“அப்போதே அவர் பெரிய தலைவர்” - சொல்கிறார் காமராசர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 17, 2021

“அப்போதே அவர் பெரிய தலைவர்” - சொல்கிறார் காமராசர்

நீங்கள் மதிப்பிற்குரிய பெரியார் பெயரை வைத்துள்ளீர்கள். பள்ளத்தெரு என்ற பெயரை மாற்றி பெரியார் பெயரை வைத்தது பொருத்தமே; ஜாதி பேதமற்ற சமுதாயத்தைக் காண பாடுபட்டவர் நமது ஈரோடு பெரியார்தான். எனவேதான் இந்த நகருக்கு பெரியார் பெயர் வைத்தது மிக வும் பொருத்தமானதே.

பெரியார் காங்கிரசின் தலைவராகவும், காரியதரிசியாகவும் இருந்தார். அப்போதே அவர் ஜாதிகளை ஒழிக்க வேண்டு மென்றார்.

பெரியார் காங்கிரசிலிருந்தபோது ஜார்ஜ் ஜோசஃப் விருப்பப்படி கேரளத்தில் போராடினார். குருவாயூரில் வைக்கம் என்ற ஊரில் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட் டவர்களை தெருவிலும் நடக்கவிடாதபடி கொடுமை செய்து வந்தனர். பெரியார் சத்தியாக்கிரகம் ஆரம்பித்தார். அப்போது நான் ஒரு சிறிய தொண்டன்தான். பெரியா ருக்கு அப்போது என்னைத் தெரியாது. அவர் பெரிய தலைவர். இப்போதும் அவரை எனக்குத் தெரியாது (சிரிப்பு) ஏதோ நான் அவரைப் பார்த்திருக்கிறேன்.

வைக்கம் நகரில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை நடத்தியதற்காக தமிழ்த் தென்றல் திரு.வி.வைக்கம் வீரர்என்று பெரியாருக்கு பட்டத்தைச் சூட்டினார். தள்ளாத வயதிலும் ஜாதி ஒழிப்பிற்கு பாடுபட்டு தன் வாழ்நாளிலேயே அதை காண வேண்டுமென்று எதிர்பார்க்கிறார் பெரியார்.

சர்க்கார் ஜாதி ஒழிப்பிற்கு பல சட்டங் கள் செய்துள்ளனர். ஜாதி ஒழியவில்லையே என்று ஆத்திரப்பட வேண்டாம். சட்டத் தினால் மட்டும் ஒரு சமுகத்தை மாற்றி விடமுடியாது ஜனங்களின் ஒத்துழைப்பு அதற்கு மிகவும் அவசியம். மூடப்பழக்க வழக்கங்கள் ஒழிய வேண்டும் அதற்காகப் பாடுபடும் பெரியார் நீடுழி வாழ்ந்து மக்க ளுக்கு சேவை செய்ய வேண்டும்.

அவருடைய பல கருத்துகளை நாம் ஒத்துக்கொள்ள முடியாவிடினும் ஜாதி ஒழிப்பு பற்றி கருத்து வேற்றுமை இருக்க இடமில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்ந் திருக்க வேண்டுமென்றும் பிறவிலேயே தாழ்ந்தவன் என்றும் சொல்வது வெட்கப் படக் கூடியதாகும் தலைவிதி எனக் கூறு கிறோம். அது தப்பு. சமுதாயம் சமதர்மத்தை ஒப்புக் கொள்ளாவிட்டால் முன்னேறாது. வாழ முடியாது.

சர்க்கார் ஹரிஜன நல இலாகா ஏற் படுத்தியுள்ளனர். பெரியார் சர்க்காரை ஆதரிக்கிறார் என்றால் அவருடைய நோக் கம் நிறைவேறுவதால் தான். பெரியார் என்னிடம் தினமும் இரவு இரகசியமாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்! (சிரிப்பு) நாங்கள் அப்படி சந்திக்கவில்லை. பெரியார் ஆதரவு தருகிறார் என்றால் நல்ல சீர்திருத்தங்கள்சர்க்காரால்கொண்டு வரப்படுவதுதான் காரணம்.’’

(09.04.1961 அன்று பெரியார் நகரைத் திறந்து வைத்து  திருச்சி வரகனேரியில் காமராசர் பேசிய பேச்சு)

No comments:

Post a Comment