2ஆவது டோசுக்கு வேறு தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்து ஆய்வு: வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 13, 2021

2ஆவது டோசுக்கு வேறு தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்து ஆய்வு: வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை தகவல்

வேலூர்,ஆக.13 கரோனா பரவலை தடுக்கவும், உயிர் சேதத்தை தவிர்க்கவும் தடுப்பூசி மிகப்பெரிய உபயோகமாக உள்ளது. தற்போ தைய சூழலில் முதலாவது தவணையிலும், 2ஆவது தவணையிலும் ஒரே வகை தடுப்பூசியை மட்டுமே செலுத்திக்கொள்வதற்கு மட்டுமே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்.சி.எம்.ஆர்) அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓர் ஆய்வு முடிவை அய்.சி.எம்.ஆர். வெளியிட்டது.

அதில், முதல் தவணையில் ஒரு வகை தடுப்பூசியையும், 2ஆவது தவணையில் மற்றொரு வகை தடுப்பூசியும் செலுத்தினால் கரோனாவுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் அதிகமாக உருவாவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. கோவிஷீல்டு தடுப்பூசியைப் பொறுத்தவரை சிம்பன்சியில் இருந்து பெறப்பட்ட வீரியம் குறைக்கப்பட்ட அடினோ வைரஸ் மரபணு ரீதியாக சில மாற்றங்கள் செய்து அதனை மனித உடலுக்குள் செலுத்தும் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசி செயலிழந்த கரோனா வைரஸ் தீ நுண்மியை மருத்துவ நுட்பத்தில் உரிய மாற்றங்கள் செய்து உடலில் செலுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இந்த இரு தடுப்பூசிகளையும் மாறி மாறி செலுத்திக்கொள்வது பாதுகாப்பானது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி விண்ணப்பித்திருந்தது. அதற்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சி.எம்.சி மருத்துவமனை மருத்துவர் ஜேக்கப் ஜான் தலைமையிலான குழுவினர் இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரே நபருக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் ஆகிய இருவேறு கரோனா தடுப்பூசிகளையும் செலுத்துவது தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வேலூரில் 600 தன்னார்வலர்களுக்கு இருவேறு தடுப்பூசிகளையும் செலுத்தி பரிசோதிக்க முடிவு செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்த பின்னர் அது குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என சி.எம்.சி. நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment