சட்டத்திற்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் விரோதமான ஒன்றிய அரசின் முடிவை அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து முறியடிப்போம்! முறியடிப்போம்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 1, 2021

சட்டத்திற்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் விரோதமான ஒன்றிய அரசின் முடிவை அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து முறியடிப்போம்! முறியடிப்போம்!!

           மருத்துவக் கல்வி மேற்படிப்பு  (PG)  இடங்களையும் - ஒன்றிய அரசே நிரப்பும் என்பது முற்றிலும் சட்ட விரோதமானதே

          முதுகலையில் கை வைப்பவர்கள் அடுத்து இளநிலை எம்.பி.பி.எஸ்.ஸிலும் கை வைப்பர்

மருத்துவக் கல்வியில் முதுநிலைக் கல்விக்கான இடங்களை ஒன்றிய அரசே நிரப்பும் என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது- - & மாநில அரசின் உரிமைகளைப் புறக்கணிப்ப தாகும். முதுகலையில் கை வைக்கும் ஒன்றிய அரசு அடுத்து இளநிலை (எம்.பி.பி.எஸ்.) படிப்பிலும் கை வைக்கும். சட்டம், நீதிமன்ற தீர்ப்புகளுக்கு விரோதமாக செயல்படும் ஒன்றிய அரசின் இம்முடிவை எதிர்த்து ஒன்றுபட்டு அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணிஅவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஒன்றிய அரசாக பா... பதவியேற்ற 2014 முதல் இன்று வரை, மாநிலங்களுக்கு நமது இந்திய  அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அதிகாரங்களை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் பறிக்கும் நிகழ்வுகளே பெரிதும் திட்டமிட்டு நடைபெற்று வருகின்றன!

மாநிலங்களே கூடாது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். கொள்கை

அதன்படி நடப்பதுதான் பா...

காரணம் ஆர்.எஸ்.எஸ். என்ற பா...வின் வழிகாட்டி மூல  அமைப்பின் கொள்கை மாநிலங்களே இல்லாத - அதாவது கூட்டாட்சி (Federation) என்பதே இல்லாத -  டில்லி மட்டுமே ஆட்சி செய்கிற ஒற்றை ஆட்சியாக (Unitary Rule) மட்டுமே நடைபெற வேண்டுமென்பதேயாகும்!

அந்த வரிசையில் டில்லியில் ஒன்றிய அரசாக இருந்த காங்கிரஸ் அரசு கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு - நெருக்கடி காலத்தில் மாநிலங்களின் ஒப்புதலோ, விவாதமோ இன்றி மாற்றியது.

அதனை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வர வேண்டுமென்ற குரல் நாடெங்கும் இப்போது ஓங்கிக் கேட்கும் நிலையில், 2014 முதல் பதவியேற்று அதிகாரத்திலுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு கல்வியை ஒத்திசைவுப் பட்டியலிருந்து (Concurrent List) ஒன்றிய அரசுப் பட்டியலுக்கே (Union List) - மாற்றி விட்ட ஆக்கிரமிப்பை நாளும் திட்டமிட்டே நடத்தி வருகிறது!

உண்மையிலே ஒன்றிய

அரசின் அதிகாரம் என்ன?

நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கு ஒரே தேர்வு என்ற சட்டத்தை - மருத்துவக் கவுன்சிலைக் கலைத்து தேசிய மருத்துவ ஆணையம் என்ற ஒன்றை உருவாக்கி 'நீட்' தேர்வை நடத்தத் துவங்கியது; இதுவே ஏழாவது அட்டவணையில் அந்த அரசுகளுக்குரிய அதிகாரப் பகிர்வில், உள்ள 66ஆவது பிரிவின்படி (Union List - ஒன்றிய அரசு பட்டியலில்).

coordination and determination of standards in institutions for higher education or research and scientific and Technical Institutions என்பது மட்டும்தான்.

இதன்படி உயர்கல்வியில் தொழிற்கல்வியின் தரத்தை நிர்ணயம் செய்து ஒருங்கிணைக்கும் அதிகாரம் மட்டும்தான் அதற்குண்டு.

மற்றபடி மருத்துவக் கல்லூரிகளை மாநில அரசுகள் அமைக்கின்றன; ஆண்டுதோறும் தங்களது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி செலவழிக்கின்றன. மருத்துவ அடிக்கட்டுமான வளர்ச்சிக்கு இது இன்றியமையாதது என்பதால்....

இப்போது திடீரென "ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைந்ததோடு, கூடாரம் முழுதும் தனக்கே" என்று அறிவிப்பதுபோல,

மருத்துவக் கல்வியில் மேற்பட்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கையை 100 சதவிகிதம் நாங்கள்தான் செய்வோம் என்று ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை கூறுவது - அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு எதிரான சட்ட விரோதம்!

அதிர்ச்சிக்குரிய வரைவு அறிக்கை

வரைவு (Draft) என்பதன் மூலம் இந்த அதிர்ச்சிக்குரிய அறிவிப்பு வந்துள்ளது.

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்கள் உடனே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து - மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் இந்த வரைவு யோசனையைக் கைவிட்டு முந்தைய ஏற்பாடே தொடர வேண்டும் என்று ஒன்றிய அரசின் துறைக்கு உடனடியாக கால தாமதம் செய்யாமல் கடிதம் எழுதியுள்ளார்.

நமது தி.மு.. எம்.பி.க்களும், தமிழ்நாட்டு மருத்துவ அமைப்புகளும்கூட இந்த விபரீத யோசனைக்குத் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளன!

மாநிலத்துக்கு மாநிலம் இடஒதுக்கீட்டின் அளவு மாறவில்லையா?

இடஒதுக்கீட்டுப்படி நடக்க வேண்டியது மருத்துவக் கல்வி சேர்க்கை. மாநிலத்திற்கு மாநிலம் இடஒதுக்கீடு மாறுபடும் நிலையிலும், மருத்துவம், மாநிலத்தின் நேரடியான நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருவதால், அந்தக் கல்வியில் மேற்பட்டப் படிப்பு (P.G.) மாணவர் சேர்க்கையை ஒன்றிய அரசாகிய நாங்களே செய்வோம் என்று கூறுவது எவ்வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல - அல்லவே அல்ல!

அடுத்து எம்.பி. பி.எஸ்.ஸிலும்

கை வைப்பார்கள்

முதலில் (P.G.) யில் ஆரம்பித்து, அடுத்து M.B.B.S. லும் நாங்களே தான் சேர்ப்போம், டில்லியில்தான் எல்லாக் குவியலும் என்பது அரசமைப்புச் சட்டத்தின் மூன்று பட்டியல்களைப் பிரித்துள்ள ஏழாவது அட்டவணை அத்தனையும் பறித்து, ஒற்றை ஆட்சியாக மாற்றி மாநிலங்களையே இல்லாமற் செய்யும் முயற்சியின் முனைப்பு இது என்பதல்லாமல் வேறு என்ன?

ஏற்கெனவே உச்சநீதிமன்றம் அளித்துள்ள மாநிலஉரிமைகளுக்கான தீர்ப்புகளுக்கேகூட இந்த புதிய வரைவு ஏற்பாடு (Draft Proposal)  முரண்பாடே!

எனவே அரசமைப்புச் சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும், மாநிலங்களின் உரிமை அதிகாரங்களுக்கும், எதிரான இத்தகைய சமூக அநீதிகள், சட்டப்புறம்புகளை ஒன்றிய அரசு கைவிட அனைத்து மாநிலங்களும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டியது அவசரம், அவசியம்.

அனைத்துக் கட்சிகளும்

குரல் கொடுப்போம் - போராடுவோம்!

தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் இதற்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுப்பதும்; போராடுவதும் அவசியம்! அவசியம்!!

கிவீரமணி

தலைவர் 

திராவிடர் கழகம் 

சென்னை       

1.8.2021              

No comments:

Post a Comment