தமிழ்நாட்டின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடி வெள்ளை அறிக்கையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 10, 2021

தமிழ்நாட்டின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடி வெள்ளை அறிக்கையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை, ஆக. 10 தமிழ்நாட்டின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடி என்று நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையில் கூறப் பட்டு உள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 லட்சம் கடன் இருப்பதாகவும் கூறப் பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தி.மு.. அரசு பொறுப்பு ஏற்ற தும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி வெள்ளை அறிக்கை நேற்று (9.8.2021) வெளியிடப்பட்டது.

அவல நிலை

சென்னை தலைமைச் செய லகத்தில், தமிழ்நாடு நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் நேற்று (9.8.2021) வெளியிட்டார். அதில் கூறப்பட்டு உள்ள விவரங்கள் வருமாறு:-

* கடந்த 2012ஆம் ஆண் டிற்கு பிறகு தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமடையத் தொடங்கியது. 2017--2018 மற் றும் 2018-2019ஆம் ஆண்டு களில் மராட்டியம், குஜராத், கருநாடகா ஆகிய மாநிலங்கள் உபரி வருவாயை எட்டின. ஆனால் தமிழ்நாடு மட்டும் வருவாய் பற்றாக்குறையைச் சந்தித்து வந்துள்ளது.

2019--2020ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறையின் அளவு ரூ.35 ஆயிரத்து 909 கோடியாக இருந்து, 2020--2021ஆம் ஆண்டில் ரூ.61 ஆயிரத்து 320 கோடியாக உயர்ந்தது.

* வெளிச்சந்தையில் கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டி சாலைகள், பாலங்கள், கட்ட டங்கள் அமைப்பது போன்ற மூலதனச் செலவுகளை மேற் கொள்வது அரசின் வழக்கம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அந்த நிலை மாறி, அரசு ஊழி யர்களுக்கு ஊதியம் வழங்கு வதற்கே கடன் வாங்கும் நிலை வந்தது. கடன் பத்திரம் மூலம் திரட்டப்பட்ட நிதி, ஏற் கெனவே வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்துவதற்கு பயன்படுத்தும் அளவுக்கு அவல நிலை ஏற்பட்டுவிட்டது.

வருவாய் வளர்ச்சி குறைவு

* கடந்த 10 ஆண்டுகளில் அரசின் வருவாய் வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது. 2006--2007ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் (ஜி.டி.பி.) சொந்த வரிவரு வாய் 8.48 சதவீதமாக இருந்தது. சொந்த வரி வருவாய் சரிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து 2020--2021ஆம் ஆண்டில் அது 5.46 சதவீதமாக குறைந்தது. ஆக, இந்த 3 சதவீத சரிவின் அளவு, ரூ.60 ஆயிரம் கோடி யாகும். அதாவது, தமிழ்நாட் டிற்கு இந்த அளவுக்கு வருவாய் இழப்பு நேரிட்டுள்ளது.

* 2018--2019ஆம் ஆண்டில் தான் முதன் முறையாக தமிழ் நாட்டின் ஜி.டி.பி.யின் மொத்த வரி வருவாய் விகிதம், தேசிய சராசரியைவிடக் குறைந்தது. தமிழ்நாட்டின் வாகன வரி வருவாய் கேரளா, கருநாடகா மாநிலங்களைவிட குறைவாக உள்ளது. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மீதான வரி வரு வாய் குறைந்துள்ளது. அதோடு அங்கிருந்து வரும் வருவாயில் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு தந்த அளவு

* ஒன்றிய அரசு நியமித்த நிதிக்குழுக்கள், தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக உருவாக்கிய விதிமுறைகள் காரணமாக தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்க வேண்டிய ரூ.2,577.29 கோடி கிடைக்கவில்லை. அதை கடந்த அரசு வாதாடிப்பெறவில்லை.

* 2020--2021ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் மீது அதிக வரியை விதித்து ரூ.3 லட்சத்து 89 ஆயிரம் கோடி வருவாயை ஒன்றிய அரசு ஈட்டிக்கொண் டது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூ.837 கோடியை மட்டுமே ஒன்றிய அரசு பகிர்ந்தளித்தது.

* தமிழகத்தில் மேற் கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவு கடந்த 10 ஆண்டுகளில் 5.4 சதவீதம் குறைந்துவிட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நேரத்தில் தேர்தல் நடத் தாததால் ஒன்றிய அரசின் மானியங்களைப் பெறமுடி யாமல் போய், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்திறன் மிகவும் பாதிப்படைந்தது.

ஒருவருக்கான கடன் அளவு

* தமிழ்நாடு அரசு போக் குவரத்து கழகங்கள் மற்றும் மின்சார வாரியத்தின் ஒட்டு மொத்த கடன் ரூ.2 லட்சம் கோடியாகும். சென்னை மற் றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியங்களின் மொத்த கடன் ரூ.5,282 கோடியாகும்.

* முறையற்ற நிர்வாகத் தினாலும், மோசமான நிதி மேலாண்மையினாலும் போக்குவரத்து கழக பேருந்து கள் இயக்கப்படும் ஒவ்வொரு கி.மீ. தூரத்திற்கும் ரூ.59 இழப்பு ஏற்படுகிறது. அதன்படி, அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஏற்படும் தினசரி இழப்பு ரூ.15 கோடியாகும்.

தினசரி இழப்பு ரூ.55 கோடி

* கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்குவதும், சொந்த உற்பத்தி நிலையங்களை அதிகரிக்காத தாலும் மின்சார வாரியத்திற்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.2.36 இழப்பு ஏற்படுகிறது. அதன்படி தமிழ் நாடு மின்சார வாரியத்தின் தினசரி இயக்க இழப்பு ரூ.55 கோடி.

* தமிழ்நாடு அரசின் பொதுக்கடன் கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்து 189 கோடியாகும். அந்த கடனுக் காக தினசரி அரசு செலுத்தும் வட்டி ரூ.115 கோடி. பொதுத் துறை நிறுவனங்கள், பிற நிறு வனங்கள் தினசரி செலுத்தும் வட்டித்தொகை ரூ.180 கோடி.

* இதனால் ஒவ்வொரு குடிமகன் மீதும் சுமத்தப்பட்ட ஓராண்டுக்கு செலுத்தும் வட் டித்தொகை ரூ.7,700. ஒவ்வொரு குடிமகனுக்கான மொத்த கடன் (பொதுத்துறை நிறுவ னங்கள் மற்றும் வெளியில் தெரியாத கடன்கள் உள்பட) ரூ.1 லட்சத்து 10 ஆயிரம். அந்த வகையில் ஒரு குடும்பத்தின் மீது சுமத்தப்பட்ட பொதுக் கடன் தொகை ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 976.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment