'நீட்' தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குபற்றியும் இதில் சமூகநீதியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்து தக்க முடிவுகளை எடுப்ப தற்காக திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (1.7.2021) சென்னை பெரியார் திடலில் கூட்டப்பட்ட கூட்டம் இந்தக் கால கட்டத்தில் மிகவும் முக்கியமானது, தேவையானது என்று அனைத்துக் கட்சிகள் மற்றும் இயக்கங்கள், அமைப்பின் தலைவர்கள், பிரதிநிதிகள் தங்களின் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
அருமையான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எடுத்துக் கூறினர். இரண்டு முக்கிய தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
'நீட்'டுக்கு ஆதரவாக பா.ஜ.க. சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் - சமூகநீதிக் கொள்கை உடைய கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் தங்களை இணைத்துக் கொள்வது
(Implead) என்று ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
பா.ஜ.க.வைத் தவிர - தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் நீட்டுக்கு எதிரான பிரச்சினையில் ஒரு மனதாக எழுந்து நிற்கின்றன என்ற உண்மை டில்லி வரை எட்டியிருக்கும் என்பதில் அய்யமில்லை.
இது பெரியார் மண்ணா என்று கேட்பவர்களுக்கு இது ஒரு சரியான பதிலாக இருக்கும்.
பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த காலம் தொட்டு சமூக நீதியின் கண்களைக் கருவேல் முள் கொண்டு குத்தும் வேலையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
காரணம் பா.ஜ.க என்றாலே பார்ப்பன ஜனதா என்பது தான். ஆர்.எஸ்.எஸின் கொள்கை இடஒதுக்கீடுக்கு எதிரானது என்பது வெளிப்படை. அதன் அரசியல் வடிவமான பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதே, இடஒதுக்கீட்டின் ஆணிவேரை வெட்டித் தள்ளி விடவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக அதிதீவிரத் தன்மையுடன் இருந்து வருகிறது என்பதற்கு கடந்த காலத்தில் அதன் செயல்பாடுகளே சாட்சியங்களாகும்.
'நீட்' செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு - பெரும்பான்மை தீர்ப்பில் திட்டவட்டமாக தெளிவுபடுத்திவிட்ட நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, அந்தத் தீர்ப்பின்மீது மறு சீராய்வு மனு தாக்கல் செய்து- தனக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்று விட்டது.
நீட்டிலிருந்து விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவும் மறுத்து விட்டது.
குதிரை கீழே தள்ளியதோடு அல்லாமல் குழியையும் பறித்த கதையாக இடஒதுக்கீட்டின் அளவுகோலான - சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட நிலைக்கு மாறாக பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் என்ற ஒன்றை அரசமைப்புச் சட்டத் துக்கும், நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் விரோதமாக அவசர அவசரமாக 10 விழுக்காடு ஒதுக்கீடு என்ற சட்டம் செய்து உயர் ஜாதியினருக்கு - குறிப்பாகப் பார்ப் பனர்களுக்குக் கிடைத்திட ஏற்பாடு செய்யப் பட்டது.
இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே அது குறித்தெல்லாம் சற்றும் பொருட் படுத்தாமல், அதிகார ஆணவத்தின் உச்சியில் அமர்ந்து, மனுதர்மப் பார்ப்பனப் புத்தியோடு - ஏற்கெனவே மிகப் பெரிய அளவில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் தங்கள் எண்ணிக்கையின் விழுக்காட்டுக்கு மேல் பல மடங்கு அனுபவித்துக் கொழுத்துக் கிடக்கும் கூட்டத்தின் வயிற்றில் அறுத்துக்கட்டும் வேலையைச் செய்துவிட்டது.
மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்தியதற்காக சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்தவர்களும் இவர்களே என்பதும் நினைவில் இருக்கட்டும்!
மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அறவே கிடையாது என்றும் முடிவு எடுத்து அறிவித்தும் விட்டது. உச்சநீதிமன்றத்திலும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான தன் நிலைப்பாட்டை ஒன்றிய அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்து விட்டது.
ஒன்றிய பா.ஜ.க. அரசு என்றால் பார்ப்பன ஜனதா - சமூகநீதிக்கு எதிரானது என்பதற்கு - இதற்கு மேல் காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை.
அதே நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. நீட்டுக்கு ஆதரவான வகையில் வழக்கொன்றைத் தாக்கல் செய் திருக்கிறது.
பா.ஜ.க.வின் சமூகநீதிக்கு எதிரான நிலைப்பாட்டை நாட்டு மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது என்று நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை - ஓர் இயக்கமாக எழுந்து நின்று செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் பா.ஜ.க. சங்பரிவார் கூட்டத்துக்குக் கொஞ்ச நஞ்சம் இருக்கும் ஆதரவு தூசுகளும் பறக்கடிக்கப்படும்.
No comments:
Post a Comment