இந்திய அரசமைப்புச் சட்டம் 105 திருத்தம் வந்த பின் 'கிரீமிலேயர்' என்பது நீக்கப்பட்டு விட்டது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 31, 2021

இந்திய அரசமைப்புச் சட்டம் 105 திருத்தம் வந்த பின் 'கிரீமிலேயர்' என்பது நீக்கப்பட்டு விட்டது!

 திராவிடர் கழக சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கருத்துரை

சென்னை, ஆக.31 இந்தியஅரசமைப்புச் சட்டம் 105 திருத்தத்தின்படி பிற்படுத்தப் பட்டோருக்கான வரையறை (Defìnition) வரையறுக்கப்பட்டதற்குப் பின் 'கிரீமி லேயர்' என்ற ஒன்று -  அளவுகோல்  தானாகவே ஒழிந்து விட்டது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள்.

 திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று மாலை சென்னை பெரியார் திடலில் "இட ஒதுக்கீடும் - இடர்ப்பாடுகளும் தீர்வுகளும்! எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெறுவ தற்கு முன்பே சென்னை ராஜதானியில் நீதிக்கட்சி ஆட்சி காலத்திலிருந்து ஒடுக்க ப்பட்டோர் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பெற அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு பின்னர் 1928 ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது. பின்னர் 1947இல் பிறப்டுத்தப்பட் டோருக்கான வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அந்த அரசு ஆணையில் இடம் பெற்றது. விடுதலைக்குப் பின்னர் 1950இல்  இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது, அதில் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி வாய்ப்பில் இடஒதுக்கீட்டிற்கு விதி உருவாக்கப்படவில்லை. இதனால் உயர் ஜாதியினைச் சார்ந்தோர் ஏடுகள் சென்னை நீதிமன்றம் சென்று அரசமைப்புச் சட்டப்படி வகுப்புரிமை அரசாணை செல்லாது எனும் தீர்ப்பினைப் பெற்றனர். அப்போதைய மாகாண அரசு செய்த மேல்முறையீட்டிலும் உச்சநீதிமன்றம் அதே தீர்ப்பினை உறுதி செய்தது.

ஒடுக்கப்பட்டோரின் இடஒதுக்கீடு உரிமை மறுக்கப்பட்டதால் தந்தை பெரியார் தலைமையில் மாபெரும் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டது. அதன் காரணமாக அரசமைப்புச் சட்ட முதல் திருத்தத்தின் மூலம் புதிதாக பிரிவு 15(4) சேர்க்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோ ருக்கான இடஒதுக்கீடு சென்னை மாகாணத் தில் மட்டுமல்ல நாடு தழுவிய அளவில் நடைமுறைக்கு வழிவகுத்தது. அந்த சட்டப்பிரிவில் பிற்படுத்தப்பட்டோர் பற்றிக் குறிப்பிடுகையில், “சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Socially and Educationally Backward Classes) என குறிப்பிடப்பட்டது. நாடாளு மன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்ட பொழுதுபொருளாதார ரீதி யாகவும்‘ (Economically)  என்பதுவும் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விவாதத்தில் எழுப்பப்பட்டது. அப்பொழுது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, பொருளாதார அளவு கோல் என்பது பொருந்தாத ஒன்று; பொருளாதார நிலைமை என்பது நிலையானது அல்ல; இன்று ஏழை, நாளை பணக்காரர் ஆகலாம்; இன்று பணக்காரர் வருங்காலத்தில் ஏழையாகும் நிலைமையும் ஏற்படும்; நிலையில்லாத ஒன்றின் அடிப்படையில் - பொருளாதார அளவுகோல் என்பது இடஒதுக்கீட்டிற்கு பொருந்தி வராதது. எனவேபொருளாதார ரீதியாகஎன்ற சொல்லாடலை சட்டப்பிரிவு 15(4)இல் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் விரிவாக பதிலளித்தார். பிரிவு 15(4)இன்படி சமூக ரீதியாக கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதாகவே அரசமைப்புச் சட்டம் இடஒதுக்கீடு பற்றிய விதியாக ஏற்படுத்தி விட்டது.

இதற்கு மாறாக பின்னர் தமிழ்நட்டில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபொழுது பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெற பொருளாதார வரம்பாக ஆண்டு வருமானம் ரூ.9000க்கும் மிகாதவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என்று ஆணை பிறப்பித்தார். அதனை எதிர்த்து திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இடஒதுக்கீட்டில் ஒத்த கருத்துடைய பிற அரசியல் கட்சிகள் ஓராண்டு தொடர்ந்து மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்து பொருளாதார அடிப் படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பதை எதிர்த்தனர். இதனால் 1980ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் எம்.ஜி.ஆர். அவர்களுடைய .தி.மு.. படுதோல்வியை அடைந்தது. எம்.ஜி.ஆர். அறிவித்த வருமான வரம்பு ஆணையை திரும்பப் பெற்றுக் கொண்டார். கூடுதலாக பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் அளவை 31லிருந்து 50 விழுக்காடாகவும் உயர்த்தி அரசாரணை பிறப்பித்தார்.

அன்றிலிருந்து தமிழ்நாட்டில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கான மொத்த இடஒதுக்கீடு (தாழ்த்தப்பட்ட ஜாதியினர் - பழங்குடி மக்கள் இடஒதுக்கீட்டையும் சேர்த்து) 50 விழுக்காட் டிற்கு மேல் சென்று விட்டது; நடைமுறையில் தமிழ்நாட்டில் நிலைத்து விட்டது.

1992இல் உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கும் மேல் செல்லக்கூடாது என தீர்ப்பு அளித்தது. (பிரத்தியேகக் காரணங்களுக்காக அந்த உச்ச வரம்பிற்கு அதிகமாகவும் அளிக்கலாம் எனவும் தீர்ப்பில் உள்ளது). அந்தத் தீர்ப்பிலேயே பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயர் வகையினர் என பிரித்தும் குறிப்பிடப்பட்டு அந்த வகையினருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டது. இந்த தீர்ப்பு ஒன்றிய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு என்று பிறப்பிக்கப்பட்ட ஆணை பற்றி வழங்கப்பட்டதாகும்).

தமிழ்நாட்டில் கிரீமிலேயர் வழிமுறை என்பது நடைமுறையாக்கப்படவில்லை. பின்னர் தமிழ்நாட்டில் நிலவிய மொத்த இடஒதுக்கீடான 69 விழுக்காட்டிற்குஆபத்து வந்த பொழுது அன்று ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபொழுது திராவிடர் கழகம் 69 விழுக்காட்டை பாதுகாத்திட அரசமைப்புச் சட்டப் பிரிவு 31(C)யின் படி தனிச்சட்டம் இயற்றிடவும் இயற்றப்பட்ட சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று 31(B) பிரிவினைப் பயன்படுத்தி அரச மைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணை யில் சேர்க்கவும் ஆலோசனை வழங்கி அதன்படி ஆவன செய்யப்பட்டு 69 விழுக் காட்டிற்கு சட்டப் பாதுகாப்பும் உருவாக்கப்பட் டது. இதற்காக அரசமைப்புச் சட்டத்தில் 76ஆம் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்த திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப் பட உரிய வகையில் ஆலோ சனைகளை முயற்சிகளை திராவிடர் கழகம் எடுத்தது. நாட்டிலேயே இடஒதுக்கீட் டிற்காக முதன்முதல் சட்டம் இயற்றப்பட்டதும் 69 விழுக் காட்டை பாதுகாத்திடத்தான்.  அதற்குமுன்னர் அரசு ஆணைகள் மூலமாகத்தான் இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.

இன்றுவரை தமிழ் நாட்டில் இடஒதுக்கீட்டின் மொத்த அளவு 50 விழுக் காட்டிற்கு மேலாக பின்பற் றப்படுவதும், இடஒதுக்கீட் டிற்கு பொருளாதார அளவு கோலானகிரீமிலேயர்முறையும் (அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான அளவுகோல்) பின்பற்றப் படாத நிலையும் நீடித்து வருகிறது. இதற்கு அடிப் படைக் காரணம் இந்த மாநிலம் தந்தை பெரியார் சமூகநீதியை பேணி வளர்த்த மாநிலம் - உரிமை காத்திட போராட்டங்கள் நடத்தி இடஒதுக்கீட்டை நிலைநிறுத்திய மாநிலம் - பெரியார் மண் என்பதாகும்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் திற்கு, பட்டியலின ஜாதியினர் மற்றும் பழங்குடி மரபினருக்கு உள்ள ஆணையத் தைப் போலவே அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் வழங்கிட அரசமைப்பு 102ஆம் திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கு பாதிப்பினை ஏற்படுத்திடும் வகையில் அவர்களை கண்டறியும் அதிகாரம் (இடஒதுக்கீட்டு வாய்ப்புப் பெற்றிட) மாநில அரசுகளிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்டு ஒன்றிய அரசு வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சட்டம், மசோ தாவாக இருந்த நிலையிலேயே திராவிடர் கழகம் மாநில அரசுகளின் அதிகாரம் பறிக் கப்படும் விதி முறை நீக்கப்பட வேண்டும் என்று நேரிலேயே மாநிலங்களவை தெரிவுக் குழுவில் தெரிவித்தது. ஆனால் அரசு அந்தப் பிரிவினை நீக்காமலேயே சட்டத் திருத்தத் தினை கொண்டு வந்தது. மாநில அதிகாரம் உரிமை பறிக்கப்பட்டதை உச்சநீதிமன்றமும் அண்மையில் ஒரு தீர்ப்பில் உறுதி செய்தது. அந்தப்பிரிவு உரிமையை மறுப்பதாகத் தான் உள்ளது என தெளிவு படுத்தியது.

அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு நடை முறைக்கு வந்த 1950ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரைபிற்படுத்தப்பட்டோர் யார்?” என்பதற்கான வரை யறை சட்டத்தில் எங்கும் குறிப்பிடவில்லை. இதனால் நீதிமன்றங்களும், ஒன்றிய அரசில் இருந்த ஆதிக்க சக் திகளும் பிற்படுத்தப்பட் டோர் இடஒதுக்கீட்டிற்கு தடை ஏற்படுத்துகின்ற வகையில் கிரீமிலேயர் முறை போன்றவற்றை நடைமுறையில் கொண்டு வந்தனர். கிரீமிலேயர் முறை என்பது பொருளாதார அளவுகோல் அடிப் படையில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. சட்டத்தில் இடம் பெறக் கூடாததை அளவுகோலாகக் கொண்டு அரசு ஆணை பிறப்பிக்கும் நிலைமைகள் நீடித்து வருகின்றன என்பது உண்மையில் அரசமைப்புச் சட்ட மீறல் நடவடிக்கையே.

மாநில அரசின் அதி காரம் பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்புக் குரல் பரவலாக கிளம்பிய நிலையில் ஒன்றிய அரசு அரசமைப்புச் சட்ட 105ஆம் திருத்தத்தினை மேற்கொண்டது. இதன்படி பிற்படுத்தப்பட் டோரைக் கண்டறியும் அதிகாரம் மீண்டும் மாநில அரசுகள் வசம் ஒப்படைக்கப்பட்டு சட்ட விதி உருவாக்கப்பட்டன. கூடுதலாக முதன் முதலாக பிற்படுத்தப்பட்டோர் என்ப தற்கு வரையறை என்பதுவும் அரசமைப்புச் சட்டத்தில் புதிய விதிகளாகச் சேர்க்கப்பட்டது மிகவும் முக்கித்துவம் வய்ந்தது.

மாநில அரசுகள் தெரிவு செய்து பட்டி யலில் இடம் பெறுபவர்கள் பிற்படுத்தப்பட்ட வர்கள் என்பதையும், இதில் ஒன்றிய பட் டியல், மாநிலப் பட்டியல் எனத் தனித்தனியாக அந்தந்த அரசு அதிகார இடஒதுக்கீட்டிற்கு (பிற்படுத்தப்பட்டவர்களுக்கு) வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்த வரையறையில், ‘கிரீமிலேயர்எனும் இடஒதுக்கீடு மறுப்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதற்கு முன்னர் பிற்படுத்தப்பட்டோருக்கான வரை யறை  சட்டத்தில் இல்லாத நிலையில் உச்ச நீதிமன்றமும், ஒன்றிய அரசும் பிற்படுத்தப் பட்டோருக்கு உரிய இடஒதுக்கீட்டை மறுத்திடும் வகையில் கிரீமிலேயர் முறையை வலியுறுத்தி வந்தனர். நீதிமன்ற தீர்ப்புகள் அளிக்கப்பட்டன. அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இனி அந்த ஆணைகள் நடைமுறைக்கு பொருந்தாதவை.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த பொழுது சட்டத்திற்குப் புறம்பாக பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் கொண்டு வந்தார்.  போராட்டம், தேர்தல் தோல்வி காரணமாக ஆணையை திரும்பப் பெற்றுக் கொண்டார். பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்திடவும் செய்தார்.

இன்றைய ஒன்றிய அரசும் அரசமைப்புச் சட்டம் 102ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களைக் கண்டறியும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமிருந்து பறித்தது. பின்னர் 105ஆம் திருத்தத்தின் மூலம் மீண்டும் மாநில அரசுகள் வசம் ஒப்படைத்தது. கூடுதலாக பிற்படுத்தப்பட்டோருக்கான வரையறை சட்ட விதியையும் முதன்முதலாக ஏற்படுத்தியது. அன்று எம்.ஜி.ஆர். ஆட்சியில் திராவிடர் கழகம் போராட்டம், பிரச்சாரம் செய்து பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டினை பாதுகாத்தது. இன்று ஒன்றிய அரசு கொண்டு வந்த திருத்தச் சட்டத்தால் பிற்படுத்தப்பட்டோர் வரையறையின் மூலம் கிரீமிலேயர் முறைக்கு சட்ட அங்கீகாரம் இல்லாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வருங்காலங்களில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில்  நாடு தழுவிய அளவில் கிரீமிலேயர் முறை பின்பற்றப் படக்கூடாது. பின்பற்றப்பட்டால் நிச்சயம் கடந்த காலங்களில் இடஒதுக்கீட்டை பாதுகாத்ததைப் போலவே திராவிடர் கழகம் களத்தில் இறங்கிப் போராடும் - இடஒதுக்கீட்டை பாதுகாத்திடும். பெரியார் மண் - தமிழ்நாடு இடஒதுக்கீட்டிற்கு வழி காட்டுகின்ற மாநிலமாக தொடர்ந்து நீடிக்கும்.

இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

ஜாதி அடையாளமும், ஜாதி அடிப்படை யில் உயர்வு தாழ்வு நிலவிடும் சமூகஅநீதி நிலைமையே இந்த மண்ணில் பல நூற்றாண்டுகளாக நீடித்து வருகிறது. அந்த சமூக அநீதியை களைந்து மனிதரிடையே சமத்துவத்தை ஏற்படுத்திட சமூகநீதி நிலை நாட்டப்பட வேண்டும். தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் சமூகநீதி சமுதாயத்தில் நிலவிட வேண்டும் என தொடர்ந்து பிரச்சாரம், களத்தில் இறங்கிப் போராட்டம் நடத்தியதால் ஓரளவு சமூகநீதி நிலவுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட ஜாதியினர், பழங்குடி மக்கள் ஏற்றம் பெற வேண்டும். அப்படிப்பட்ட சமூகநீதியை அடைகின்ற வழிமுறைகளுள் முக்கிய மானது இட ஒதுக்கீடு. கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டும், வேலை வாய்ப்பு, குலத்தொழில் தொடர்ச்சி என்பதாக இருந்த நிலை மாறிட கற்ற கல்விக்கேற்ற வேலைவாய்ப்பில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதற்கு கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக திராவிடர் இயக்கம் போராடி வருகிறது. சமூகநீதித் தளத்தில் பெற்ற வெற்றிகள் முழுமையானவை அல்ல. பெற்ற வெற்றிகளும் முழுமையாக நடை முறையாவதற்கு பல்வேறு தடைகளை அனைத்துத் தளத்திலும் இருக்கின்ற ஆதிக்க சக்திகள் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு, உயர்விற்கு, மற்றவர்களோடு சமத்துவமாக வாழ்வதற்கு வழி ஏற்படுத்திடும் இடஒதுக்கிட்டினைப் பற்றிய கூட்டத்தினை திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது, ‘இடஒதுக்கீடு இடர்ப்பாடுகளும் தீர்வுகளும்என்ற தலைப்பிலேயே சிறப்புக் கூட்டம் சென்னை - பெரியார் திடலில் 30.8.2021 அன்று நடைபெற்றது. சிறப்புக் கூட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார். சட்ட அறிஞரும், இடஒதுக்கீடு பற்றி ஏராளமான ஆய்வுப் புத்தகங்களை எழுதியவருமான சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி டாக்டர் ஜஸ்டிஸ் .கே.ராஜன் சிறப்புரை ஆற்றினார். திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி கூட்டத்தின் நோக்கவுரையினை வழங்கினார். தொடக்கத்தில் சிறப்புக் கூட்டத்தில் அறிமுக உரையினை திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் வரவேற்புரையினை பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் ஆற்றினர்.

நீதிக்கட்சி ஆட்சியிலிருந்து...

நோக்கவுரை ஆற்றிய கழக வெளியுற வுச் செயலாளர் கோ.கருணாநிதி இட ஒதுக்கீடு, நீதிக்கட்சி ஆட்சியிலிருந்து படிப்படியாக பரவலான வரலாறு பற்றி சுருக்கமாக எடுத்துக் கூறினார். 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 102ஆம் அரசமைப்புச் சட்டம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசமைப்பு அதிகாரத்தை வழங்கிய போதிலும், பிற்படுத்தப்பட்ட மக்களை கண்டறிவதற்கான அதிகாரத்தை, அது வரை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் கண்டறியப்பட்டதை ஒன்றிய அரசின் மூலம் இந்திய குடியரசுத் தலைவர் அங்கீகரிக்கும் சட்ட விதியை உருவாக்கியது. பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான நிலைமையை அறியக்கூடிய வாய்ப்பு மாநில அரசுகளுக்குத்தான் உண்டு என்பதை 102ஆம் ஆண்டு திருத்தச்சட்டம் மசோதா நிலையில் நாடாளுமன்ற மாநி லங்களவை தெரிவுக்குழுவின் அழைப்பின் பேரில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் டில்லிக்கு நேரில் சென்று விளக்கமாக - அறிக்கையாக அளித்தார். ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை தெரிந்தெடுத்து வந்த மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்ட நிலையில்தான் தெரிவுக்குழுவும் அறிக்கை அளித்தது. 102ஆம் அரசமைப்பு திருத்தமும் சட்டமாகியது. மாநில அரசின் உரிமை பறிக்கப்பட்டதை உச்சநீதிமன்றமும், மராத்தியர்களுக்கான இடஒதுக்கீட்டு மேல் முறையீட்டு வழக்கில் உறுதி செய்து விட்டது. பறிக்கப்பட்ட மாநில உரிமைக்கு மாநிலங்கள் குரல் எழுப்பத் தொடங்கின.

உச்சநீதிமன்றம் 102ஆம் அரசமைப்புச் சட்ட விதிகள் பற்றி மீளாய்வு முறையீட்டிலும் அதே தீர்ப்பு உறுதி செய்யப்பட்ட   நிலையில், ஒன்றிய அரசிற்கு மீண்டும் அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதைத் தவிர வேறுவழியில்லை. இந்த ஆகஸ்டு மாதம் 105ஆம் முறையாக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களை தெரிவுசெய்கின்ற அதிகாரம் மீண்டும் மாநில அரசுகள் வசம் உறுதி செய்யப்பட்டது. கூடுதலாகபிற்படுத் தப்பட்டோர் என்போர் யார்?’, என்பதற் கான வரையறையும் (Definition)105ஆம் அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. அதுவரை அரசமைப்புச் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (Scheduled Castes), பழங்குடி மக்கள் (Scheduled Tribes), ஆகியோர் பற்றிய வரையறை விதிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. இதனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற இடஒதுக்கீட்டு வாய்பினை முழுமையாக பெற முடியாத நிலைமையே நிலவி வருகிறது. கிரீமிலேயர் என்ற அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறாத வழிமுறையில் இடஒதுக்கீட்டை   சில பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மறுத்திடும் கோட்பாடு தற்பொழுது பிற்படுத்தப்பட்டோர் பற்றிய அரசமைப்புச் சட்ட திருத்த விதிகளிலும் இடம் பெறவில்லை.  இப்படிப்பட்ட நிலைமை சட்டரீதியாக நிலவிடும் நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ள இடர்ப்பாடுகளையும் அதற்கான தீர்வுகளையும் விளக்கும்  ஆய்வரங்கக்   கூட்டமாக நடைபெறுகிறது என்பதை  தமது  நோக்க உரையில் வெளியுறவுச் செய லாளர் கோ.கருணாநிதி குறிப்பிட்டார்.

டாக்டர் ஜஸ்டிஸ் .கே. ராஜன்

நீதியரசர் டாக்டர் ஜஸ்டிஸ் .கே.ராஜன் அரசமைப்புச் சட்ட விதிகள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பற்றி விளக்கி தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

மண்டல் குழு பரிந்துரைகளுள் ஒன்றாக அன்றைய பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான ஒன்றிய அரசானது, ஒன்றிய அரசுத் துறைகளிலும், நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடாக முதன் முறையாக 27 விழுக்காடு என ஆணையிட்டது. அந்த அரசு ஆணையினை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அரசு ஆணை நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதித்து 9 நீதிபதிகள் அடங் கிய அமர்வு விசாரித்தது. இந்திரா சகானி வழக்கு என பின்னர் பரவலாக அறியப்பட்ட வழக்கில் பிற்படுத்தப் பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தது. கூடுதலாக பிற்படுத்தப்பட்டோரில்கிரீமிலேயர்எனப்படுவோரை (பொருளாதார அளவு கோல் கொண்டு அறியப்பட்டது) வரைப்படுத்தச் சொல்லி அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது எனவும் தீர்ப்பில் சொல்லப்பட்டது. பிற்படுத்தப்பட்ட நிலைமை அரசமைப்புச் சட்டப்படி சமூகநீதியில், கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்டோர் என்பதாகும். இங்கு பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு என்பது பொருந்தாது. ‘கிரீமிலேயர்முறையை வலியுறுத்திய உச்சநீதிமன்றம் அதற்குரிய காரணமாகபிற்படுத்தப்பட்டோர் யார்என்பதற்கான வரையறை அரசமைப்புச் சட்டத்தில் அப்போது  இல்லை என்ப தாகக் கூறியது. வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோரில் கிரீமிலேயர் நிலையிலானவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது.

பின்னர் 2006ஆம் ஆண்டில் அன் றைய ஒன்றிய அரசு, ஒன்றிய கல்வி நிலையங்களிலும், தனியார் கல்வி நிலையங் களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு என அரச மைப்புச் சட்டத்தை திருத்த முனைந்த நிலையிலும் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. அசோக் தாக்கூர் வழக்கு என அறியப்பட்ட அந்த வழக்கில் கிரீமிலேயர் முறை என்பது ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதாக தீர்ப்பு அளித்தது. பிற்படுத்தப்பட்டோரில் இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை தவிர்ப்பது என்பது மாநில அரசு கல்வி நிலையங்களுக்கும், தனியார் கல்வி நிலையங்களுக்கும் பொருத்தப்பாடு உடைய தாக தீர்ப்பு அளிக்கப்பட வில்லை.

பிற்படுத்தப்பட்டோர் யார்என்பது பட்டியல் ஜாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் போல வரையறை செய்யப்படவில்லை. அரசமைப்புச் சட்டத்தில் வரையறை இல்லாத நிலையைக்காரணமாகக் காட்டி பிற்படுத்தப்பட்டோ ரில் சிலரை கிரீமிலேயர் என வகைப்படுத்தி அந்த வகையினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. பல மாநில அரசுகளும் தங்களது கல்வி நிலையங்களிலும் வேலை வாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட் டில் சட்டக் கட்டாயம் ஏதும் இல்லாமல் கிரீமிலேயர் முறையைக் கடைப்பிடித்து வருகின்றன. சமூகநீதியில் முன்னோடியான தமிழ்நாடு மாநில அரசு கிரீமிலேயர் முறையைக் கடைப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அண்மையில் கொண்டுவரப்பட்ட 105ஆம் அரசமைப்பு திருத்தச் சட்டத் தின்படி பிற்படுத்தப்பட்டோரை கண்ட றியும் அதிகாரம் மீண்டும் மாநில அரசுகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பிற்படுத்தப்பட்டோருக்கான வரையறை பற்றி முதன்முதலாக புதிய சட்டப் பிரிவுகள் அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. பிரிவு 342 என்பதாக ஒரு பிரிவு - அந்த பிரிவின்படி பிற்படுத்தப்பட்டோர் யார் என்பதை விளக்கும் வகையில் மேலும் ஒரு பிரிவு 366 (26சி) என்பதாகவும் சேர்க்கப்பட்டது. அதன்படி பிற்படுத்தப்பட்டோர் என குடியரசுத் தலைவர் ஒப்புதல்படி ஒன்றிய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, ஒன்றிய கல்வி நிலையங்களில் மாணவர் சேர்ப்பு என்பதற்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்படும். அதில் மாநில அரசு மற்றும் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவர் சேர்ப்பு ஆகியவற்றிற்கான பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை அந்தந்த மாநில அரசுகள் கண்டறியும்.

இந்த இரண்டு வகைப்பட்டியலிலும் இடஒதுக்கீட்டுப் பயன்பெறும் பிற்படுத்தப்பட்டோர் என்பதற்குகிரீமிலேயர் வகைஎன எதுவும் குறிப்பிடப்பட்டு அப்படிப்பட்ட வகையினராக இடஒதுக்கீடு மறுக்கப்படவில்லை என்பதே உண்மையான சட்ட நிலைப்பாடு.

அரசமைப்புச்சட்டம் குறிப்பிடுவதே பிற்படுத்தப்பட்டோரில் கிரீமிலேயர் வகையினர் என்பதாக இடஒதுக்கீட்டை எந்த அரசும் வலியுறுத்த முடியாது. உச்ச நீதமன்றமும தீர்ப்பு அளிக்கமுடியாது. பிற்படுத்தப்பட்டோர் யார் என்று 105ஆம் அரசமைப்புத் திருத்தச் சட்டம் உருவாக்கும் வரை வரையறை செய்யப்படவில்லை. எனவே ஒன்றிய அரசும், அவசியமே எழாமல் பெரும்பாலான மாநில அரசுகளும் கிரீமிலேயர் வழிமுறையை கடைப்பிடித்து வந்துள்ளன. அரசமைப்புச் சட்ட திருத்தத்தின்படி அதற்கு அவசியமே இல்லை என்பதுதான்.

சரியான சட்ட விதிகளும், இனிவரும் காலங்களில் கிரீமிலேயர்   வகையினர் என்பதாக எந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், ஒதுக்கப்பட மாட்டார்கள், ஒன்றிய அரசு அந்தந்த மாநில அரசுகளின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (சமூகரீதியாக, கல்விரீதியாக பிற்படுத்தப்பட்டோர்) இடம் பெற்றிருந்தால் போதுமானது. அந்த பிற்படுத்தப்பட்டேர் அனைவருக்கும் இடஒதுக்கீடு பெறுகின்ற வாய்ப்பு உள்ளது.

மேற்கண்ட சட்ட விளக்கமாக நீதியரசர் .கே.ராஜன் தனது உரையில் ஆங்கிலத்தில் விளக்கமளித்தார்.

தமிழர் தலைவர்

கூட்டத்திற்கு சமூகநீதி அமைப்பினைச் சார்ந்த தோழர்கள், வழக்குரைஞர்கள், சமூகநீதி உணர்வாளர்கள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் வருகை தந்திருந்தனர். சிறப்புக் கூட்டம் வருகை தந்தோர் முகக் கவசம், தனி நபர் இடைவெளியில் போடப்பட்ட இருக்கையில் அமர்வு ஆகிய கரோனா பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிப்புடன் நடைபெற்றது.

தொகுப்பு: வீ.குமரேசன்

புத்தக வெளியீடு விற்பனை

சிறப்புக் கூட்டத்தில் சமூகநீதிபுரட்சிக்கவிஞர் பற்றிய மூன்று புத்தகங்களை மேடையில் தமிழர் தலைவரிடமிருந்து தோழர்கள் பெற்றுக் கொண்டனர்மூன்று புத்தகங்களின் மொத்த விலையான ரூ. 125லிருந்து சிறப்புத் தள்ளுபடியாக ரூ. 100க்கு வழங்கப்பட்டது.

1) “69% இடஒதுக்கீடு புதிய ஆபத்தா?” (புதிய வெளியீடு)

2) “புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்” - கி.வீரமணி

3) “சமூகநீதி” - கி.வீரமணி

முகக்கவசம் அணிந்து தனி நபர் இடைவெளி ஆகிய கரோனா பாதுகாப்பு விதிகளுடன் கழகத் தோழர்கள் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment