பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 69 சதவீதமாக உயர்த்த வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 11, 2021

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 69 சதவீதமாக உயர்த்த வேண்டும்

 மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. வலியுறுத்தல்

புதுடில்லி, ஆக.11 பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 69 சதவீதமாக உயர்த்த வேண்டும்  என்று மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வலியுறுத்தினார்.

மத்திய சென்னை தொகுதி தி.மு.. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் டில்லி மக்களவையில் பேசியதாவது:-

உச்சநீதிமன்றம் வலியுறுத்தியும், ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை மத்திய அரசு வெளியிட மறுப்பது ஏன்? மேலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த இடஒதுக்கீட்டுக்கு ஒன்றிய அரசு எப்படி பெருமை கொள்ள முடியும்? தேர்தல் வரும் போதெல்லாம் நீங்கள் வடிக்கும் முதலைக் கண்ணீரை கண்டு இந்திய மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு என்பது மிகவும் குறைவு. எனவே தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது போல 69 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி உறுதி செய்யுங்கள். கிராமப்புறங்களில் உள்ள எங்கள் மாணவர்களின் மருத்துவ கனவுகளை நீட் எனும் தேர்வு கொன்று வருகிறது.

எனவே நீட் தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் மருத்துவம் படிக்க வழி செய்யுங்கள். தமிழ்நாட்டில் அமலில் உள்ளது போல் 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை வெளியிடவும் நான் உங்களை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தனியார்துறையிலும் இடஒதுக்கீட்டுக்கு

சட்டம் இயற்ற வேண்டும்

மக்களவையில் திருமாவளவன் பேச்சு

புதுடில்லி, ஆக.11    இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை முடிவு செய்யும் உரிமையை மாநில அரசுகளுக்கு வழங்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா மீது மக்களவையில் நேற்று (10.8.2021) விவாதம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்  திருமாவளவன் தமிழில் ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது:-

இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கி இருந்த தீர்ப்பு, மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்தது. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் அறிக்கை வெளியிட்டோம். அதன் அடிப்படையில் இந்த மசோதாவை தற்போது வரவேற்க கடமைப்பட்டு உள்ளோம். ஆனால் இந்த மசோதாவை கொண்டு வந்ததன் மூலம் இந்த அரசு இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் நலன்களுக்கான அரசு, மாநில உரிமைகளை பாதுகாக்கிற அரசு என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரிகிறது. ஆனால் எந்த வகையிலும் இந்திய மக்கள் இந்த அரசை நம்பமாட்டார்கள்.

மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்த இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை தருவதற்கு வி.பி.சிங் முன்வந்தபோது மிகப்பெரிய வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்ட கட்சி எது என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று வன்முறையை கட்டவிழ்த்து விட்டதோடு மட்டுமல்லாமல், ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்திய கட்சிதான் பா... அது சமூக நீதிக்கு எதிரான கட்சி, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான கட்சி என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

இந்த அரசுக்கு உண்மையிலேயே சமூகநீதி மீது அக்கறை இருக்குமானால், உச்சநீதிமன்றம் விதித்து இருக்கிற 50 சதவீத உச்சவரம்பை தகர்த்து எறியும் வகையில் அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். தனியார்துறையிலும் இடஒதுக்கீட்டை கொண்டுவர சட்டம் இயற்ற வேண்டும் என்று அவர் பேசினார்.

No comments:

Post a Comment