1918 ஆகஸ்ட் - 2ம் 2021 ஆகஸ்ட் - 2ம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 3, 2021

1918 ஆகஸ்ட் - 2ம் 2021 ஆகஸ்ட் - 2ம்

தமிழ்நாடு சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழாவும் - 13 முறை சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியையே அறியாதவரும், 5 முறை புகழ் மிக்க முதல் அமைச்சராக ஒளிவீசியவருமான மானமிகு சுயமரியாதைக்காரராகிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உருவப் படத்தை இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் குடிமகனும், குடியரசு தலைவருமான மாண்பமை இராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்த நிகழ்வும் நேற்று மாலை தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றில் நின்று பேசுபவைகளாக நடைபெற்றன.

"பகுத்தறிவு நெறியே பண்பட்ட நெறி!" என்ற முழக்கத்துடன் தந்தை பெரியார் உருவப் படமும் "சமத்துவம் கண்டு சமூகநீதி காண்போம்!" என்ற முழக்கத்துடன் அண்ணல் அம்பேத்கரின் உருவப் படமும் விழா மேடையின் மேலே (ஏற்கெனவே சட்டப் பேரவையில் திறக்கப்பட்டவை) பொருத்தமாக கருத்து ஒளியூட்டின.

விழாவில் பங்கு கொண்ட முக்கிய விருந்தினர்களான குடியரசு தலைவரின் உரையும் சரி, விழாவுக்குத் தலைமை வகித்த ஆளுநர் உரையும் சரி கருத்துச் செறிவும் உண்மை விளக்கமும் ஒட்டிப் பிறந்தவைகளாக அமைந்திருந்தன.

கலைஞர் என்றால் முற்போக்குச் சிந்தனையின் நீர் ஊற்றாக இருந்ததாக குடியரசு தலைவர் கூறியது சிறப்பானது.

சமூக சீர்திருத்தக் கொள்கையுடைய பெரியார், அண்ணா, காமராசர் ஆகியோரின் பெயர்களைக் குடியரசு தலைவர் பதிவு செய்தது கவனிக்கத்தக்கதாகும்.

சமுதாயத்துறை, அரசியல் துறை மட்டுமல்ல, கலை, இலக்கியத் துறையிலும் கலைஞரின் பங்களிப்பு இருந்ததைப் பாங்காகக் குறிப்பிட்டனர்.

இந்திய அளவிலே தமிழ்நாடு முன்னணியில் இருப்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. சமூகநீதித் துறையில் தமிழ்நாடு தலைமை தாங்கும் மாநிலமாக இருப்பது பற்றி எல்லாம் சிலாகிக்கப்பட்டது.

இந்தக் கால கட்டத்தில் வரலாற்றை ஒரு முறை அரிமா நோக்காகப் பார்க்க வேண்டும். 1921ஆம் ஆண்டில் சென்னை மாநில சட்டமன்றத்தில் நீதிக்கட்சி ஆட்சி ஏற்பட்டது என்பது மட்டுமல்ல- அந்த ஆட்சி எந்தக் கொள்கையின் அடிப்படையில் என்பதுதான் மிக முக்கியமானதாகும்.

அமையவிருக்கும் சட்டமன்றத்தில் பார்ப்பனர் அல்லாதாருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்; அது இல்லையென்றால் பார்ப்பனர் ஆதிக்கம்தான் கொடி கட்டிப் பறக்கும் என்பது பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான நீதிக்கட்சியின் நிலைப் பாடாகும். (சீக்கியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மட்டும் பிரதிநிதித் துவத்துக்கு ஒப்புக் கொள்ளப்பட்டு இருந்தது) தென்னாட்டின் லெனின் என்று தந்தை பெரியாரால் போற்றப்பட்ட டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் இரண்டு முறை இலண்டன் சென்றார்.

1918ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட் 2ஆம் தேதி (நேற்றைய சட்டமன்ற நிகழ்ச்சியும் இதே ஆகஸ்டு 2 என்பது குறிப்பிடத்தக்கது - என்னே பொருத்தம்!) தான் நம் நாயர் பிரான் இலண்டனில் பிரபுக்கள் சபை, காமன் உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்தில் உரையாற்றினார். சென்னை சட்டமன்றத்தில் பார்ப்பனர் அல்லாதாருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் தனித் தொகுதிகள் வேண்டும் - வேண்டும்  என்று முழங்கினார்.

1919ஆம் ஆண்டு இதே பிரச்சினைக்காக இரண்டாவது முறை டாக்டர் நாயர் இலண்டன் சென்றபோதுதான் நீரிழிவு, நிமோனியா நோயின் கடும் பாதிப்பால் தன் இறுதி மூச்சைத் துறந்தார் என்பது திராவிட இயக்கத்தின் தனித் தன்மையான தியாக வரலாறாகும்.

டாக்டர் நாயர் மறைந்தார் என்ற செய்தி வந்ததுதான் வந்தது - சென்னை திருவல்லிக்கேணி  பெரிய தெரு பிள்ளையார் கோயிலில் பார்ப்பனர்கள் தேங்காய்களை உடைத்தனர். காஸ்மாபாலிட்டன் கிளப்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளும், பார்ப்பனப் பெரும் புள்ளிகளும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தனர்.

இன்னொரு கொடுமை - பார்ப்பனர்கள் மனிதநேய மற்றவர்கள் என்பதற்கான சான்று அது. டாக்டர் நாயர் இலண்டனில் மறைந்த அதே தேதியில் இலண்டன் நாடாளுமன்றம் முன் சாட்சியம் அளிக்கச் சென்ற சர்.சி.பி. ராமசாமி அய்யர், சுரேந்திரநாத் பானர்ஜி, திலகர், கோகலே, சத்தியமூர்த்தி அய்யர் முதலிய பார்ப்பனர்கள் அங்கு இலண்டனில் இருந்தும் துக்கம் விசாரிக்ககூட செல்லவில்லை என்பதை நினைவில் வையுங்கள்.

நீதிக்கட்சியின் தன்னேரில்லாத அரும்பெரும் தலைவர்களான டாக்டர் நாயர் போன்றவர்களின் முயற்சியால்தான்  மொத்தம் 132 உறுப்பினர்களைக் கொண்ட சென்னை சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படும் 98 தொகுதிகளில் பொதுத் தொகுதிகள் 65 என்றும் 33 தொகுதிகள் சிறப்புத் தொகுதிகள் என்றும் பிரிக்கப்பட்டன.

இந்தப் பொதுத் தொகுதி 65இல் 28 தொகுதிகள் பார்ப்பனர் அல்லா தாருக்கு ஒதுக்கப்பட்டது. மீதி தொகுதிகளிலும் பார்ப்பனர் அல்லாதார் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அடிப்படையில்தான் 1920 நவம்பர் 20 அன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. நீதிக்கட்சிக்கும் ஹோம்ரூல் கட்சிக்கும் கடும் போட்டி. (காங்கிரஸ் போட்டியிடவில்லை)

தேர்தலில் 98 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்று நீதிக்கட்சி ஆட்சி அமைத்தது. 1921 ஜனவரி 12இல் நடைபெற்ற முதல் சட்டமன்றக் கூட்டத்தை கன்னாட்கோமகன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழா றேந்று (2.8.2021) நடைபெற்றது என்றால், இதன் பின்னணி வரலாறு இவ்வளவு சாராம்சங்களையும் சமூகநீதி தத்துவத்தையும் கொண்டு, நீதிக்கட்சியின் தன்னிகரற்ற சிந்தனையும், உழைப்பும், விடா முயற்சியும் சிறந்தோங்கி நிற்கின்றன என்பதை நினைவு கூர்வோம்.

இந்த நீதிக்கட்சியைத் தான் - காங்கிரசில் இருந்த போதும்கூட - அதன் பார்ப்பனர் அல்லாதார் கண்ணோட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சட்டங் களுக்கும், திட்டங்களுக்கும் ஆதரவுக் குரல் கொடுத்தார் தந்தை பெரியார் என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும்.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் பொன் விழாவையும், பவள விழாவையும் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் கொண்டாடினார். அதன் நூற்றாண்டு விழாவை அவர் தனயன் திராவிடர் இயக்க வழித் தோன்றல் மானமிகு தளபதி மு.. ஸ்டாலின் முதல் அமைச்சராக இருந்து பெரும் சிறப்போடு நடத்திக் காட்டினார் என்பது இன்றைய வரலாறு.

சமூகநீதிக்கான குரலை தந்தை பெரியார் வழியில் வென்றெடுப்போம் என்று டுவிட்டரில் தளபதி மு.. ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு - அதுவும் சட்டமன்ற நூற்றாண்டு விழா நாளில் தெரிவித்திருப்பது மிகப் பெரும் நம்பிக்கையை அளிக்கிறது.

வாழ்க பெரியார்!

வெல்க திராவிடம்!!

No comments:

Post a Comment