லாகூரில் சிக்கிய நபர்
லாகூரில் ஒரு ரீடிங் ரூமில் நானும் அண்ணாதுரையும் போனபோது ஒரு பிரசங்கம் செய்யச் சொன்னார்கள். நானும் ஒப்புக்கொண்டு பேசினேன், என்ன பேசினேன் என்றால் நாம் அறிவிற்கு மதிப்புக் கொடுக்காததால், சிந்திக்காததால் இழிமக்களாக ஆகிவிட்டோம். இதற்குக் காரணம் நமக்கிருக்கும் கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை, புராண நம்பிக்கை இவைகளே ஆகும். நம் இழிவு நீங்க வேண்டுமானால் இந்த கடவுள், புராணம் இவைகள் யாவும் ஒழிக்கப்பட வேண்டுமென்று பேசிக்கொண்டி ருக்கும் போது ஒருவர் குறுக்கே எழுந்து, “உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? இல்லையா?’’ என்று கேட்டார்.
உடனே நான் பேப்பர், பேனாவை எடுத்தேன். “நீங்கள் கேட்டது ரொம்ப சரி. எனக்குப் புரியவில்லை. கடவுள் என்றால் என்ன? அதன் குணம் என்ன? அது எப்படிப்பட்டது என்பதைத் தெளிவாக எழுதிக் கொடுங்கள். அதன்பின் நான் ஒவ்வொன்றாக விளக்கம் கொடுக்கிறேன். அதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம்’’ என்றேன். கேள்வி கேட்டவர் எதுவும் செய்யாமல் விழித்துக் கொண்டு நின்றார். தலைவர், அவரைப் பார்த்து, “நீயாகப் போய்த்தானே மாட்டிக் கொண்டாய், இப்போது அவர் கேட்கிறாரே எழுதிக் கொடு’’ என்றார். அதற்கு அவர், “இவர்கள் நமது எதிரிகளின் கையாள்கள்; அதனால்தான் அவர் இப்படிப் பேசுகிறார்’’ என்று சொன்னார். பிறகு தலைவர், அவரை உட்காரச் செய்து அவர் சொன்னார், இப்போது கேள்வி கேட்டதனால் கேட்டவருடைய அறிவை வெளிப்படுத்தி விட்டார் என்று சொல்லி என்னை மேலே பேச அனுமதித்தார். கேள்வி கேட்டவர் ஒரு அய்.சி.எஸ். காரரின் சகோதரர்.
- தந்தை பெரியார் உரையிலிருந்து,
‘விடுதலை’ 30.05.1967
No comments:
Post a Comment