சிறீநகர்,ஆக.2- இந்தியப் பொருளாதாரப் பணி தேர்வில் (அய்இஎஸ்) ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த விவசாயியின் மகனுக்கு 2ஆம் இடம் கிடைத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டம் நிகீன்போரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி போலா. இவரது மகன் தன்வீர் அகமது கான். இவர் அண்மையில் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய அய்இஎஸ் தேர்வை எழுதியிருந்தார்.
இந்தத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் தன்வீர் அகமது அகில இந்திய அளவில் 2ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஆரம்பப் பள்ளிப் படிப்பை குந்த் கிராமத்திலுள்ள அரசு பள்ளியிலும், பின்னர் மேல்நிலைப்பள்ளி படிப்பை வால்டென்கூவிலுள்ள அரசு பள்ளியிலும் படித்தார் தன்வீர் அகமது. பின்னர் அனந்த்நாக்கிலுள்ள அரசு கலைக் கல்லூரி யில் பட்டப் படிப்பைப் படித்த தன்வீர், அதைத் தொடர்ந்து பட்டமேற்படிப்பையும் முடித்தார். இதையடுத்து அய்இஎஸ் தேர்வை தற்போது எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றி குறித்து தன்வீர் அகமது கூறும்போது, “நான் பட்டமேற்படிப்பிலும் வெற்றி பெற்று சாதித்துள்ளேன். மேலும் இந்த பட்டமேற்படிப்பு தேர்வில் ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப் (ஜேஆர்எப்) விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டேன். இதையடுத்து கொல்கத்தாவிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸில் எம்.பில். படித்தேன். படிப்பு நேரம் போக, கொல்கத்தாவில் ரிக்ஷா இழுத்தும் பணம் சம்பாதித்தேன். இந்தப் பணம் எனது படிப்புக்கு உதவியது. எந்த ஒரு செயலையும் கடினமாகவும், கவனமாகவும் செய்யும்போது அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். கரோனா பிரச்சினையால் என்னுடைய படிப்பு பாதிக்காமல் பார்த்துக் கொண்டேன்” என்றார்.
இந்நிலையில், தன்வீருக்கு சமூக வலை தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. காஷ்மீர்துணைநிலை ஆளுநர் மனோஜ்சின்ஹா உள்ளிட்டோரும் தன்வீருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment