வங்கிகளில் கிளார்க் நியமனம்: பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 17, 2021

வங்கிகளில் கிளார்க் நியமனம்: பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யம்!

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் எழுத்தர் (கிளார்க்) பணி நியமனத்திற்கான தேர்வு குறித்த விவரங்களை வங்கி பணியாளர் தேர்வு மய்யம் வெளியிட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி, தமிழ்நாட்டில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு - 27 விழுக்காடு, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு - 18 விழுக்காடு, பழங்குடியின பிரிவினருக்கு - 1, EWS  - 10 விழுக்காடு என்ற விகிதத்தில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால் வெளியிடப்பட்ட விளம்பரத்தில், குறிப்பாக, யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் தமிழ் நாட்டில் 147 எழுத்தர் பணியிடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட  பிரிவினருக்கு 40 இடங்களுக்கு பதிலாக பூஜ்யம் இடங்களும், EWS  எனப்படும் உயர்ஜாதிஏழைகளுக்கு’ 14 இடங்களுக்குப் பதிலாக 21 இடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பூஜ்யம் இடங்களும் உயர்ஜாதிஏழைகளுக்கு 7 இடங்கள் அதிகமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பல மாநிலங்களில்,  இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின  பிரிவினர்க்கு அவர்களுக்குரிய இட ஒதுக்கீடு சதவீதத்தின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படாமல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பின்குறிப்பிட்டுள்ள மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட  பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மறுப்பு மற்றும் உயர்ஜாதிஏழைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிக இடங்கள்குறித்த விவரம்:

                                                     ஓபிசி          உயர்ஜாதி ஏழை’ EWS 

மாநிலம்          மொத்த            ஒதுக்கப்பட்ட             வாய்ப்பு           ஒதுக்கப்பட்ட               கூடுதல்          

               இடங்கள்        இடங்கள்        மறுப்பு              இடங்கள்        இடங்கள்

ஆந்திரா           248        0             67           51           +26

கருநாடகா     209        33           23           37           +16

மகாராட்டிரா               321        9             79           52           +20

ஒடிசா               113        2             29           22           +11

தமிழ் நாடு     147        0             40           21           +07

தெலங்கானா              205        0             55           43           +22

உத்தரப்பிரதேசம்     244        45           21           48           +24

மேற்கு வங்கம்          71           13           06           12           +05

இது குறித்து அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், சம்பந்தப்பட்ட வங்கி பணியாளர் தேர்வு மய்யம், யூனியன் பாங்க் ஆப் இந்தியா உயர் அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

ஒன்றியத்தில் அதிகாரத்தில் இருக்கும் பா...  தலைமையிலான கூட்டணி அரசு இடஒதுக்கீட்டின் முதுகெலும்பை முறித்து, ஆணி வேரை அறவே சுட்டு எரித்து விட்டுத் தான் மறு வேலை பார்க்கும் போலும்.

மேற்கண்ட புள்ளி விவரம்- மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ஜியம் இடம் என்றால் இந்தப் பார்ப்பன ஆதிக்கக் கொழுப்புக்கு முடிவுதான் என்ன?

கடந்த 2020இல் பாரத ஸ்டேடட் வங்கியின் எழுத்தர் (கிளார்க்) தேர்வின் முடிவுகள் சொல்லுவது என்ன?

பழங்குடியினருக்கு கட்ஆஃப் மார்க் - 53.75

தாழ்த்தப்பட்டோருக்கு -  61.25

பிற்படுத்தப்பட்டோருக்கு - 61.25

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதிப் பிரிவினருக்கு - 28.5 என்னே கொடுமை!

இது உயர்ஜாதி ஏழை ( EWS ) என்ற ஒன்றை ஏற்படுத்தி பார்ப்பனர்கள் கொல்லைப்புறம் வழியாக நுழைவதற்கான ஏற்பாடு அல்லாமல் வேறு என்ன?

"ஆயிரங்கால் பூதமடா தொழிலாளி" - என்று ஜீவானந்தம் பாடியதை நினைவு கொள்க. ஒடுக்கப்பட்ட மக்கள் ஓங்கி எழாவிட்டால் ஓட்டாண்டியாக வீதிகளில் நிற்க வேண்டியதுதான்.

பார்ப்பனர் நாயகத்தை வீழ்த்திட, பழிவாங்கப்படும் மக்கள் சக்தி - 'ஆயிரங்கால் பூதமாகக்' கிளர்ந்து எழுக, எழுக, எழுகவே!

No comments:

Post a Comment