பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே 27 குழந்தைகள் கரோனாவால் பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 13, 2021

பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே 27 குழந்தைகள் கரோனாவால் பாதிப்பு

 அதிர்ச்சியில் பஞ்சாப் அரசு

சண்டிகர் ஆக 13  பஞ்சாபில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே வாரத்தில் 27 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.  தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்கள்  அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு (2020) மார்ச் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதால், பல மாநில அரசுகள் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளன.   தமிழ்நாட்டில்  செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 48 சதவிகித பெற்றோர்கள், குழந்தைகள் கரோனா தடுப்பூசி பெறும் வரை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை என்று தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், பஞ்சாப் மாநில அரசு கடந்த 2ஆம் தேதி முதல் (ஆகஸ்டு) பள்ளிகளை திறந்துள்ளது. கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகளை திறக்கப்பட்ட நிலையில், ஏராளமான மாணவர்களும் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில்,  பல மாவட்டங்களில் மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதைத்தொடர்ந்து,  நடத்தப்பட்ட சோதனையில் கரோனா தொற்று உறுதியாக உள்ளதாகவும், மாநிலத்தில்,  லுதியானா, அபோகார், நவன்சாகர், அமிர்தசரஸ் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 அரசுப் பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து,  மற்ற மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து தினமும் பத்தாயிரம் பரிசோதனைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 47 மாணவர்களும், அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் உடல்நிலை சுகாதாரத்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும்   மாநில சுகாதாரத்துறை  தெரிவித்து உள்ளது.

பள்ளி குழந்தைகளுக்கு கரோனா தொற்று பரவியிருப்பது, பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment