எழுப்பினர். அதைத் தொடர்ந்து தாய்மார் குழந்தைகளைத் தங்களுடன் தங்கவைத்துக்கொள்ளலாம் என்று ஜூன் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டது.
டோக்கியோ ஒலிம்பிக்கின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் யோஷிரோ மோரி, பெண்கள் அதிகமாகப் பேசுவார்கள் என்று கூட்டத்தில் பேசியதையடுத்து அந்தப் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஒலிம்பிக் முன்னாள் வீராங்கனையும் ஜப்பானின் அரசியல்வாதியுமான செய்கோ ஹஷிமோட்டோ நியமிக்கப்பட்டார். அதேபோல், ஒலிம்பிக் தொடக்கவிழாவின் கிரியேட்டிவ் இயக்குநர், ஜப்பானின் ஆடை வடிவமைப்பாளர் நவோமியின் தோற்றம் குறித்து மோசமான கருத்துகளைச் சொன்னதால் அவரும் அந்தப் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டார்.
பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டியின் நிறுவனரான பியர் த கூபர்தான் 1896ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பங்கேற்கத் தடை விதித்தார். 1952ஆம் ஆண்டுவரை பத்து சதவீதத்துக்கும் குறைவான பெண்களே ஒலிம்பிக்கில் பங்கேற்றனர். அதன் பிறகு பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததே தவிர, பாலினச் சமத்துவத்தை முழுமையாக அடைய முடியவில்லை. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, ஒலிம்பிக் வரலாற்றில் டோக்கியோ ஒலிம்பிக்கில் கடைப்பிடிக்கப்பட்ட பாலினச் சமத்துவ நடவடிக்கைகள் முக்கியமான மைல் கற்கள். ஒலிம்பிக் கமிட்டியின் அறிவிப்பால் பல நாடுகளும் தங்கள் அணியில் பெண்களை அதிக எண்ணிக்கையில் இடம்பெறச் செய்தன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா, கனடா ஆகிய நாடுகள் ஒருபடி மேலே போய், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையிலான பெண்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பின. போட்டிக்கு ஏற்ற ஆடைகளைப் பெண்கள் அணிவது குறித்த விவாதத்தை ஜெர்மனியின் ஜிம்னாஸ்டிக்ஸ் அணி தொடங்கிவைத்தது. பெண்களை வெறும் உடலாகப் பார்க்கும் கலாச்சாரம் உலகம் முழுக்க நிலவிவரும் நிலையில் விளையாட்டுத் துறையும் அதற்கு விதிவிலக்கல்ல. பொதுவாக ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் கைகளையும் கால்களையும் வளைத்து இயங்குவதற்கு ஏதுவாக உடலை இறுக்கிப் பிடிக்கும் சிறிய ஆடைகளைத்தாம் அணிவார்கள். கால்கள் முழுவதும் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்ட அந்த உடை தங்கள் உடலை வெளிப்படுத்துகிற விதத்தில் உடன்பாடு இல்லை என்று அறிவித்த ஜெர்மன் பெண்கள் அணி, கழுத்து முதல் கால் வரை மறைக்கும் முழு ஆடையை அணிந்தது.
பாலினச் சமத்துவத்துக்கான ஏற்பாடு களால் பலன் அடைகிறவர்கள் வெள்ளை இனப் பெண்களே என்கிறது வரலாறு. கனடா உள்படப் பெரும்பாலான நாடுகளில் கறுப்பினப் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நிற வேற்றுமையைக் களையாமல், பாலினச் சமத்துவம் குறித்து முழங்குவதால் எந்தப் பலனும் இல்லை. அனைத்துப் பெண்களுக்கும் சமமான வாய்ப்பு வழக்கப்படுவதுதான் சமத்துவத்தை அடைய உதவும். அதேபோல் மாற்றுப் பாலினத்தவர் பங்கேற்பு குறித்த தகவல்களை ஒலிம்பிக் கமிட்டி வெளியிடவில்லை. ஒவ்வொரு போட்டிப் பிரிவிலும் குறைந்தது ஓர் ஆண், ஒரு பெண் இருக்க வேண்டும் என்று அறிவித்ததே தவிர மாற்றுப் பாலினத்தவர் குறித்து எந்தக் குறிப்பும் தரப்படவில்லை.
தொடரும் ஜாதிய வன்மம்
அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றதன் மூலம் இந்திய மகளிர் ஆக்கி அணி வரலாற்றுச் சாதனையைப் படைத்தது. ஆனால், ஆகஸ்ட் 3 புதனன்று அர்ஜெண்டினா அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தது. போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, இந்திய ஆக்கி அணியைச் சேர்ந்த வந்தனாவின் வீட்டுக்கு முன் இருவர் வந்தனர். போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் அவர்களின் திறமை குறித்து வந்தனாவின் குடும்பத்தினர் பெருமிதப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அந்த இருவரும் பட்டாசைக் கொளுத்திப் போட்டு நடனமாடினர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்ததும் அவர்களை ஜாதிரீதியாகத் திட்டியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான பட்டியலினப் பெண்கள் இடம்பெற்றதால்தான் இந்திய அணி தோற்றுவிட்டது என்றும் ஆக்கியில் மட்டுமல்ல; மற்ற எல்லா விளையாட்டுகளில் இருந்தும் பட்டியல் இனத்தவரை வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கூச்சலிட்டுள்ளனர். பெண் என்கிற அடையாளத்தாலேயே பல்வேறு ஒடுக்குமுறைகளைத் தாண்டித்தான் விளையாட்டுத் துறையில் கால்பதிக்க முடிகிறது என்றால், இதுபோன்ற ஜாதிய தாக்குதல்கள் பெண்களை மேலும் பின்னோக்கி இழுக்கின்றன.
பயிற்சியாளர்கள் விஷயத்தில் பெண்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். ஆண்கள் மட்டுமே சிறந்த பயிற்றுநர்களாக இருக்க முடியும் என்கிற ஆணாதிக்க மனோபாவம் மட்டுமல்ல இதற்குக் காரணம். பெண்களை விளையாட்டுத் துறையில் அனுமதிக்காத பிற்போக்குச் சிந்தனையின் விளைவும்தான் இது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட பெண் பயிற்சியாளர்களின் எண்ணிக்கை பத்து சதவீதம் மட்டுமே. இந்த எண்ணிக்கையை உயர்த்துவதற்காகப் பல்வேறு பன்னாட்டு விளையாட்டுக் கூட்டமைப்புகளோடும், தேசிய ஒலிம்பிக் குழுக்களோடும் பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டிபேசிவருகிறது. இது பேச்சளவில் மட்டும் நின்றுவிடாமல் செயலாகவும் பரிணாமம் அடைவது நல்லது.
No comments:
Post a Comment