‘மூன்றாவது அலையின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறோம்’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 17, 2021

‘மூன்றாவது அலையின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறோம்’

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா, ஜூலை 17- கரோனா வைரஸ் பெருந்தொற்று 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. பன்னாட்டளவில் கரோனா வைரஸ் தொற்று 200 நாடுகளுக்கு மேலாக பரவியது. இந்தியா இந்த கரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2ஆவது அலையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முழுமூச்சுடன் போராடி வருகிறது.

இந்த தருணத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது:-

நாம் கரோனா வைரஸ் பெருந்தொற்றின் 3ஆவது அலையின் ஆரம்பக் கட்டத்தில் உள்ளோம்.

மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு, பொது சுகாதார நடவடிக்கைகளை சரியாக பின்பற்றாத நிலை ஆகிய வற்றுக்கு மத்தியில் டெல்டா வைரஸ், கரோனா பாதிப்பு, இறப்பு ஆகிய இரண்டும் அதிகரிக்க வழி வகுக்கிறது.

சமீபத்திய மாதங்களில் அய்ரோப்பாவிலும், வட அமெ ரிக்காவிலும் தடுப்பூசி போடுவது அதிகரித்து வந்துள்ளதால் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பும், இறப்புகளும் குறைந்து வந்தன. ஆனால் இப்போது தொற்று பாதிப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.

கரோனா வைரஸ் தொடர்ந்து உருவாகி வருவதால், மேலும் பரவுகிற மாறுபாடுகள் உருவாகின்றன.

தற்போது டெல்டா வைரஸ் 111 நாடுகளில் பரவி உள் ளது. இது விரைவில் உலகமெங்கும் ஆதிக்கம் செலுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தடுப்பூசிகள் மட்டுமே கரோனா பெருந்தொற்றை நிறுத்தி விடாது. ஏற்கெனவே வடிவமைக்கப்பட்ட மற்றும் நிலையான அணுகுமுறையை (கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள்) தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

கிடைக்கக்கூடிய பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். மக்கள் கூட்டம் கூடுகிற இடங்களில் இடர் மேலாண்மை அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். இதன்மூலம் உலகமெங்கும் பல நாடுகள் கரோனா வைரசை தடுத்து நிறுத்த முடியும் என்று காட்டி உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment