ஊடகவியலாளர் சுகுணா திவாகர்
“பிள்ளை பெறும் இயந்திரமல்ல பெண்கள்’’ என்ற பெரியாரின் கருத்தை அழுத்தமாகப் பேசுகிறது, அமேசான் பிரைமில் வெளியான மலையாளத் திரைப்படம் Saras’s'.
நாயகி சாரா, ‘குழந்தை பெற்றுக்கொள் ளக்கூடாது’ என்ற முடிவில் சிறுவயதிலி ருந்தே உறுதியாக இருப்பவர். உதவி இயக்குநராகத் திரைப்பட முயற்சியில் ஈடுபடும் சாராவுக்குத் தன் கனவுகள் கைகூட குழந்தை தடையாக இருக்கும் என் பது எண்ணம். அவர் மணம் செய்து கொள் ளும் ஜீவனும் குழந்தை தேவையில்லை என்ற முடிவில் இருப்பவர். ஆனால் சந்தர்ப்பச்சூழலில் குழந்தை கருவாகிவிட, சுற்றியிருக்கும் சொந்தங்கள் அனைத்தும் ஜீவன் உள்பட நிர்ப்பந்தங்களையும் அழுத் தங்களையும் உருவாக்கினாலும் தன் முடிவில் உறுதியாக இருக்கிறார் சாரா. குடும்ப சென்டிமென்ட், இளையராஜாவின் அம்மா பாடல்களில் ஊறிப்போன தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியளிக்கும் படமாகத்தான் இருக் கும் ‘சாரா’.
திருமணம் - குடும்பம் - குழந்தைகள் ஆகியவற்றுக்கும் அதிகாரத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆழமாகச் சிந்தித்த சிந்தனையாளர்கள் மூவர். ‘தனிச் சொத் தைக் காப்பாற்றவே குடும்பம் உருவானது; நிலைபெற்றது’ என்று நிறுவினார் ஏங் கெல்ஸ். இந்தியாவில் திருமணம் என்பது அகமணமுறையாகவே இருக்கிறது என்ப தையும் அது ஜாதியைக் காக்கும் ஏற்பாடு என்பதையும் 1916இல் சொன்னவர் அம் பேத்கர். குடும்பம் என்பது ஜாதியையும் தனிச்சொத்தையும் காக்கும் ஏற்பாடு என்ப துடன் அது எப்படி பெண்களின் சுயத்தை அழிக்கிறது என்பதை உலகளவில் விரிவா கப் பேசியவர் பெரியாரே.
குழந்தை பெறுவதா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டியவர்கள் பெண்கள்தான் என்றவர் பெரியார். இந்திய அரசு என்ற ஒன்று உருவாகிக் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரங்களை முன்னெடுப்ப தற்கு முன்பே 1932இல் ‘கர்ப்பத்தடை’ என்னும் கருத்தாக்கத்தை முன்வைத்துப் பேசியவர் அவர். ‘காதலுக்கு வழிவைத்து கருப்பாதை சாத்த கதவொன்று கண்டறி வோம். இதிலென்ன குற்றம்?’ என்றார் பெரி யாரியக்க புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். ‘குழந்தை பெற்றுக்கொள்வதைக் குறைத் துக் கொள்வது’ என்பதைத் தாண்டி ‘பெண் கள் குடும்பக் கட்டுகளில் இருந்து விடுதலை அடைய வேண்டுமானால் குழந்தை பெறுவதையே நிறுத்த வேண்டும்’ என்றார் பெரியார். “அய்யய்யோ, பெண்கள் குழந்தை பெறாவிட்டால் மனித சமூகம் விருத்தியடையாதே?” என்ற கேள்விக்குப் பெரியாரின் பதில், “மனித சமூகம் விருத்தி யடையாவிட்டால் என்ன, மற்ற ஜீவராசிகள் விருத்தியடையட்டுமே! பெண்களை ஒடுக்கும் மனித சமூகம் விருத்தி அடைந் தால் என்ன, அடையாவிட்டால் என்ன?’ அவர்தான் பெரியார்!
“பெரியார் வெறுமனே பேச்சளவில் நிற்கவில்லை. இன்றைக்குத் திருமணம் செய்யாமல் தனியாக வாழும் பெண்கள், கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள், சிங்கிள் பேரண்ட், பாலியல் தொழிலாளர்கள் ஆகியோரின் நிலை குறித்தும் உரிமை குறித்தும் பேசுகிறோம். ஆனால், பெரியாரோ 1928இல் செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில், ‘தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விலைமகள் என்று தங்களைக் கருதிக் கொள்வோர் இந்த மாநாட்டில் சிறப்பாகக் கலந்துகொள்ள வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார். தனது வீட்டிலேயே பெண்களுக்கான முறைசாரா அமைப்பு ஒன்றையும் ஏற்படுத்தி, அதில் பெண்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவ தற்கும் வசதி செய்து தந்தார். வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள், அநாதரவான பெண்கள் தங்குவதற்காக ஒரு விடுதியை யும் நடத்தியிருக்கிறார் பெரியார்.
மூன்றாவது தஞ்சை மாவட்ட சுயமரி யாதை மாநாட்டில் 22 வயதான சின்னரா யம்மாள் என்ற பெண்ணின் சார்பாக ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. 50 வயதான ஓர் ஆணுக்கு மூன்றாம் தாரமாக வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்யப் பட்டிருந்தார் சின்னராயம்மாள். குழந்தை வேண்டும் என்று அவரின் கணவர் கட்டாய உறவுகொள்ள முயன்றபோது, சின்னரா யம்மாள் வீட்டைவிட்டு வெளியேறி பெரியார் நடத்திய விடுதியில் குடிபுகுந்தார்.
‘குழந்தை பெறாமலிருப்பது பெண் களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் விடுதலை’ என்ற பெரியார் ‘பிள்ளை பெறு வதாலேயே ஒருவர் அயோக்கியனாகவும் சுயநலவாதியாகவும் மாறுகிறான்’ என்றார். எத்தனையோ லட்சியவாதிகள் தங்கள் அறவாழ்க்கையைத் தொலைத்த இடத்தை அடையாளம் காட்டினார். 'குழந்தை பெற் றால் மட்டுமே வாழ்க்கை முழுமையடை கிறது' என்று சிந்தித்துப்பழகிய தமிழ் மனம் இதை ஏற்பதில் சிரமம்தான். குழந்தை பெற் றுக்கொள்வது என்பதே சமூக நிர்ப்பந்தத் தில் இருந்தே தொடங்குகிறது. ‘வீட்ல விசேஷம் இருக்கா?’ என்ற கேள்வியைத் திருமணமான மூன்றாவது மாதத்தில் இருந்தே சமூகம் கேட்கத் தொடங்கி விடுகிறது. உண்மையில் நாம் குழந்தை களை உருவாக்கவில்லை; சமூகத்தின் கேள்விக்கான பதில்களையே பெற்றுத் தள்ளுகிறோம். முதல் குழந்தை பிறந்து வளர்ந்தபிறகு இரண்டாவது குழந்தைக் கான கேள்வி தொடங்கிவிடுகிறது. ஒரே ஜாதிக்குள் - ஒரே வர்க்க தகுதியில் திரு மணம் செய்வது என்பது எப்படி சமூக நிர்ப்பந்தமோ அதேபோல் குழந்தை பெறுவதும் சமூக நிர்ப்பந்தமாகிவிடுகிறது. இதில் ஆண்களைவிட அதிகம் இழப்பு களைச் சந்திப்பது பெண்கள்தான்.
Sara’s படத்தில் இரண்டு வசனங்கள் முக்கியமானவை. குழந்தை பெறுவதின் சிறப்புகள் பற்றி பிரசங்கிக்கும் தன் மாமி யாரிடம் சாரா கேட்கிறார், “உங்கள் வாழ்க் கையில் இரண்டு குழந்தைகளைப் பெற்று வளர்த்ததைத் தவிர, உங்களை நிரூபிக் கும்படி என்ன செய்தீர்கள்?” மாமியாரிடம் பதில் இல்லை. ‘முதுமைக்காலத்தில் நம் மைப் பாதுகாக்கக் குழந்தைகள் வேண்டும்’ என்ற பொதுப்புத்திக் கூற்றும் எந்தளவுக்கு சாத்தியமற்ற அரை உண்மை என்பதையும் சாரா சொல்கிறார். நாமும் நடைமுறை எதார்த்தத்தைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
“சமூக நிர்ப்பந்தத்துக்காகத் திருமணம் செய்து சமூக நிர்ப்பந்துக்காகக் குழந்தைகள் பெற்று, பிறகு கல்வி, போட்டித்தேர்வுகள், வேலைவாய்ப்புக்கான சந்தை ஆகிய சமூக நிர்ப்பந்தங்களைக் குழந்தைகள்மீது சுமத்திவிடுகிறோம். குழந்தைகள் பெறுவது தனிநபர் விருப்பம் சார்ந்தது. ஆனால் உண் மையில் அது அப்படித்தான் இருக்கிறதா என்ற முக்கியமான கேள்வியை Sara’s எழுப்புகிறது.
இன்னொரு முக்கியமான வசனம், மருத்துவர், சாராவின் கணவர் ஜீவனிடம் எழுப்பும் கேள்வி. “எம்.பி.ஏ படித்திருக்கும் நீங்கள் அதை எதிர்கொள்வதற்காக எத் தனை தயாரிப்புகளை மேற்கொண்டிருக் கிறீர்கள்? ஆனால் Parenthood-க்காக (இதற்குத் தமிழ் வார்த்தை என்ன) என்ன முன்தயாரிப்புகள், பயிற்சிகளை மேற் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்கிறார். உண்மையில் ஒன்று மில்லை. ஏனென்றால் நாம் திருமணம் செய்வதும் குழந்தைகள் பெற்றுக் கொள் வதும் சமூகத்துக்காகத்தான். அதனால் சமூக எதிர்பார்ப்புக்கு ஏற்பதான் குழந்தை களை வளர்க்க ஆரம்பிக்கிறோம். சமூக மாற்றங்களை விரும்புபவர்கள் குழந்தை கள் பெற்றுக்கொள்வதற்கு ஏதாவது அர்த்த மிருக்கிறது என்றால், சமூக மாற்றத்துக்கான அறவியல், அரசியல் மதிப்பீடுகளைத் தங் கள் குழந்தைகளுக்குக் கற்பித்து, ஜாதி யொழிப்பும் பகுத்தறிவும் பாலின சமத்து வமும் கொண்ட மனிதர்களைச் சமூகத்தில் அதிகப்படுத்துவதே. இதற்கான உறுதியை யாவது குழந்தை பெற்றுக்கொண்டவர்கள் ஏற்க வேண்டும்.
பெரியாரைப் பற்றி அதிகம் தெரியாத கேரளாவில் இருந்து ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’, ‘சாரா’ஸ்’ போன்ற திரைப்படங்கள் வெளியாகின்றன. சமையல்கூடங்கள், குழந்தைப்பேறு ஆகியவற்றுக்கும் ஆணா திக்கத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்த கேள்விகளைத் தொடங்கிவைக்கும் இத்தகைய சினிமாக்கள் வரவேற்கத்தக் கவை. ஆனால் நமக்கு வாய்த்த உள்ளூர் பெரியாரிஸ்ட் கமல்ஹாசனோ ‘டைவர்ஸ் செய்வதே தப்பு’ என்று படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் உருவாகும் அரசியல் சினிமாக்களையும் அதன் ஜாதி எதிர்ப்பு அம்சங்களுக்காக ஆதரிக்கி றோமே தவிர, அவையும்கூட இறுதியில் ஆண்மய்ய சினிமாக்களாக இருப்பதையும், மேற்குறிப்பிட்ட மலையாளத் திரைப்படங் களைப்போல் ஆதிக்கம் குறித்த நுண்பார் வைகள் அற்ற சினிமாக்களாக இருப்பதை யும் உணர்ந்தேயிருக்கிறோம்.
பெரியார் இயங்கிய தமிழ்ச்சூழலில் ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’, ‘சாரா’ஸ்’ போன்ற படங்கள் எப்போது உருவாகும்?
No comments:
Post a Comment