சாத்தூரில் பழைமையான தொல்லியல் தடயங்கள் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 9, 2021

சாத்தூரில் பழைமையான தொல்லியல் தடயங்கள் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தகவல்

சென்னை, ஆக.9 சாத்தூரில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல்மேடு கண்டறியப் பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங் களில் தொல்லியல் சான்றுகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன. தற்போது சாத்தூர் வைப்பாறு அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தொல்லியல் மேடு கண்டறியப்பட் டுள்ளது.

இதுகுறித்து, சாத்தூர்  எஸ்.ராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரியின் விலங்கியல் துறை உதவிப் பேராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான பா.ரவிச்சந்திரன் கூறிய தாவது: சாத்தூர் பகுதியானது பண்டைக்காலம் தொட்டே சாத்தனூர் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது என்பதை முற்காலப் பாண்டிய வேந்தன், மாற வல்லபனின் காலத்தைச் சேர்ந்த கி.பி. 823ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிய முடிகிறது. அக்கல்வெட்டில் இருன்சோ நாட்டுச் சாத்தனூர் என்ற பெயர் காணப்படுவதில் இருந்து இவ்வூரின் தொன்மையை அறிய முடியும். இப்பகுதியில் சங்க காலம் முதல் மக்கள் வாழ்ந்த தடயங்களான தொல்லியல் மேடுகள், முதுமக்கள் தாழிகள், கல்வெட்டுகள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன.

அண்மையில், சாத்தூர் வைப்பாற்றின் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்துக்கு அருகில் வைப்பாற்றுக்கு தெற்கே உயரமான, தொல்லியல் மேடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. தொல்லியல் மேட்டின் ஊடாக ரயில்வே பாதை செல்கிறது.

இப்பகுதியில் சிதிலமடைந்த பானை ஓடுகள் இருந்த இடத்தை களஆய்வு செய்தபோது பழங்கால மக்கள் பயன்படுத்திய நுண் கருவிகள், கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், குறியீட்டுடன் கூடிய பானை ஓடுகள், குறுகிய துளை யுடைய நீர்க்குடுவை மற்றும் மண்ஜாடி மூடியின் கொண்டைப்பகுதி, சங்கு அறுத்து செய்த வளையல்கள், அதற்கு பயன்படுத்திய சங்குகள் மற்றும் வட்ட சில்லுகள், பலவண்ண கடற்பாசிகள், ஒளி ஊடுருவாத கருப்பு நிற கண்ணாடி வளையல்கள், பிற்காலத்திய நாயக்கர் கால செப்புக்காசு ஆகியன கிடைத்துள்ளன.

மேலும் 1.7 மீட்டர் அளவு விட்டமுடைய உறைகிணறு ஒன்றும் அண்மையில் இங்கு கண்டறியப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment