வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு!!
சென்னை, ஆக. 10- வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாளை 11ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திரு வண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.வருகிற 12 மற்றும் 13ஆம் தேதிகளில் நீலகிரி,கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நீலகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யலாம்.
வருகின்ற 13ஆம் தேதி வரை மன்னார் வளைகுடாப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு இலங்கை பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், கேரளக் கடலோரப் பகுதி, லட்சத் தீவு பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதி, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக் கடல் பகுதி ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கை
காசிமேட்டில் புதிய கட்டுப்பாடுகள் அமல்!
சென்னை, ஆக. 10- தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப் படுத்த பல தளர்வுகளுடன் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி காசிமேடு மார்க்கெட்டிலும் மீன் விற்பனை செய்ய புதிய நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் மீனவ சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் மீன் விற்பனை செய்ய புதிய கட்டுப்பாடு விதித்துள்ளனர். அந்தவகையில், காசிமேடு மீன் விற்பனை கூடம் அருகே விசைப்படகுகளில் இருந்து மீன் களை இறக்கக்கூடிய இடத்தில் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை மீன்களை வாங்கி செல்ல மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக விசைப் படகுகளில் இருந்து மீன்களை இறக்கக்கூடிய இடத்தில், மொத்த வியாபாரிகள் மீன்களை வாங்கி எடுத்து சென்று வேறு இடத்தில் விற்பனை செய்யவேண்டும். ஒரே இடத்தில் அதிகப்படியாக கூடுவதால் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீன்வளத் துறை அதிகாரிகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை களை பயன்படுத்தி மொத்த வியாபாரிகள் மீன்களை வாங்கிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட் களான சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் காசிமேடு மீன்மார்க் கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதும். தற்போது கரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment